வாடகை வீடா… சொந்த வீடா… எது பெஸ்ட்? – ஒரு லாபக் கணக்கீடு!

நான் வசிப்பது சென்னையின் முக்கியமான பகுதியில்; இரண்டு படுக்கை அறைகொண்ட ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில். அந்த வீட்டின் வாடகை ரூ.15,000. அதை ஐந்தாண்டுகளுக்கு முன்னர், ரூ.60 லட்சத்துக்கு என் ஹவுஸ் ஓனர் வாங்கியிருந்தார். அதற்காக அவர் ரூ.45,000 ரூபாய் வரை வீட்டுக் கடனுக்கான இ.எம்.ஐ

செலுத்திவருகிறார். மாதம் ரூ.45,000 செலுத்தப்படும் வீட்டில் நான் 15,000 ரூபாய் வாடகைக்கு இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை `கடைசி வரை வாடகை வீட்டில் இருப்பதே சிறந்தது’ என நினைக்கிறேன்’’ என்று தனது கருத்தைத் தெளிவாக முன்வைத்தார் அந்த நண்பர்.

வாடகை வீடா… சொந்த வீடா… எது பெஸ்ட்? – ஒரு லாபக் கணக்கீடு!
மேலோட்டமாகப் பார்த்தால், அவர் சொன்ன காரணத்தில் கொஞ்சம் நியாயம் இருப்பதுபோல் தெரியும். கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், வேறு சில விஷயங்கள் புரியும். அந்த விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

வாடகையும் வரியும் சேர்ந்தால்…!

முதலில், நண்பரின் வீட்டு உரிமையாளர் அவர் குடியிருப்பதற்காக வீடு வாங்காமல் முதலீட்டுக்காக வாங்கியிருக்கிறார். வெறும் முதலீடு என்பதற்காக மட்டும் வாங்காமல், குடியிருப்பதற்கு என்ற தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக வாங்கியிருந்தால், அது மிகச் சரியான முடிவாக இருந்திருக்கும். அது எப்படி?

வீடு
ஒரு வீட்டைக் குடியிருப்பதற்காக வாங்கும்பட்சத்தில் செலுத்த வேண்டிய வாடகை ரூ.15,000 மிச்சம். அடுத்தது ரூ.45,000 அளவுக்கு இ.எம்.ஐ செலுத்த வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 20% வருமான வரி வரம்புக்குள் இருப்பார். ஆக, 45,000 ரூபாய்க்கு 20% வரி என்றால், 9,000 ரூபாய் வருமான வரி மீதமாகும்.

அதாவது, வீட்டுக்காக இந்த 45,000 ரூபாயை இ.எம்.ஐ-ஆகச் செலுத்தாவிட்டால், 9,000 ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்த வேண்டும். இந்த வரிச் சலுகை வீட்டுக் கடனுக்கு மட்டுமே பெற முடியும். அதனால், 24,000 ரூபாய் (ரூ.15,000 வாடகை மற்றும் ரூ.9,000 வரிச் சலுகை) என்பது உடனடியாக மீதமாகும் தொகை. மீதமுள்ள 21,000 ரூபாய்தான் வீட்டுக் கடனுக்காக உண்மையாகச் செலுத்த வேண்டிய தொகை.

`இந்த 21,000 ரூபாயை வீட்டுக்காக அல்லாமல் வேறு முதலீடுகளில் முதலீடு செய்திருந்தால் பல மடங்கு வருவாய் கிடைத்திருக்கும்’ என்னும் விவாதம் எழும். வீடு என்பது அத்தியாவசியமானது. அதனால் வீட்டுக் கடனைச் செலுத்துவது கட்டாயமாகிப் போகிறது. ஆனால், அப்படி எந்தக் கட்டாயமும் இல்லாதவர்கள் அந்தத் தொகையை மாதம் தவறாமல் முதலீடு செய்கிறார்களா என்றால், மிகக் குறைவானவர்களே முதலீடு செய்கிறார்கள். பலரும் அப்படிச் செய்யாத நிலையில், கடைசியில் வீடும் இல்லாமல், முதலீடும் இல்லாமல் ஆடம்பரச் செலவுகளிலேயே அந்தத் தொகையை வீணாக்கிவிடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் தர வேண்டிய வாடகை, மீதமாகும் வரிப்பணம் ஆகியவற்றுடன் கூடுதலாகக் கொஞ்சம் பணத்தைச் செலுத்தும்போது சொந்த வீடு என்பது நிச்சயமாகிவிடும்.

பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்!

நண்பர் தற்போது 15,000 ரூபாய் வாடகை செலுத்திவருகிறார். இதே தொகையைத்தான் கடைசி வரை அவர் செலுத்தப்போகிறாரா என்றால், இல்லை. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் 5% அளவுக்காவது வாடகை உயரும். அப்படியானால் தற்போது 15,000 ரூபாய் என இருக்கும் வாடகை அடுத்த பத்தாண்டுகளில் 25,000 ரூபாயாக உயரும்.

அதாவது, தற்போது உண்மையாகச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை 21,000 ரூபாய். வாடகை உயர்ந்து வரும் நிலையில், ஒவ்வோர் ஆண்டும் இந்தத் தொகை குறைந்துகொண்டே இருக்கும்.

பணவீக்கம் வீட்டு வாடகையில் எதிரொலிப்பதுபோல, நம் வீட்டின் மதிப்பிலும் உயரும். வீடு வாங்கும்போது செலவு செய்த தொகை ரூ.60 லட்சம். ஒவ்வோர் ஆண்டும் சில சதவிகித அளவுக்குச் சொத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். ஏழு முதல் எட்டு ஆண்டுகள் அளவில் வீட்டின் மதிப்பு மிகவும் உயர வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி தங்கத்திலோ, பங்குச் சந்தையிலோ முதலீடு செய்ய முடியாது. ஆனால், 60 லட்ச ரூபாய் சொத்தை மிகக் குறைந்த தொகையைக் கொடுத்து நமதாக்கிக்கொள்ள முடியும். இந்த 60 லட்ச ரூபாய் மதிப்பும் தொடர்ந்து உயரும் என்பது ரியல் எஸ்டேட் முதலீட்டில் இருக்கும் தனிச் சிறப்பு.

கட்டாயச் சேமிப்பு..!

ஒருவேளை, ‘நான் வாடகை வீட்டிலேயே இருந்துகொள்கிறேன். முடிந்தவரை மீதமிருக்கும் 21,000 ரூபாயைச் சேமிக்கிறேன்’ என்று ஒருவர் சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். தற்போது வட்டி விகிதம் குறைந்துவருகிறது. எதிர்காலத்திலும் வட்டி விகிதம் குறைந்துகொண்டே இருக்கும். இருந்தாலும் 8% கூட்டுவட்டி எனக் கணக்கிட்டால் மாதம் ரூ21,000 எனச் செய்யப்படும் முதலீடு 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் ரூ.55 லட்சமாக இருக்கும். ஆனால், தொடர்ச்சியாகச் சேமிக்க முடிய வேண்டும். அப்படிச் சேமித்தால்கூட சந்தை ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டே வருமானம் கிடைக்கும்.
தற்போது நீங்கள் செலுத்தும் வாடகை என்பது நிலையானதல்ல; உயரக்கூடியது. ஆனால், நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ தொகை நிலையானது. வட்டி விகிதம் குறையும்பட்சத்தில் நீங்கள் மொத்தமாகச் செலுத்தக்கூடிய தவணைகளின் எண்ணிக்கை குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அடுத்து வாடகை வரிச் சலுகை போக மீதமிருக்கும் தொகையைச் சேமித்தால் கிடைக்கக்கூடிய தொகையைவிட வீட்டின் மதிப்பு உயர்ந்திருக்கும். வாடகை வீட்டைவிட, சொந்த வீடு லாபகரமானது. அதைவிட முதலில் வீடு என்பது அத்தியாவசியமானது. அதனால்தான் பிரதான் மந்திரி ஆவாஸ் திட்டத்தின் கீழ் 2.67 லட்ச ரூபாய் வரை வட்டிச் சலுகை வழங்கப்படுகிறது.

தவிர்க்க வேண்டிய தவறுகள்!

பல்வேறு காரணங்களுக்காகச் சொந்த வீடு வாங்குவது லாபகரமானது என்றாலும், முதலீட்டாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகள் காரணமாகக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. உதாரணமாக, வீட்டின் உள் அலங்காரத்துக்கு நிறைய செலவு செய்யக் கடன் வாங்குகிறார்கள். வீட்டின் உள் அலங்காரத்துக்கு வீட்டின் மதிப்பில் சுமார் 5%-6% வரை செலவு செய்தாலே போதுமானது. ஆனால், நாம் வாழும் வீடு என்பதற்காக 10 சதவிகிதத்துக்கு மேல் செலவு செய்யும்போது கடன் தொகை அதிகரித்துவிடுகிறது. 2 கோடி ரூபாய் வீட்டுக்கு 30 லட்ச ரூபாய் வரை உள் அலங்காரத்துக்காகச் செலவு செய்வது அவசியமல்ல; ஆடம்பரம். இதேபோலத்தான் கிரகப்பிரவேசத்துக்குச் செய்யும் செலவும். அது அளவுடன் இருந்தால், பின்னாள்களில் நாம் நினைத்து நினைத்து மகிழ்ச்சியடையலாமே தவிர, வருத்தப்பட வேண்டிய தேவை இருக்காது.

சொந்த வீடு மறைமுகமாக நம் சேமிப்பை உயர்த்துகிறது. விலை மதிப்பில்லாத நிம்மதியை ஒவ்வொருவருக்கும் தருகிறது. நமது காலத்தைத் தாண்டி நம் குழந்தைகளுக்கு ஒரு சொத்தாக மாறி, அவர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ளப்போகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நீண்டகாலத்தில் அது நிறைய லாபமும் தரும்!

%d bloggers like this: