மோடியிடம் அமைதி காத்த ஸ்டாலின்…

‘‘தி.மு.க தலைவர் ஸ்டாலின் அமைதியாகக் கூட்டத்தில் காணப்பட்டார். மோடிக்கும் துணை நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். அரசியலில் எதுவும் சகஜமப்பா…’’ – லெமன் டீயை உறிஞ்சியபடியே ஹேங்அவுட்ஸில் காட்சி கொடுத்தார் கழுகார்.

‘‘எதற்கு வம்பு என ஒதுங்குகிறாரோ?’’ என்று கண்சிமிட்டினோம். புன்முறுவல் பூத்தபடியே செய்திக்குள் தாவினார் கழுகார்.

“சீனப் பிரச்னை தொடர்பாகப் பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம், தமிழகத்தில் தி.மு.க – காங்கிரஸ் இடையே பனிப்போரை உருவாக்கிவிட்டது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘சீனப்படை எப்போது இந்திய எல்லைக்குள் வந்தது, எப்போது தாக்குதல் நடந்தது?’ எனக் கேள்விகளால் மோடியைத் துளைத்திருக்கிறார். ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் அமைதியாக இருந்ததுடன், ‘நாட்டின் இறையாண்மையைக் காக்கப் பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தி.மு.க துணை நிற்கும்’ என்று வழிமொழிந்துள்ளார். இதை காங்கிரஸ் மேலிடம் ரசிக்கவில்லை. தவிர, வழக்கமாக ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ஸ்டாலின் இந்த முறை வாழ்த்தவில்லை. உதயநிதி மட்டும் ட்விட்டரில் வாழ்த்தினார். இந்தப் பொருமலும் சத்தியமூர்த்தி பவனில் ஒலிக்கிறது.’’

“காங்கிரஸைக் கழற்றிவிடப் பார்க்கிறதா தி.மு.க?’’

‘‘அந்தச் சந்தேகம் காங்கிரஸ் கட்சிக்கும் வந்துவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் முக்கியத்துவம் தராதது, ‘காங்கிரஸுக்குக் கொடுத்த இடங்களில் நாம் போட்டியிட்டிருந்தால், இந்நேரம் நாம் ஆட்சியில் இருந்திருப்போம்’ என ஸ்டாலினிடமே சில மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி தூக்கியது எனக் கடந்தகால நிகழ்வுகள் எல்லாமே கதர் வேட்டிகளுக்குக் கசப்பு ரகம். இந்த முறை தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட வேண்டும். இல்லையென்றால் அவர்களாகக் கெஞ்சி, கூட்டணியில் நீடிக்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பது தி.மு.க தலைமையின் எண்ணமாக இருக்கிறதாம்.’’

‘‘காங்கிரஸ் மனநிலை என்னவாம்?’’

‘‘ `தி.மு.க இப்படியொரு கணக்கைப்போடும்’ என்று ப.சிதம்பரம் முன்பே கணித்தாராம்.

ரஜினி

ரஜினி

‘தி.மு.க தங்களுடன் இல்லையென்றால் ரஜினியைக் கொண்டுவரலாம்’ என்று ஆரம்பத்தில் நினைத்தார் ப.சிதம்பரம். ஆனால், ரஜினியின் முடிவில் தெளிவில்லாமல் இருப்பதால் கமலுக்குத் தூதுவிட முடிவெடுத்துள்ளாராம். இன்னொரு பக்கம் விஜய் தரப்பிலிருந்து காங்கிரஸ் பக்கம் சற்றே நெருங்குகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தபோது, அவரின் ரசிகர் மன்றத்தினர் நடத்திய கருத்து கணிப்பு குறித்தே அதிகாரிகள் அதிகம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது, ‘அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்தால், இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்’ என்கிற தொனியில் அந்தப் பேச்சு இருந்ததாம். இதனால், பா.ஜ.கமீது விஜய் தரப்பில் கடுப்பில் இருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விஜய்க்கும் குறிவைத்துள்ளது காங்கிரஸ்.’’

‘‘பா.ஜ.க என்ன ஐடியாவில் இருக்கிறது?’’

“அந்தக் கட்சியைப் பொறுத்தவரை தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸை வெளியேற்றி விட்டால் போதும் என்கிற மனநிலையில் இருக்கிறார்களாம். ‘நீலகிரி மாவட்டத்துக்கு மருத்துவக் கல்லூரி வேண்டும்’ என ஆ.ராசா கோரிக்கை விடுத்தவுடன், மத்திய அரசு சம்மதித்ததுகூட இதற்காகத்தானாம். `மத்தியில் பா.ஜ.க இன்னும் நான்கு ஆண்டுகள் பதவியில் இருக்கப்போகிறது. எதற்காகத் தேவையில்லாமல் அந்தக் கட்சியைப் பகைத்துக்கொள்ள வேண்டும்’ என்று தி.மு.க தரப்பிலும் நினைக்கிறார்களாம்.’’

‘‘ஓஹோ…’’

‘‘சமீபத்தில் தி.மு.க வாரிசு பிரமுகரை தொடர்புகொண்ட டெல்லி பா.ஜ.க பிரமுகர் ஒருவர், ‘நீங்கள் எங்கள் பக்கம் வருவதிலோ, வராமல் இருப்பதிலோ எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியோடு கைகோத்துப் பயணித்தால் எதிர்காலத்தில் சிக்கல் வர வாய்ப்புள்ளது’ என்று சொல்லியிருக்கிறார். இந்தத் தகவல் ஸ்டாலின் காதுகளுக்குச் சென்ற பின்னர்தான் சீனா விவகாரத்தில் தன் பேச்சை அனுசரணையாக அமைத்துக்கொண்டாராம்.’’

ஸ்டாலின்

ஸ்டாலின்

“ஸ்டாலின் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளாராமே?” என்றோம். ஆமோதித்த கழுகார் வெங்காய பக்கோடாவைக் கொறித்தபடியே தொடர்ந்தார்.

‘‘ஆண்டுதோறும் சிகிச்சைக்காக லண்டன் செல்வது ஸ்டாலினின் வழக்கம். இந்த ஆண்டு திட்டத்தை கொரோனா சிதைத்துவிட்டது. எப்படியும் சென்றுவிட வேண்டும் என்று ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் வலியுறுத்து கின்றனர். மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானம் மூலம் லண்டன் செல்லவும் திட்டமிடப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் தி.மு.க தரப்பு அனுமதிக்காக அணுகியதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், ஸ்டாலின் தரப்பில் இதை முற்றிலுமாக மறுக்கிறார்கள்.’’

‘‘ஓ…’’

‘‘இந்த நேரத்தில் தனி விமானத்தில் பயணித்தால் மக்களிடம் தேவையில்லாத வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடும் என்பதால், சிகிச்சைக்கான மாற்றுவழியை ஸ்டாலின் தரப்பு யோசிப்பதாகக் கூறுகிறார்கள். அத்துடன், கட்சிப் பொதுக்குழுவையும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரமாண்டமாக நடத்திக்கொள்ளலாம் என ஸ்டாலின் கருதுகிறாராம்’’ என்ற கழுகார், ‘‘மஞ்சள் மாவட்ட சர்ச்சை ஒன்று கூறுகிறேன், கேளும்’’ என்று தண்ணீரைப் பருகியபடி தொடர்ந்தார்.

‘‘மஞ்சள் மாவட்டத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேட்டின் ஏஜென்ட் கம் நிருபராக இருப்பவர் அவர். கட்சியின் தலைமையிடம் தனக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாக உடன்பிறப்புகளை ஆட்டுவிக்கிறாராம். சமீபத்தில் இவர்மீது ஆறு பக்கம் கொண்ட பெரும் புகார் மனு ஒன்று அறிவாலயத்துக்குச் சென்றிருக்கிறது. கட்சிக்குள்ளே கோஷ்டி மோதல்களை உருவாக்குவது, தனக்கு வேண்டாத வர்களைப் பற்றி பத்திரிகைகளில் பொய்ச் செய்தி வரவழைப்பது, உள்கட்சி விஷயங்கள், பதவி நியமனங்களில் தலையிடுவது என நீள்கிறது அந்தப் புகார் மனு. குறிப்பாக, கட்சியின் பெண் நிர்வாகிகள் சிலரிடம் பாலியல்ரீதியாகச் சீண்டினார் எனவும் `பகீர்’ கிளப்பப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் கொரோனா நிதி வசூல் செய்து ஏப்பம் விட்டதாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.’’

“இப்படியெல்லாமா நடக்கிறது?”

“கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி அந்தப் பகுதி மக்கள் மீண்டும் வீட்டுக்கு முன் கோலமிடும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை எம்.பி-யுமான வைத்திலிங்கம் முட்டுக்கட்டை போடுவதாக அமைச்சர் துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கூறிவருகிறார்களாம். தன் சொந்தத் தொகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுக்காக்களை இணைத்து பட்டுக்கோட்டையைத் தலைமையிட மாகக்கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கும் முயற்சியில் வைத்திலிங்கம் இருப்பதாகவும் கும்பகோணம் மக்களிடையே தகவலைப் பரப்பி வருகின்றனர். விஷயம் அறிந்து வைத்திலிங்கம் கொதித்துப்போயுள்ளார். இந்த விவகாரத்தால் துரைக்கண்ணுவுக்கும் வைத்திலிங்கத்துக்கும் பனிப்போர் மூண்டுள்ளதாம்.’’

‘‘சரிதான்… ரஜினி எப்படி இருக்கிறார்?’’

‘‘கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வில் இருக்கிறார். ரஜினியை சமீபத்தில் ‘அண்ணாத்த’ பட இயக்குநர் சிவா சந்திக்க நேரம் கேட்டுள்ளார். ‘கொரோனா பிரச்னை முடியும் வரை யாரையும் சந்திப்பதில்லை’ என ரஜினி தரப்பில் மறுத்துவிட்டார்களாம். குடும்பத்தின் அன்புச் சிறையில் இருக்கிறார் ரஜினி.’’

‘‘பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் புதிய அப்டேட் உள்ளதா?’’

‘‘ஆமாம். சபாநாயகருக்கு எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் ‘பன்னீர்செல்வம் அணியினருக்கு அ.தி.மு.க கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், கூவத்தூரில் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டபோது, ‘பன்னீர் அணியிலுள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு கடிதம் அனுப்புவோம். அவர்கள் இல்லையென்றாலும், அவர்கள் வீட்டு வாசலில் ஒட்டிவிடலாம்’ என்று கொறடா ராஜேந்திரன் கூறினாராம். அதன்படி பன்னீர் அணியினர் வீட்டு வாசலில் கொறடா உத்தரவு கடிதம் ஒட்டப்பட்டதாம். இப்போது அதை வகையாக எடப்பாடி மறைத்துவிட்டார் என்கிறார்கள்.’’

‘‘அப்படியா?’’

‘‘அதுமட்டுமல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தனி அணியாகவே பன்னீர் அணியினர் செயல்பட்டதாக ஒரு கருத்து எடப்பாடி தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. அப்படி எந்த அணியும் 2017, பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இல்லையாம். நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து ஓரிரு மாதங்கள் கழித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் பன்னீர் அணியிலிருந்த செம்மலை, அ.தி.மு.க-வின் தனி அணியாகத் தேர்தல் ஆணையத்தில் தங்கள் மனுவைத் தாக்கல் செய்தார். இப்போது இருவரும் ஒன்றாகிவிட்டதால், இந்தக் கதையை மறைத்துவிட்டனராம். இது குறித்து விரிவான மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விரைவில் தாக்கலாகும் என்கிறார்கள்’’ என்றபடி ஹேங்அவுட்ஸை ‘ஆஃப்’ செய்தார் கழுகார்.

%d bloggers like this: