மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு ரகசிய தூதுவிட்ட அமைச்சர்கள்!

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒரு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது.

கையில் திருக்குறள் புத்தகத்துடன் நேரில் ஆஜரானார் கழுகார். ‘‘பிரதமருக்குப் போட்டியாக நீரும் கிளம்பிவிட்டீரோ?’’ – கிண்டலுடன் முந்திரி அல்வாவை நீட்டினோம்.

புன்முறுவலுடன் அல்வாவைச் சுவைத்த கழுகார், ‘‘லடாக் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியது வைரல் ஆகிவிட்டது. ‘மறமானம் மாண்ட…’ எனத்

தொடங்கும் அந்தக் குறளுக்கு அர்த்தம் தேடியவர்களின் எண்ணிக்கை கூகுளில் எகிறியிருக்கிறது. திருக்குறளிலிருந்து மேற்கோள் எடுப்பதற்காகவே, தமிழ் அதிகாரி ஒருவரை பிரதமர் அலுவலகம் பணியமர்த்தி யிருக்கிறதாம். அவ்வப்போது பிரதமரும் ஆர்வத்துடன் திருக்குறளை வாசித்து பிரமிக்கிறாராம்’’ என்றவர், மற்றொரு அல்வா துண்டை எடுத்து ருசித்தபடி செய்திக்குள் தாவினார்.

சேலம் மாவட்டத்திலுள்ள 11 தொகுதிகளிலும், தலா 100 பேர் வீதம் 1,100 பேரை சர்வே எடுப்பதற்காகக் களமிறக்கியுள்ளது பிரசாந்த் கிஷோர் டீம். `ஊரடங்கு காலத்தில் அரசின் மீதான மக்களின் மனநிலையை ஸ்கேன் செய்வதற்காகவே இந்த சர்வே’ என்கிறார்கள். சேலத்திலுள்ள தொழிற்சங்கங்கள், சமுதாய அமைப்புகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரிடமும் சர்வே எடுக்கப்படுகிறதாம்.’’

‘ஓஹோ… எதற்காக சேலத்தைத் தேர்வு செய்திருக்கிறார்கள்?’’

‘‘முதல்வரின் சொந்த மாவட்டம் அல்லவா… தவிர, அ.தி.மு.க-வின் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் நெருக்கடி கொடுத்தால், சொந்த மாவட்ட தொகுதிகளைக் காப்பாற்ற வேண்டிய சூழலுக்கு எடப்பாடி தள்ளப்படுவார் என்று கணக்கு போடுகிறார்கள். அவரை பிரசாரத்துக்காக வேறெங்கும் நகரவிடாமல் முடக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க-வின் திட்டம். இதற்காக மக்களின் பல்ஸைத் தெரிந்துகொள்வதுதான் பி.கே டீமின் திட்டமாம்.’’

“பெரிய திட்டம்தான். பா.ஜ.க புதிய நிர்வாகிகள் நியமனத்தில் புகைச்சல் உள்ளதாமே?’’

‘‘மாநிலத் தலைவராக முருகன் பொறுப்பேற்ற பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. தி.மு.க-விலிருந்து வந்த வி.பி.துரைசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டவர்களுக்குப் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், நீண்டகாலமாக பா.ஜ.க-வில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்ற குமுறலும் எழுந்துள்ளதாம். குறிப்பாக, ‘இந்தப் பட்டியலை முருகன் தயார் செய்ததன் பின்னணியில் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கிறார்’ என்று ஒரு கோஷ்டியினர் டெல்லிக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்கள்.”

‘ஓ…’’

‘‘தமிழக பா.ஜ.க-வின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திடம் இது குறித்துப் பலரும் புலம்பியிருக்கின்றனர். ‘சில அசைன்மென்ட்களை முன்வைத்தே முருகனைத் தலைவராக நியமித்துள்ளோம். இப்போது கொரோனா நேரமாக இருப்பதால், தலைமையிலிருந்து முழுமையாகக் கண்காணிக்க முடியாமல் உள்ளது’ என்று கேசவ விநாயகம் தரப்பு விளக்கம் சொல்லியிருக்கிறது. ‘விரைவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து நான்கு நபர்கள் தமிழகம் வரவிருக்கிறார்கள். மண்டலவாரியாகச் சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை நடத்தவிருக்கிறார்கள். அதன் பிறகு கட்சிக்குள் சில மாற்றங்கள் நடக்கும்’ என்ற தகவலும் பா.ஜ.க வட்டாரத்தில் உலா வருகிறது.”

‘‘தி.மு.க-வில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு என்ன சிக்கலாம்?’’

‘‘ஏற்கெனவே, ‘ஆளுங்கட்சியினருடன் அனிதா ராதாகிருஷ்ணன் நெருக்கமாக இருக்கிறார்’ என்று தனது காதுக்கு வந்த புகாரால் கனிமொழி தரப்பு அனிதா ராதாகிருஷ்ணன்மீது மனக்கசப்பில் இருந்திருக்கிறது. இதற்கிடையே அனிதா ராதாகிருஷ்ணன் மாவட்டச் செயலாளராக இருக்கும் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் நடந்த நிர்வாகிகள் மாற்றத்தில் பணம் விளையாடிவிட்டது என்று புகார்கள் குவிந்துள்ளன. பாதிக்கப்பட்ட நிர்வாகிகள் கனிமொழி மூலம் கட்சித் தலைமைக்கும் புகார்களை கொடுத்துள்ளார்களாம். அதை விசாரிக்கத்தான் தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தூத்துக்குடி வந்திருக்கிறார். தனக்கு ஏற்பட்டுள்ள சிக்கலுக்குப் பின்னால் கனிமொழி இருப்பதாக அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு கடுப்பில் உள்ளதாம்.’’

‘‘ம்ம்…’’

அதேநேரம், அனிதா ராதாகிருஷ்ணன் மீதான ஒரு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் தனக்குச் சிக்கல் வராமல் இருக்க ஆளுங்கட்சி தயவு அவசியம் என்று அவர் நினைக்கிறாராம். இதனால், ஆளுங்கட்சித் தரப்புடன் கொஞ்சம் இணங்கிப்போனதும் தலைமைக்குத் தெரிந்துவிட்டது என்கிறார்கள். அனிதா தரப்பில், ‘நாங்கள் மட்டுமல்ல… சுரேஷ் ராஜன், பவானி ராஜேந்திரன், சுப.தங்கவேலன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.பி.ராஜன் என தி.மு.க நிர்வாகிகள் பலரும் தலைமைமீது வருத்தத்தில்தான் இருக்கிறார்கள்’ என்கின்றனர்.’’

அதுசரி…’’ என்றபடி, சூடான கும்பகோணம் டிகிரி காபியை நீட்டினோம். கோப்பையைக் கையில் வாங்கியபடி, ‘‘தமிழகத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் நடத்திய ரகசியச் சந்திப்பு தெரியுமா உமக்கு?” என்று கண்சிமிட்டினார். நாம் ஆர்வத்துடன் விழிகளை விரிக்க, குறும்புப் பார்வை பார்த்த கழுகார், ‘‘பெயர் சொல்ல மாட்டேன். நீரே யூகித்துக்கொள்ளும்” என்று காபியைப் பருகியபடி தொடர்ந்தார்.

‘‘தமிழகத்தின் மூத்த அமைச்சர்கள் இருவர் சமீபத்தில் வழக்கறிஞர் ஒருவரைச் சந்தித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ரஜினிகாந்த் குடும்பத்துக்கும் நெருக்கமானவரான அந்த வழக்கறிஞர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தனது செல்வாக்கை அவ்வப்போது நிரூபித்துவருபவர். அவரிடம், ரஜினிகாந்தின் அரசியல் ஐடியா குறித்து அமைச்சர்கள் பேசியுள்ளனர். ‘ரஜினியைதான் டெல்லி தலைமை இப்போதும் நம்புகிறது. எனவே, சில தேவைகளை ரஜினியிடம் நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்’ என்று வழக்கறிஞரிடம் அமைச்சர்கள் தரப்பு மணி மணியான வார்த்தைகளில் பேசியதாம்.’’

‘‘ம்ம்ம்… புரிகிறது புரிகிறது. மேற்கொண்டு சொல்லும்…’’

‘‘அதற்கு அந்த வழக்கறிஞர், ‘சரி, நான் பேசுகிறேன். உங்கள் வேலை முடிந்தவுடன், டி.என்.பி.எஸ்.சி-யில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை எனக்கு வழங்க வேண்டும்’ என்று கண்டிஷன் போட்டுள்ளார். ‘அதுக்கென்ன… பேஷா பண்ணிடலாம்’ என்று உறுதி கொடுத்துவிட்டு கிளம்பியிருக்கிறது அமைச்சர்கள் தரப்பு. இந்த விவகாரம் விரைவில் வெளியே வரும் என்கிறார்கள்.’’

‘‘பலே… அ.தி.மு.க-வில் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சிப் பதவி கொடுத்துவிட்டார்களே?’’

ராஜேந்திர பாலாஜி - வேலுமணி

ராஜேந்திர பாலாஜி – வேலுமணி

‘‘ `அவர் பா.ஜ.க மூலம் பதவிக்கு முயல்கிறார்’ என்று ஏற்கெனவே நான் கூறியிருந்தேனே… அது பலனளித்துவிட்டது என்கிறார்கள். மேலும், தி.மு.க தலைமையை விமர்சித்து ராஜேந்திர பாலாஜி விடுத்த அறிக்கைகளால்

அ.தி.மு.க தலைமை குளிர்ந்துவிட்டதாம். ‘இனி எங்கேயும் வாய் பேசக் கூடாது’ என்கிற நிபந்தனையுடன் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர் பதவியை அளித்திருக்கிறார்கள். ஆனால், அவரால் நாக்கைக் கட்டுப்படுத்த முடியுமா என்பதுதான் தெரியவில்லை.’’

“எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான மு.க.ஸ்டாலினின் அறிக்கையை கவனித்தீரா?’’

நகராட்சி நிர்வாக ஆணையத்தின் தலைமைப் பொறியாளராக இருந்த நடராஜன் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமைப் பொறியாளராக இருக்கும் புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஓய்வுபெற்ற புகழேந்திக்கு பணி நீட்டிப்போடு பதவி உயர்வும் வழங்கப்பட்டது, துறை வட்டாரத்தில் அப்போதே சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் 12, 000 கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட உள்ளாட்சித் திட்டங்களைக் கையாளும் பொறுப்பில் புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயங்களையெல்லாம் குறிப்பிட்டுத்தான், ‘வேலுமணிக்கு நெருக்கமான நபர் என்பதாலேயே, ஓய்வுபெற்ற பிறகும் புகழேந்திக்குப் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, முக்கிய பொறுப்பிலும் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று ஸ்டாலின் கொந்தளித்திருக்கிறார். ‘தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வோர் உள்ளாட்சித் துறை டெண்டரிலும் நடைபெற்ற ஊழல்களுக்கு சட்டத்தின் முன் வேலுமணி பதில் சொல்லியே தீர வேண்டும்’ என்று சொல்லியிருப்பது அ.தி.மு.க தரப்பை யோசிக்கவைத்துவிட்டது’’ என்றபடி கிளம்பும் மூடுக்கு வந்த கழுகார்,

‘‘இந்து அறநிலையத்துறையின் சார்பில் ‘திருக்கோயில்’ என்கிற பெயரில் ஆன்மிக சேனல் ஒன்றைத் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆணையரின் பொதுநல நிதியிலிருந்து 8.77 கோடி ரூபாய் ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. ‘கோயில் சொத்துகளையும், வருமானத்தையும் நிர்வகிக்க மட்டுமே இந்து அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. சேனல் தொடங்க வேண்டுமானால், அரசின் நிதியிலிருந்துதான் செலவு செய்ய வேண்டும். கோயில் வருமானத்திலிருந்து எடுக்கக் கூடாது. தற்போது ‘திருக்கோயில்’ சேனல் தொடங்க நான்கு முக்கியக் கோயில்களின் வருமானத்திலிருந்து பணத்தை எடுக்கவுள்ளனர். இது சட்ட விரோதமானது’ என இந்து இயக்கங்கள் போர்க்கொடி உயர்த்துகின்றன. இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவும் முடிவெடுத்துள்ளனர்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: