பாஸிடிவ் என்றாலே பரவும் என்பதில்லை!

வைரஸ் கிருமி பலவிதங்களிலும் பரவு வதற்கு வாய்ப்பு உள்ளது. சமீபத்திய ஆய்வில், மலத்தில் இந்த வைரஸ் கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.சீனாவின் ஹாங்காங் நகரில் மலம் கலந்த கழிவு நீர் வழியே இந்த வைரஸ் பரவியது தெரிந்த விஷயம். அதேபோல மருத்துவமனையில் இருந்தும் தொற்று பரவுவதாக கூறப்படுகிறது.

பரவல்
இவை எல்லாவற்றையும் விட, நோய் தொற்று பாதித்த ஒருவரிடம் இருந்து, சளி, எச்சில் வழியே பரவுவது அதிகம். இதை கட்டுப்படுத்துவது சவாலான விஷயமாக உள்ளது. அதனால் மற்ற வழிகளில் வைரஸ் பரவுவதை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
உலகில் பல நாடுகளில், கழிவு நீரில் எந்த அளவு கொரோனா வைரஸ் உள்ளது என்று ஆய்வு செய்ய உள்ளனர். இதை வைத்து, குறிப்பிட்ட நகரத்தில் வைரஸ் தாக்கம் எந்த அளவு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடிவதாக கூறுகின்றனர்.
வைரஸ் பாதித்த ஒருவர் தொடும் இடங்களில் வைரஸ் இருக்க வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும் வைரஸ் அனைத்தும் மற்றவர்களுக்கு பரவி விடும் என்று சொல்வதும் சரியில்லை. வைரஸ் பாதித்த ஒருவரிடம் இருந்து, அவரை சுற்றியுள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஒரு சிலருக்கே தொற்று ஏற்படுகிறது.
அதனால் குறைந்த அளவில் வைரஸ் இருந்தாலே அனைவருக்கும் வந்து விடும் என்று சொல்வதும் சரியில்லை. தற்போது நாம் செய்யும், பி.சி.ஆர்., பரிசோதனையில், சளி மாதிரியில் ஒரே ஒரு வைரஸ் துகள் இருந்தாலும் தெரிந்து விடும்.
பாஸிடிவ்/நெகடிவ்
தென் கொரியாவில், வைரஸ் பாதித்த நபர், சிகிச்சையில் இருக்கும் போது, எத்தனை முறை பரிசோதனை செய்தாலும் பாஸிடிவ் என்று வந்தது. அதனால் தான் நம் நாட்டிலும், சிகிச்சை பெறும் நபருக்கு தொடர்ந்து இரண்டு முறை நெகடிவ் என்று வந்தால் மட்டுமே, டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என்று ஆரம்பத்தில் பரிந்துரைத்தோம். இது பெரிய பிரச்னையாக இருந்தது. காரணம் தொடர்ந்து, 50 நாட்கள் கூட, பாஸிடிவ், நெகடிவ் என்று மாறி மாறி வந்தது.
ஆர்.என்.ஏ.,
இது போன்ற நிலை கொரியாவில் இருந்த போது, மாதிரிகளில் இருந்து எடுத்த வைரசை, பரிசோதனை கூடத்தில் வளர வைக்க முயற்சி செய்தனர்; வளரவே இல்லை.பாதித்த நபர்களை சுற்றி இருந்தவர்களுக்கு தொற்று போய் சேர்கிறதா என்றால், அதுவும் இல்லை.
பி.சி.ஆர்., பரிசோதனையில், வைரஸின் ஆர்.என்.ஏ., தெரிகிறதே தவிர, மற்றபடி வைரஸ் உயிருடன் இல்லை என்று தெரிந்தது. இதனால், பாஸிடிவ் என்று முடிவு வந்தாலே, அவரிடம் இருந்து மற்றவருக்கு பரவியே ஆகும் என்பது இல்லை. மனிதர்களுக்கு டி.என்.ஏ., என்ற மரபணு போன்று வைரசிற்கு, ஆர்.என்.ஏ., இருப்பது பரிசோதனையில் தெரிந்தாலே, வைரஸ் உயிருடன் உள்ளது என்று சொல்ல முடியாது. வைரஸ் இறந்த பின்னும், ஆர்.என்.ஏ.,வை கண்டுபிடிப்பது, சில நாட்களுக்கு சுலபம்.
வெளிப்புறத்தில் உள்ள பொருட்களில், பி.சி.ஆர்., பரிசோதனை செய்ததில், நான்கு நாட்கள், கொரோனா வைரஸ், அதே இடத்தில் இருந்ததை பார்க்க முடிந்தது என்று சொல்கின்றனர். ஆர்.என்.ஏ., அழியாமல் அப்படியே இருந்தது என்பதை வைத்து, அந்த வைரசால் தாக்கம் ஏற்படுமா என்று உறுதியாக சொல்ல முடியாது.
எல்லா இடத்திலும் வைரஸ் அப்படியே இருக்கும் என்றால் நிலைமை இதை விடவும் மோசமாக போயிருக்கும். கட்டுக்குள் கொண்டு வரவே முடியாது. ஒருவர் வைரஸ் தொடரிலிருந்து குணம் அடைந்த பின்பு கூட, அவரின் மாதிரியில், ஆர்.என்.ஏ., தென்படலாம். பொது இடங்களில் வைரஸ் இறந்த பின்பும், அதன், ஆர். என்.ஏ., இருக்கும்; அலட்சியம் வேண்டாம்.பல நாட்கள் ஒரே இடத்தில் இருக்கும் வைரஸ் உயிர்ப்புடன் இருக்காது என்பதால், மருத்துவமனைகள், கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இருந்து தொற்று பரவாது என்று தவறாக நினைக்க வேண்டாம். இதில் புரிந்து கொள்ள வேண்டியது, ஆர்.என்.ஏ., தெரிகிறது என்பதை வைத்து, வைரஸ் உயிர்ப்புடன் இருக்கிறது என்று சொல்ல முடியாது என்பது தான்.
பரிசோதனை கூடத்தில் வைத்து, வளர்கிறதா என்று பார்த்தால் மட்டுமே உறுதியாக சொல்ல முடியும். தொற்று பாதித்து சிகிச்சையில் இருப்பவரிடம், வைரஸ் அளவுக்கு அதிகம் இருந்தால், நிச்சயம் பரவும் வாய்ப்பும் அதிகம்.
வலிமை இல்லை
சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த கொரோனா வைரஸ், சக்தி வாய்ந்த வைரஸ் இல்லை. சாதாரணமாக சோப்பு பயன்படுத்தி கழுவினால் அழிந்து விடும்.
கைகளை முகத்திற்கு கொண்டு போகாத வரை பிரச்னை இல்லை. முக கவசம் அணிவது, வைரஸ் பரவலை தடுப்பது மட்டுமல்ல, நம் கைகளை வாய், மூக்கை தொடுவதை தவிர்க்கவும் உதவும், டி.என்.ஏ., – என்.ஏ., நம் மரபணுவான, டி.என்.ஏ., தன்னை தானே பழுது பார்க்கும் திறன் கொண்டது. இந்த திறன் குறையும் போது, கேன்சர் உட்பட பல நோய்கள் வருகின்றன.
வைரசில் உள்ள, ஆர்.என்.ஏ.,வில் இந்த பழுது பார்க்கும் வசதி இல்லை. அதனால் தான் அதன் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. புகைச்சலை உண்டு பண்ணும் வைரசில், இந்த தன்மை முற்றிலும் கிடையாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாகிறது.
தடுப்பு மருந்து, புதிய வைரசிற்கு தகுந்தாற்போல உருவாக்க வேண்டியுள்ளது. வைரசின் மரபணு மாற்றம் நடப்பது இயல்பான விஷயம். இதனால் நிரந்தரமான தடுப்பூசி தயாரிக்க முடியாது என்பதை தவிர, வேறு பிரச்சனை இல்லை.
நெகடிவ்
பி.சி.ஆர்., பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தால், நோய் கிருமி இல்லை என்றும் உறுதியாக சொல்ல முடியாது. அதேபோல உலகம் முழுதும் தொற்று தொடர்பான மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, நோய் தொற்று வந்தவர்களை விட, அறிகுறிகள் இல்லாமல் தொற்று வந்து, தானாகவே குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, 10 மடங்கு அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
இவர்கள் மூலம் நோய் பரவுவது, அறிகுறிகளுடன் இருப்பவர்களிடம் இருந்து பரவும் அதே அளவிற்கு பரவும் அபாயம் உள்ளது.மற்ற வைரஸ் தொற்றில், இருமல், சளி இருந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு பரவும். ஆனால் கொரோனா அப்படியில்லை. அறிகுறிகள் இல்லாதவர்களிடம் இருந்தும் பரவும்.அதனால் தான், அனைவரும் முக கவசம் அணிய வேண்டியது அவசியம்.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமிநாதன்,
தொற்று நோய் சிறப்பு மருத்துவர்,
குளோபல் ஹெல்த் சிட்டி,
சென்னை
87545 04055

%d bloggers like this: