: தி.மு.க-வை நெருக்கும் பா.ஜ.க… ஜெகத்ரட்சகனுக்கு வைக்கப்பட்ட முதல் குறி!

பொருளாளர் பதவி கிடைக்காத வருத்தத்தில் சத்தமில்லாமல் திருவண்ணாமலைக்குச் சென்று, தான் தொடங்கவிருக்கும் மருத்துவக் கல்லூரிப் பணிகளைப் பார்வையிட்டுவந்தார் வேலு.

‘‘ஏழை அழுத கண்ணீர், இறைவன் முன் நீதி கேட்கும். அது கூரிய வாளுக்குச் சமம்’’ – பேப்பரில் இருந்த வாசகத்தைப் படித்தபடி, ‘ஹேங்அவுட்ஸி’ல் காட்சியளித்தார் கழுகார். ‘‘என்ன… தத்துவம் பேச ஆரம்பித்துவிட்டீர்?’’ என்று கேட்டோம்.

கண்டு கொள்ளாதவராக சீரியஸாகப் பார்த்த கழுகார், “சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அறிக்கையிலுள்ள வாசகம் இது’’ என்றபடி பேசத் தொடங்கினார்.

‘‘தமிழக அரசுக்கு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொடுக்கும் அறிக்கைக் குடைச்சல் போதாதென்று இப்போது தி.மு.க-வின் இரண்டாம்கட்ட தலைவர்களும் அறிக்கைப்போரில் இறங்கிவிட்டார்கள். அதற்கு பதிலடி கொடுக்கவே சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடமிருந்து அறிக்கை வெளியாகியிருக்கிறது. ‘சாத்தான்குளம் விவகாரத்தை உயர் நீதிமன்றம் நேரடியாகக் கண்காணிக்கிறது. வழக்கு விசாரணையை சி.பி.ஐ-யிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது தமிழக அரசு. ஆனால், இந்த விவகாரத்தை அரசியலாக்கி, முதலமைச்சர் பதவியில் தான் அமர வேண்டும் என்று பதவிப் பித்து பிடித்தவராக ஸ்டாலின் இருக்கிறார்’ என்று அறிக்கையில் சண்முகம் வெடித்திருந்தார். பதவிக்காக ஸ்டாலின் அரசியல் செய்வதாகக் கூறியது தி.மு.க-வை எரிச்சலாக்கி விட்டதாம்.’’

‘‘சண்முகத்தின் அறிக்கை வெளிவந்த அன்றே தி.மு.க-வில் இரண்டு அறிக்கைகள் வந்ததை கவனித்தீரா?’’

மு.க.ஸ்டாலின் -  சி.வி.சண்முகம்

மு.க.ஸ்டாலின் – சி.வி.சண்முகம்

‘‘கவனித்தேன்… கவனித்தேன்… ‘அடிக்கடி உரிமையாளரை மாற்றும் வாடகைதாரருக்கு எங்கள் தலைவரை விமர்சிக்க யோக்கியதை இல்லை’ என்று அமைச்சர் உதயகுமாரைக் கண்டித்து திண்டுக்கல் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டார். அன்று மாலையே உணவுத்துறை அமைச்சர் காமராஜைக் கண்டித்து எ.வ.வேலு அறிக்கை வெளிவிட்டார். அதாவது, இந்நாள் வருவாய்த்துறை அமைச்சருக்கு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சரும், இந்நாள் உணவுத்துறை அமைச்சருக்கு முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் பதிலடி கொடுத் துள்ளனர். இதுபோல, அ.தி.மு.க அமைச்சர்களின் அறிக்கைகளுக்குத் தன் முன்னாள் அமைச்சர்களைக் கொம்பு சீவிவிட தி.மு.க முடிவு செய்துள்ளதாம்.’’

‘‘ம்ம்… நீண்ட நாள்களுக்குப் பிறகு எ.வ.வேலு ரீஎன்ட்ரி ஆகியிருக்கிறாரோ?’’

‘‘அதில் பலருக்கும் ஆச்சர்யம். பொருளாளர் பதவி கிடைக்காத வருத்தத்தில் சத்தமில்லாமல் திருவண்ணாமலைக்குச் சென்று, தான் தொடங்கவிருக்கும் மருத்துவக் கல்லூரிப் பணிகளைப் பார்வையிட்டுவந்தார் வேலு. இடையில் சில நாள்கள் சென்னைக்கு விசிட் அடித்தபோது, அதிகாலை நேரத்தில் ஸ்டாலினைச் சந்தித்து சில விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்தாராம். ஆனால், கட்சி விவகாரங்களில் பெரிதும் தலையிடவில்லை. இந்தநிலையில், இளைஞரணி பொறுப்பாளர் ஜோயல் அழைப்பின் பேரில், சாத்தான்குளத்துக்கு உதயநிதி ஸ்டாலின் சென்றுவந்தது இ-பாஸ் பிரச்னையால் சர்ச்சையானது. இதில், ஸ்டாலின் அப்செட். ‘வேலு இருந்திருந்தால் இது மாதிரியான சிக்கலான விவகாரங்களைச் சரிக்கட்டியிருப்பார்’ என்று ஸ்டாலின் குடும்பத்தில் பேச்சு எழுந்துள்ளது. அதன் பிறகுதான் அவரை அறிக்கைவிடச் சொன்னதாம் தி.மு.க தலைமை. இதன் மூலம் எ.வ.வேலு கூலாவார் என்பது தலைமையின் கணக்கு!’’

‘‘ஓஹோ… சாத்தான்குளம் விவகாரத்தில் அரசின் நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றனவே?’’

‘‘உயர் நீதிமன்றத்தின் கடுமையும், அமித் ஷா கேட்ட அறிக்கையும்தான் இதற்குக் காரணம். உள்துறைக்குப் பொறுப்பு முதல்வர்தான் என்பதால், யார் கொட்டினாலும் வலிக்கப்போவது எடப்பாடி பழனிசாமிக்குத்தான். நிலைமை சீரியஸானதால்தான் நான்கு காவலர்களை சி.பி.சி.ஐ.டி உடனடியாகக் கைது செய்துள்ளது. தவறான அப்டேட்டுகளை அளித்துவிட்டதாக காவல்துறை அதிகாரிகள் சிலரின் மீதும் முதல்வருக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளதாம்.’’

‘‘அது மட்டுமா… அமைச்சர்கள்மீதும் அவர் வருத்தத்தில் இருப்பதாகக் கூறுகிறார்களே?’’

‘‘ஆமாம். கொரோனா தடுப்புப் பணியில் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே களத்தில் நின்று பணியாற்றுகின்றனர். மற்றவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதுடன் கழன்றுகொள்வதாக முதல்வர் வருத்த மடைந்துள்ளார். வருத்தத்தைப் புரிந்துகொண்ட ஒரு மூத்த அமைச்சர், ‘நான்கு அமைச்சர்களின் உதவியாளர்கள், ஓட்டுநர்களுக்கு கொரோனா வந்துவிட்டது. எங்களுக்கு சுகர், பி.பி எல்லாம் இருக்கிறது. கொரோனா வந்தா நாங்க தாங்குவோமா சொல்லுங்க?’ என்று முதல்வரிடம் ஓப்பனாகவே புலம்பிவிட்டாராம். 60 வயதைக் கடந்த அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் வெளியே வருவதற்கு அவர்கள் குடும்பத்தினர் அஞ்சுகிறார்களாம்’’ என்ற கழுகார், ‘‘ஊராட்சிவாரியாக அ.தி.மு.க ஐ.டி விங்கை பலப்படுத்தும் வேலையை கட்சித் தலைமை ஆரம்பித்துவிட்டதே… கவனித்தீரா?’’ என்றார்.

‘‘சாத்தான்குளம் விவகாரம் டிரெண்ட் ஆன விஷயத்தில், ஐ.டி விங் மீது முதல்வர் அதிருப்தியடைந் திருந்ததை நீர் கடந்த இதழில் போட்டு உடைத்துவிட்டீரே!’’ என்று கண்சிமிட்டினோம். பாராட்டைப் புன்முறுவலுடன் ஏற்ற கழுகார், முந்திரி பக்கோடாக்களைக் கொறித்தபடி மற்ற செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘சாத்தான்குளம் விவகாரத்தில் சம்பந்தப் பட்டவர்களை ‘சத்தியமா விடவே கூடாது’ என்று ரஜினி செய்திருந்த ட்வீட் வலைதளங்களைப் புரட்டிப் போட்டுவிட்டது. கடந்த ஒரு வாரமாகவே, `ரஜினி இந்த விவகாரத்தில் வாய்ஸ் கொடுக்கவில்லை’ என்று விமர்சனம் எழுந்தது. அதை ரஜினியின் காதுக்கும் அவருக்கு நெருக்கமானவர்கள் கொண்டுசென்றிருக் கிறார்கள். சமீபத்தில்தான் சில விஷயங்கள் குறித்து எடப்பாடி தரப்பில் ரஜினி தொலைபேசியில் பேசியிருந்தாராம். அதனால் அரசை விமர்சிக்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்திருக்கிறார் ரஜினி. பிறகு, ‘அதிகாரிகள் செய்த தவறுக்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும்’ என்று முடிவு செய்துதான் அதிரடியாக ட்விட்டரில் கருத்து பதிவு செய்தாராம்.’’

“ம்ம்… ஐ.பி.எஸ் பணியிட மாறுதல் லிஸ்ட்டைப் பார்த்தீர்களா?’’

‘‘சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டது பலருக்கும் ஆச்சர்யம். 1994 பேட்ஜ் ஐ.பி.எஸ் அதிகாரியான இவருக்கு மேல் 20 சீனியர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் புறந்தள்ளிவிட்டு, அதிர்ஷ்டக் காற்று மகேஷ்குமார் பக்கம் வீசியதற்கு டி.ஜி.பி திரிபாதியின் ஆசியும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னர் டெல்லி நீதித்துறையில் செல்வாக்கு உள்ளவரின் லாபியில்தான் சென்னை (தெற்கு) கூடுதல் கமிஷனர் பொறுப்பு மகேஷ்குமாருக்குக் கிடைத்ததாக ஒரு செய்தி ஐ.பி.எஸ் வட்டாரத்தில் உண்டு. இப்போதும் அதேபோல, டெல்லியில் அரசியல் மற்றும் நீதித்துறையில் ஆக வேண்டிய பல்வேறு காரியங்களையும் மனதில் கொண்டு, பெரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன்தான் சென்னை கமிஷனர் பதவியில் மகேஷ்குமார் அகர்வாலை அமர்த்தியிருக்கிறார்களாம்.“

‘‘சிலரை இப்படிக் கொண்டாடும் அதேசமயம், சிலரைப் பந்தாடவும் செய்திருக்கிறார்களே?’’

‘‘மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி-யான ரவியை ஈரோடு சிறப்பு அதிரடிப் படைக்கு தூக்கியடித்திருக்கின்றனர். தான் இதுநாள்வரை வகித்துவந்த பதவியில் சிறப்பாகவே செயல்பட்டுவந்தார் ரவி. சிறப்பு கவனமெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேலைகளையும் செய்துவந்தார். சாத்தான்குள சம்பவத்துக்குப் பிறகு, ‘போலீஸ் எப்படிச் செயல்பட வேண்டும்’ என ஒரு வீடியோ வெளியிட்டார் ரவி. அது மேலிடத் துக்கு கோபத்தை ஏற்படுத்திவிட்டதாம்.”

‘‘சீருடைப் பணியாளர் தேர்வாணைய சேர்மனாக இருந்த சுனில்குமாரை மனித உரிமை கமிஷனுக்கு மாற்றி யிருக்கிறார்களே?’’

‘‘அவர் ஓய்வுபெற எட்டு மாதங்கள் இருக்கின்றன. இடையில் ஆயிரம் சப்-இன்ஸ்பெக்டர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்வுகள் முடியப் போகின்றன. உடல்தகுதி, நேர்காணல்தான் பாக்கி. இதற்காக சுமார் 5,000 பேர் தேர்வு எழுதியிருக்கின்றனர். சுனில்குமார் ரொம்பவும் கறார் பேர்வழி. இந்த நேரத்தில், `அவர் எதற்கும் சரிப்பட்டு வர மாட்டார்’ என்று ஆட்சி மேலிடம் நினைத்திருக்கலாம். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய தலைவராக இருக்கும்

ஏ.ஜி.மவுரியாவின் தம்பி ஏ.ஜி.பாபுவை தென் சென்னை போலீஸ் இணை கமிஷனராக நியமித்திருக்கின்றனர். முதல்வரின் கண்ணில் தினமும் தென்படும்படியான முக்கியமான பதவி அது.’’

‘‘அது சரி… ஜெகத்ரட்சகனை அமலாக்கத்துறை துருவி எடுத்துவிட்டதாமே?’’

‘‘மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, கணக்கில் வராத வகையில் 65 கோடி ரூபாய்க்கு சொத்துகள் வாங்கியிருப்பதாக ஜெகத்ரட்சகன் மீது வழக்கு பதிந்தனர். இந்த வழக்கில் அவருக்கு சம்மன் வழங்கப்பட்டு, ஜூலை 1-ம் தேதி ஜெகத்ரட்சகன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ஆறு மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், இலங்கையில் அவர் குடும்பத்தினர் செய்துள்ள முதலீடுகள் குறித்தும் விசாரிக்கப்பட்டதாம். வரும் டிசம்பர் மாதத்துக்குள் தி.மு.க-வின் வளம்மிக்க நபர்களை அடுத்தடுத்து குறிவைத்து நெருக்கடி கொடுக்க பா.ஜ.க தயாராகிறதாம். அவர்களின் முதல் குறி ஜெகத் என்கிறார்கள்’’ என்ற கழுகார், “பை பை” சொல்லிட்டு, சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: