சீன ஆப்களுக்கு தடை ஏன்? – வர்த்தக யுத்தம் ஆரம்பமா..?

சீனப் பொருள்களுக்குத் தடை..?

ஆனால், உடனடியாக சீனாவைப் புறக்கணிப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. காரணம், ஸ்மார்ட்போன் மற்றும் பிற எலெக்ட்ரானிக் பொருள்கள் சந்தைகளில் தனிப்பெரும் ஆதிக்கத்தைச் செலுத்திவருகின்றன சீன நிறுவனங்கள். இவையல்லாமல், மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள், சூரிய மின்சக்தி உபகரணங்கள் எனப் பலவற்றையும் பெருமளவில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

மேலும், சீனாவுடனான இறக்குமதி ஏற்றுமதி வித்தியாசம் (Trade Deficit) என்பது மிகவும் அதிகமாகவே இருக்கிறது. 2019-2020 (ஏப்ரல்-பிப்ரவரி) காலத்தில் நாம் சீனாவுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களின் மதிப்பு ரூ.1.09 லட்சம் கோடி. அதே நேரத்தில், அங்கிருந்து இறக்குமதி செய்த பொருள்களின் மதிப்பு ரூ.4.4 லட்சம் கோடி. இறக்குமதி ஏற்றுமதி வித்தியாசம் சுமார் ரூ.3.3 லட்சம் கோடியாக இருக்கிறது. இதன் மூலம் நாம் சீனாவைச் சார்ந்திருக்கும் அளவுக்கு, சீனா நம்மைச் சார்ந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஆனால், நம்மால் உடனடியாகப் புறக்கணிக்கக்கூடிய ஒன்று உண்டு எனில், அது சீனாவின் இன்டர்நெட் ஆப்ஸ்தான். `டிக் டாக்’, `ஹலோ’ எனப் பல முக்கிய சீன ஆப்கள் இந்தியாவில் அதிக அளவில் பயனர்களைக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கின்றன. `இவை எதுவும் அத்தியாவசியச் சேவைகள் இல்லை. இவற்றைப் புறக்கணிப்பதால் நமக்கு எந்த இழப்பும் இல்லை’ என்ற வாதம் பலராலும் முன்வைக்கப்பட்டது.

சீன ஆப்களுக்கு அதிரடித் தடை!

இப்படியான சூழலில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி, 59 சீன ஆப்களைத் தடை செய்வதாக அறிவித்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69A பிரிவின்படி தரப்பட்டிருக்கும் அதிகாரத்தின்கீழ் அவசரகால அடிப்படையில், தொடர்ந்து இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், இந்த 59 ஆப்கள் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்தது. 130 கோடி இந்தியர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த ஆப்கள் தொடர்ந்து பயனர் தகவல்களை இந்தியாவுக்கு வெளியில் இருக்கும் சர்வர்களுக்கு அனுப்பி வருகின்றன என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் `டிக் டாக்’, `ஹலோ’, `UC பிரவுசர்’, `ஷேர்இட்’ எனப் பல முன்னணி ஆப்கள் இடம்பெற்றிருந்தன.

சீனா ஆப் தடை

இந்தியாவின் மொத்த 45 கோடி இணையப் பயன்பாட்டாளர்களில் 30 கோடிப் பேர் குறைந்தபட்சம் ஒரு சீன ஆப்பையாவது பயன்படுத்துகின்றனர். அதிக `Monthly Active Users’ கொண்ட ஆப்களாகவும் இந்த ஆப்கள் உள்ளன. சராசரியாக ஒரு மாதத்தில் சுமார் 20 கோடி இந்தியர்கள் `ஷேர்இட்’ ஆப்பைப் பயன்படுத்துகின்றனர். அடுத்ததாக, `UC பிரவுசர்’ இருக்கிறது. இதைச் சராசரியாக சுமார் 13 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். `டிக் டாக்’ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 12 கோடி.

இந்தியா – தவிர்க்க முடியாத சந்தை..!

குறைந்த விலையில் இணையத்தைப் பட்டிதொட்டி எங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது ஜியோ. இதனால் உலக அளவில் மிக முக்கியமான இணையச் சந்தையாக இருக்கிறது இந்தியா. தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. இதனால் இத்தனை பெரிய சந்தையை விட்டுக்கொடுக்க யாருக்கும் மனம் வராது.

டிக் டாக் இந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ரூ.100 கோடி லாபத்தை எட்டிவிட வேண்டும் எனக் குறியாக இருந்தது. ஃபேஸ்புக் போன்ற சேவைகளுடன் ஒப்பிடுகையில் இந்தத் தொகை குறைவுதான். இதுவரை பயனர்களை அடைவதில் குறியாக இருந்தது டிக் டாக். இப்போதுதான் தங்கள் தளத்தில் வருமானத்தை எப்படிப் பெருக்கலாம் எனப் பல வழிமுறைகளை வகுத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நேரத்தில் இந்தத் தடை உத்தரவு டிக் டாக் போன்ற நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவுதான்.

தடை நிரந்தரமா?

இது குறித்துப் பேசிய டிக் டாக் இந்திய தலைவர் நிகில் காந்தி, “டிக் டாக் இந்த உத்தரவுக்கு அடிபணிகிறது. பிரச்னைகளைக் கலந்துபேச அரசுத் தரப்பில் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் அனைத்து டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்புச் சட்டங்களையும் சரிவரப் பின்பற்றிவருகிறோம். இதுவரை இந்தியப் பயனர்கள் குறித்த தகவல்களை சீனா உட்பட எந்த அரசிடமும் நாங்கள் பகிரவில்லை. அப்படிச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டாலும் அதை நாங்கள் செய்ய மாட்டோம்’’ என்று தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ஏற்கெனவே ஒருமுறை தடையைச் சந்தித்து மீண்டும் வந்த டிக் டாக் நிறுவனம், இதைத் தற்காலிகத் தடை என்றுதான் குறிப்பிடுகிறது.

இந்திய அரசு சுட்டிக்காட்டும் மற்ற சிக்கல்களையும் இந்த ஆப்களால் சரிசெய்ய முடியும்பட்சத்தில் அவற்றால் மீண்டும் இங்கு செயல்பட முடியும். ஆனால், இவற்றின் மீது அரசின் கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் (ByteDance) ஏற்கெனவே சீனாவிலிருந்து படிப்படியாக வெளியில் வரும் திட்டத்தில்தான் இருக்கிறது. இதனால் இன்னும் சில வாரங்களில் டிக் டாக் மீண்டும் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சீனா ஆப் தடை

சீனாவின் இழப்பும் நமக்கான லாபமும்..!

இந்திய அரசின் இந்த திடீர் தடை, சீனாவுக்குப் பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. `டிக் டாக்கின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே ரூ.45,000 கோடி வருமான இழப்பு ஏற்படும்’ என்று சொல்லப்படுகிறது. பிற நிறுவனங்களுக்கான வருமான இழப்பையும் கணக்கிட்டால், தோராயமாக ரூ.75,000 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும். அதேநேரம், சீன ஆப்களுக்கு நிகரான நமது ஆப்கள் இந்தியாவில் பிரபலமடைவதற்கும், பல புதிய ஆப்கள் உருவாக்கப்படுவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் இந்திய ஆப்ஸ் நிறுவனங்களின் பயன்பாடு அதிகரித்து, இவற்றுக்குக் கிடைக்கும் லாபமும் அதிகரிக்கும். அந்த வகையில், இந்த ஆப்ஸ்களுக்கு திடீர் தடை விதித்திருப்பது நல்ல விஷயமே.

சீன ஆப்கள் தடை செய்யப்பட்ட பிறகும், இந்திய எல்லையில் சீனா தன் அத்துமீறல்களை நிறுத்தவில்லை எனில், சீனப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசு தடை கொண்டுவந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

மாற்று ஆப்கள்!

டேட்டா பாதுகாப்பைச் சுட்டிக்காட்டி இந்த ஆப்கள் நீக்கப்பட்டிருந் தாலும், இவற்றில் பல ஆப்கள் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தன. இவற்றுக்கு மாற்றாக இருக்கும் ஆப்கள் சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.

சீன ஆப்களுக்கு தடை ஏன்? - வர்த்தக யுத்தம் ஆரம்பமா..?

  • கேம் ஸ்கேனர் – அடோப் ஸ்கேன், மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் லென்ஸ்

  • ஹலோ, லைக் – ஷேர்சேட்

  • ஷேர்இட், சென்டர் – ஃபைல் கோ (கூகுள்)

  • UC பிரவுசர் – ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர், பிரேவ் பிரவுசர்

  • டிக் டாக் – சிங்காரி, மித்ரோன், ட்ரில்லர்

%d bloggers like this: