சசிகலா வகுக்கும் தேர்தல் வியூகம்.. அமைச்சர்களின் சீக்ரெட்.. அதிர்ந்த அதிமுக.. ஐவர் குழு அவசரமாக கூடியது ஏன்?

சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கும் வகையில் சசிகலா வகுத்துள்ள வியூகம் கசிந்த நிலையில் அதிமுகவில் தற்போது அதிகாரமிக்க ஐவர் குழு திடீரென கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் களம் இறங்கும் வகையில் சசிகலா வகுத்துள்ள வியூகம் கசிந்த நிலையில் அதிமுகவில் தற்போது அதிகாரமிக்க ஐவர் குழு திடீரென கூடி ஆலோசனை நடத்தியுள்ளது.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் ஆவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சசிகலா வெளியான 6 மாதத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் சிறைக்குள் இருந்தபடியே தேர்தல் வியூகத்தை சசிகலா வகுத்து வருவதாக சொல்கிறார்கள். அவரது வியூகத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பணியை டிடிவி தினகரன் மேற்கொண்டு வருகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த உடன் தனது அதிமுக தொடர்புகளை முதலில் புதுப்பிப்பது தான் சசிகலாவின் வியூகம் என்கிறார்கள். தற்போது அமைச்சர்களாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு சீக்ரெட் உண்டு. அது  என்ன என்பது சசிகலாவிற்கு அத்துப்படி. அந்த சீக்ரெட்டுகளை எல்லாம் வைத்து தான் ஜெயலலிதா இருக்கும் போதே அமைச்சர்களை ஆட்டிப்படைத்து வந்தார் சசிகலா. கடந்த காலங்களில் சசிகலா குறித்து கடுமையாக விமர்சித்து வந்த அமைச்சர்கள் தற்போது சசிகலா எனும் பெயரை கூறினால் கையெடுத்து கும்பிட்டு ஓடுகின்றனர்.

அமைச்சர் உதயகுமாரிடம் சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவதை பற்றி கேட்ட போது எந்த பதிலும் கூறாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு சென்றார். இதே போல் சசிகலாவிற்கு எதிராக வெளிப்படையாக பேசிய மிகச்சில அமைச்சர்களில் ஒருவர் கே.சி.வீரமணி. சசிகலாவால் தான் ஜெயலலிதா உயிரிழந்தார் என்கிற அளவிற்கு கே.சி.வீரமணி பேசி வந்தார். ஆனால் இப்போது சசிகலா பற்றி கேள்வி கேட்டால் அவரும் கையெடுத்து கும்பிட்டுவிட்டு செல்கிறார். இதற்கெல்லாம் காரணம் சசிகலாவிடம் இருக்கும் அமைச்சர்களின் சீக்ரெட் தான் என்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களில் சிறப்பாக செயலபட்டு அதிமுக தாங்கள் தான் என்பதை ஓபிஎஸ் – இபிஎஸ் நிரூபித்துள்ளனர். ஆனால் அதிமுக ஜெயலலிதா இருந்தது போல் தற்போது எஃகு கோட்டை என்று சொல்ல முடியாத அளவில் தான் உள்ளது. ஆட்சியில் இருப்பதால் நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்கிற பேச்சு பரவலாக அடிபடுகிறது. சட்டமன்ற தேர்தல் என்று வரும் போது ஓபிஎஸ் – இபிஎஸ் தலைமை சரியாக இருக்குமா? என்று சில நிர்வாகிகள் யோசிப்பது வெளிப்படையாகவே தெரியவருகிறது.

இந்த நிர்வாகிகளை குறிவைத்து  தன் பக்கம் இழுக்கும் பணியை சசிகலா துவங்குவார் என்கிறார்கள். தொடர்ந்து அமைச்சர்கள் சிலரையும் தன் பக்கம் இழுக்க சசிகலா வியூகம் வகுத்துள்ளதாக கூறுகிறார்கள். அதிலும் ஓபிஎஸ் – இபிஎஸ் மீது அதிருப்தியில் உள்ள அமைச்சர்கள், நிர்வாகிகளை தன் பக்கம் இழுப்பது எளிதாக இருக்கும் என்று சசிகலா கருதுகிறார். இந்த நிலையில் தான் அமைச்சர்களிடம் கண்டிப்பு காட்டி வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமூகமாகியுள்ளார் என்கிறார்கள்.

மேலும் நிர்வாகிகள் சிலரும் சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அவரை சென்று சந்திக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது. இதனை அடுத்தே அதிமுகவில் அதிகாரமிக்க ஐவர் குழு நேற்று திடீரென அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளது. கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகிய ஐவர் குழு சுமார் 4மணி நேரம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையின் போது யார் யார் சசிகலாவை தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது என்பது பற்றி தான் அதிக நேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

சசிகலாவுடன் இணைய வாய்ப்புள்ளவர்கள் என்று கருதப்படுபவர்களை முதலில் அழைத்து பேசுவது, பிறகும் அவர்கள் அதே மனநிலையில் இருந்தால் பதவியை பறிப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை சமாதானம் செய்வது அவர்களுக்கு புதிய பதவிகளை கொடுப்பது என்று ஒரு பட்டியல் தயாராகியுள்ளது. அதே போல் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டச் செயலாளர்களை தயாராக்குவது, ஒத்துவராத மாவட்டச் செயலாளர்களை மாற்றுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: