அ.தி.மு.க-வுடன் கைகோப்பது கடினம்!’ – பி.ஜே.பி-யின் பிளான் ‘பி’?

அ.தி.மு.க-வுடன் அடுத்த சட்டமன்றத் தேர்தல் வரை பி.ஜே.பி-யின் கூட்டணி தொடருமா? என்கிற சந்தேகத்தை எழுப்ப ஆரம்பித்துள்ளனர் பி.ஜே.பி-யினர். அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் குறித்த தகவல் கசிந்ததே இதற்குக் காரணம் என்கிறார்கள்.

அ.தி.மு.க நிர்வாகிகள்

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளுமே இறங்கியுள்ளன. தி.மு.க கூட்டணியில் இப்போதுள்ள கட்சிகளே அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்றுநிலை இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க கூட்டணியில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம்பிடித்த பி.ஜே.பி, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி தொடருமா? என்கிற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது.

கடந்த வாரம் முழுவதும் அ.தி.மு.க-வில் மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடந்தது. அந்த ஆலோசனையில் கட்சியின் கட்டமைப்பு மாற்றம் குறித்தும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அப்போது பலரும் சொன்ன ஒரு விஷயம் பி.ஜே.பியுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தால் நமக்குச் சாதகமாக முடிவு இருக்காது என்பதை ஒருசேரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், “உடனடியாக பி.ஜே.பியை கழற்றிவிட முடியாது. பல சிக்கல்கள் வந்துவிடும், டிசம்பர் வரை அமைதியாக இருக்கலாம்” என்று பேசியிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் என்றால் சில நாள்களுக்கு முன்பு பி.ஜே.பி மாநில தலைவர் முருகன், “அரசு மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை நடப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், அமைச்சர்கள் ஏன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள்?” என்று விமர்சித்திருந்தார். இதுவரை பி.ஜே.பி தரப்பிலிருந்து அரசுக்கு எதிராக எந்தத் தலைவரும் கருத்து தெரிவிக்காத நிலையில் முருகனின் இந்தக் கருத்தை அ.தி.மு.க-வும் உன்னிப்பாகக் கவனித்துவந்துள்ளது.

இதற்கு முன்பாகக் கடந்த வாரம் பி.ஜே.பி-யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் தமிழகத்தில் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பி.ஜே.பி நிர்வாகிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை செய்துள்ளார். அப்போது, `அ.தி.மு.க அரசு மீது மத்திய அரசுக்குத் தொடர்ந்து பல புகார்கள் வருகின்றன. அந்த அரசுக்கு நாம் முட்டுக்கொடுக்கிறோம் என்கிற விமர்சனமும் நம்மீது உள்ளது’ என்று பேசியிருக்கிறார். அதற்குத் தமிழக நிர்வாகிகள், `அ.தி.மு.க அரசு சட்டமன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணி வைப்பார்களா..? என்கிற சந்தேகம் உள்ளது’ என்பதையும் சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் எதற்காக அ.தி.மு.க ஆட்சியைப் பற்றி நாம் விமர்ச்சிக்காமல் இருக்க வேண்டும் என்று சந்தோஷ் கேட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள் கமலாலய வட்டாரத்தில். இதனால், பி.ஜே.பி பிளான் பி குறித்து யோசித்து வருவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

%d bloggers like this: