கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `அவேக் ப்ரோனிங்’ – மருத்துவ விளக்கம்!

உலக சுகாதார நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் உலகளவில் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘ப்ளாஸ்மா தெரபி’, ‘அவேக் ப்ரோனிங்’ போன்ற சிகிச்சை முறைகள் ஓரளவு நம்பிக்கையளிக்கின்றன.

நாட்டில் கொரோனா உயிர்கொல்லி நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கிறது.நோய்ப் பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் முழு முனைப்புடன் களத்தில் போராடி வருகின்றனர். ஆனாலும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அதிகளவிலான மூச்சுத் திணறல் காரணமாகவே உயிரிழக்கின்றனர். தீவிரமான இந்த மூச்சுத்திணறல் நிலையை மருத்துவர்கள் `ஹைப்போக்ஸியா’ என்று அழைக்கின்றனர். இது நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு இயல்பாக வரக்கூடியதுதான் என்றாலும் கொரோனா பாதிப்பின்போது வருவது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

மூச்சுத்திணறல் அதிகமுள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் மற்றும் சுவாசக் கருவிகளின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனாவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பவர்களை வென்டிலேட்டர் உதவிகூட இல்லாமல் `ப்ரோனிங்’ முறை மூலம் காப்பாற்றலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

`ப்ரோனிங்’ சிகிச்சை முறை குறித்து அவசரகால சிகிச்சை மருத்துவர் தவபழனி அழகப்பனை தொடர்புகொண்டு கேட்டோம்.

“நோய் பாதிப்பின் எண்ணிக்கை நாம் நினைத்ததைவிடவும் வேகமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையும், நோய் பாதித்தவர்களைக் காப்பாற்ற மருத்துவத்துறையும் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கின்றன.

உலக சுகாதார நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் உலகளாவில் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘ப்ளாஸ்மா தெரபி’, ‘அவேக் ப்ரோனிங்’ போன்ற சிகிச்சை முறைகள் ஓரளவு நம்பிக்கையளிக்கின்றன.

அதிலும் குறிப்பாக `அவேக் ப்ரோனிங்’ முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர மூச்சுத்திணறலுக்கு உள்ளான நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றி கவனம் பெற்று வருகிறது. ‘ப்ரோனிங்’ சிகிச்சை ஒன்றும் புதிதல்ல, கொரோனாவுக்கு முன்பே சுவாசம் சம்பந்தப்பட்ட சில நோய்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்ததுதான். ஆனால், மூச்சுத்திணறல் மூலம் உயிரைப் பறிக்கும் கொரோனாவுக்கு இந்த முறை நல்ல வகையில் பலனளிக்கிறது.

பொதுவாக, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் உடலில் வைரஸ் கிருமி நுரையீரலுக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவைக் குறைத்து சுவாசப் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உடலில் உள்ள திசுக்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிடுகிறது. உடலில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமல் போகும் பட்சத்தில் நோயாளிகள் மூச்சுத்திணறி இறுதியில் உயிரிழக்கின்றனர். இந்த நிலையைத்தான் நாம் `ஹைப்போக்ஸியா’ என்கிறோம்.

ஹைப்போக்ஸியா ஒருவரின் உடலில் இயல்பான ஆக்ஸிஜன் விநியோகத்தை 60% முதல் 80% வரை தடுத்து நிறுத்தி விடுகிறது. அதன் காரணமாகவே கொரோனா நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் மற்றும் சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுகிறது. மேலும், இந்த நிலையில் நுரையீரலின் பல பகுதிகளில் உள்ள பலூன் போன்ற பைகள் சுருங்கி விடுகின்றன. சுருங்கிய அவற்றை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பச்செய்ய ப்ரோனிங் எனும் சிகிச்சைமுறை உதவுகிறது.

ப்ரோனிங் முறையில் வென்டிலேட்டர் மற்றும் சுவாசக் கருவிகளின் உதவி இல்லமாலே மூச்சுத்திணறலை சீராக்க முடியும்.

இந்தச் சிகிச்சை பெரும்பாலும் தீவிர நோய்த்தொற்று உள்ளவர்களுக்கே அளிக்கப்படுகிறது. இதில் தீவிர ஹைப்போக்ஸியா பாதிப்பு நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகளின் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் உண்டாக்கும் வகையில் அவர்களைக் குப்புறப் படுக்க அறிவுறுத்துகிறோம்.

அவ்வாறு குப்புறப் படுப்பதன் மூலம் அவர்களின் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. மேலும் குப்புறப்படுத்த நிலையில் ஏற்படும் அழுத்தம் அவர்களின் உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தைத் துரிதமாகத் தூண்டி திசுக்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றானது, பாதிக்கப்பட்டவர்களின் இதயம் மற்றும் உடலின் பிற பாகங்களில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். அதன் காரணமாக இதயம் மற்றும் இதர உடல் உறுப்புகள் நுரையீரலுக்கு கணிசமான அழுத்தத்தைக் கொடுக்கின்றன. அந்த அழுத்தத்தின் காரணமாகவே உடலின் இயல்பான ஆக்ஸிஜன் பரிமாற்றம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

ப்ரோனிங் முறையில் நோயாளிகள் குப்புறப் படுக்கும்போது அவர்களின் உடல் சம நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்படிச் சமமாக இருக்கும்போது நுரையீரல் எந்தவிதத் தடையும் இன்றி உடல் முழுவதற்கும் ஆக்ஸிஜனை பரிமாற்றம் செய்கிறது. நோயாளிகளுக்கு இதன் மூலம் மூச்சுத் திணறல் பாதிப்பும் சீராகிறது.

தீவிர நோய்த் தாக்கத்தின் பிடியில் இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான பாதிப்புகளுடன் அனுமதிக்கப்படுவர்களுக்கு பெரும்பாலும் மூச்சுத்திணறல் இருக்காது. அவர்களால் எந்தச் சிரமும் இன்றி சுவாசிக்க முடிவதால் அவர்களுக்கு இதன் தேவை இருக்காது.

இந்த இயன்முறை சிகிச்சையில் நோயாளிகளை நாங்கள் வெவ்வேறு கோணங்களில் உட்கார மற்றும் படுக்கச் சொல்கிறோம். இவ்வாறு செய்வதைத்தான் ப்ரோனிங் என்கிறோம். முதலில் நோயாளி 60 டிகிரி கோணத்தில் குறைந்தது 2 மணி நேரம் உட்கார வேண்டும். பின் வலதுபுறம் சாய்ந்து படுக்கையை நோக்கியவாறு சில மணி நேரம் இருக்க வேண்டும். அதே போல் இடதுபுறமும் செய்ய வேண்டும்.

பலவிதமான படுக்கை நிலைகளுக்கு உடலை உட்படுத்தும்போது சுருங்கியிருக்கும் நுரையீரல் நாளங்கள் மீண்டும் விரிவடையும். ஆக்ஸிஜன் பரிமாற்றம் தூண்டப்படும். ஆனால், ஒவ்வொரு நிலையிலும் நோயாளி குறைந்தது ஒரு மணி நேரமாவது முழுமையாக இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நமக்கு பலன் கிடைக்கும்.

தீவிர நோய்த்தொற்று பாதிப்பு உள்ளவர்களைக்கூட நிச்சயம் வென்டிலேட்டர் உதவி இல்லாமல் ‘ப்ரோனிங்’ மூலம் குணப்படுத்தலாம். ஆனால் (கர்ப்பிணி பெண்கள், முதுகு வலி உள்ளவர்கள்) போன்றோரால் இந்த ப்ரோனிங் சிகிச்சையை மேற்கொள்வது சற்றே சிரமமான காரியம் என்பதால் சிலருக்கு இந்த ப்ரோனிங் கைகொடுக்காது. எனவே, மேற்குறிப்பிட்ட நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவி கண்டிப்பாகத் தேவை. ப்ரோனிங் செய்ய முடிந்தால் நன்று ஆனால் முடியாத பட்சத்தில் வென்டிலேட்டர் கண்டிப்பாகத் தேவைப்படும்.

இந்தச் சிகிச்சை பருமனான உடல் அமைப்பைக் கொண்டவர்களுக்கு சிறிது சிரமமானது தான். சரியாகக் கையாள்வதன் மூலம் இந்தச் சிகிச்சை கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைக்கும் என்பது நிச்சயம்” என்றார்.

%d bloggers like this: