எடப்பாடிக்கு எதிராக 14 அமைச்சர்கள் போர்க்கோலம்!

“கிரீன்வேஸ் சாலையில் சோர்ஸ் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் வந்துவிடுகிறேன்”-கழுகாரிடமிருந்து ‘வாட்ஸ்-அப்’ தகவல் சிணுங்கியது. அவருக்காகச் சுடச்சுட மிளகாய் பஜ்ஜியுடன் காத்திருந்தோம். சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். “கிரீன்வேஸ் சாலை என்றீரே, அமைச்சர் யாரையேனும் பார்த்தீரோ?” என்றபடி சுடச்சுட பஜ்ஜியை நீட்டினோம். “கில்லாடிதான் நீரும். ஒரு மூத்த அமைச்சரை சந்தித்துவிட்டு வருகிறேன். ‘ஆளுங்கட்சி வட்டாரத்தில் பெரிய பிரளயம் வெடிக்கக்கூடும்’ என்றார் அந்த அமைச்சர்” என்றபடி செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார் கழுகார்.

“சில நாள்களுக்கு முன்னர், ‘சசிகலா வெளியே வந்தால் அ.தி.மு.க-வை வழிநடத்துவாரா?’ என்ற கேள்விக்கு, ‘நான் ஒரு சாதாரண மாவட்டச் செயலாளர். இது குறித்து அ.தி.மு.க தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்’ என்று ஓ.எஸ்.மணியன் கூறினார். அவர் நினைத்திருந்தால், ‘இந்தக் கேள்விக்கு இப்போது இடமே இல்லை. சசிகலா முடிந்துபோன சகாப்தம்’ என்று கேள்வியைக் கடந்திருக்கலாம். ஆனால், மணியன் பந்தை பெவிலியனுக்குத் திருப்பிவிட்டிருப்பதுதான் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது.”

“இதற்குத்தான், ‘சசிகலாவுக்கு அ.தி.மு.க-வில் இடமில்லை’ என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக விளக்கம் அளித்துவிட்டாரே!”

“இதை அ.தி.மு.க தலைமையே வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதுதான் சசிகலா ஆதரவு 14 அமைச்சர்களின் புதிய போர்க்கோலமாம். `கொரோனா தடுப்புப் பணி’ எனப் பெயருக்குக் குறிப்பிட்டாலும், சசிகலா விவகாரம் குறித்தும் விவாதிக்கத்தான்

ஜூன் 14-ம் தேதி அமைச்சரவை கூட்டப்பட்டதாம். ‘ஏறக்குறைய பத்து முறைக்கு மேல் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை மாற்றுவதற்கு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியாகிவிட்டது. ஆனால், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. கட்சி நிர்வாகம் சரிவர நடக்கவில்லை’ என்கிற புகார்கள் சசிகலாவுக்கு அடிக்கடி போய்க்கொண்டிருக்கிறதாம். இதையெல்லாம் வைத்துத்தான், ‘ஒரு முடிவுக்கு வாருங்கள்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர்கள் நெருக்க ஆரம்பித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.”

“ம்ம்…”

“மன்னார்குடி பிரமுகர் ஒருவர் மூலம் எடப்பாடி தரப்பு சசிகலாவை அணுகியதாக சசி ஆதரவு அமைச்சர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. ‘கட்சியை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தல் முடியும்வரை எடப்பாடியே ஆட்சிப் பொறுப்பைக் கவனிக்கட்டும். தினகரன் மட்டும் வேண்டாம்’ என்று எடப்பாடி தரப்பு தூது அனுப்பியதாகக் கூறுகிறார்கள். மறுபக்கம் பா.ஜ.க மேலிடத்துக்கு, ‘சசிகலாவை வெளியே விடாதீர்கள். தேர்தல் முடியும்வரை சிறைச்சாலையிலேயே இருக்கட்டும்’ என்றும் தகவல் பாஸ் செய்துள்ளதாம் எடப்பாடி தரப்பு. இது சசிகலா ஆதரவு அமைச்சர்களிடம் உஷ்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.’’

“அவர்களின் ரியாக்‌ஷன் என்ன?”

“டெல்டாவைச் சேர்ந்த ஒரு மூத்த அமைச்சர்கூட தன் சகாக்களிடம் இது பற்றிப் பகிர்ந்திருக்கிறார். சசிகலாவிடம் ஓ.பி.எஸ் தரப்பு இணக்கமாகப் போகவே விரும்புகிறது. தினகரனிடமிருந்து குடைச்சல் வந்தால், தான் பார்த்துக்கொள்வதாக அவருக்கு சசிகலாவும் உத்தரவாதம் அளித்துவிட்டாராம். மற்றொருபுறம் எடப்பாடித்தரப்பிலிருந்தும் சசிகலாவுக்கு தூதுவிட்டு வருகிறார்கள். ‘இதையெல்லாம் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் வெளிப்படையாகக் கூற வேண்டும்’ என்கிறார்களாம் சசி ஆதரவு அமைச்சர்கள். இதற்கிடையே இந்த டீலில், இதுவரை பவர்ஃபுல் இலாக்காக்களை வைத்திருந்த அமைச்சர்களையெல்லாம் கட்சிப் பணிக்கு அனுப்பச் சொல்கிறதாம் சசிகலா ஆதரவு அமைச்சர்கள் தரப்பு.”

“அதெல்லாம் நடக்கிற காரியமா? எடப்பாடி தன்னை ஒரு தலைவராக வெளிப்படுத்த ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிறதே?”

“உண்மைதான். ஆனால், சசி ஆதரவு அமைச்சர்களின் மனப்போக்கு அப்படி இருக்கிறது. சசிகலா மூலம் சீட்டு வாங்கி, பதவிக்கு வந்த பாசம் இப்படியெல்லாம் பேசவைக்கிறதாம். அதேசமயம், வெளிப்படையாக எடப்பாடியை எதிர்க்கவும் திராணி இல்லை. எங்கே பதவியை பிடுங்கி விட்டால் கிட்டத்தட்ட ஒரு வருட வருமானம் போய்விடுமே என்று அஞ்சுகிறார்களாம்.”

“என்ன செய்ய… அவர்கள் பயம் அவர்களுக்கு!’’

“எடப்பாடித் தரப்பிலும் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டார்களாம். சசிகலா ஆதரவு அமைச்சர்களைச் சின்ன முணுமுணுப்புகூட இல்லாமல் அடக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறதாம் எடப்பாடி தரப்பு. அதேசமயம், தர்மயுத்தம் தொடங்கிய பன்னீரையும் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை எடப்பாடி. சசிகலா பக்கம் போக வாய்ப்புள்ள நபர்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும் சொல்லியிருக்கிறார்கள். அதோடு, மாவட்ட வாரியாக சசிகலா ஆதரவாளர்கள் பட்டியலையும் தயார் செய்துள்ளார்கள்.’’

‘‘ஓஹோ!’’

‘‘மறுபக்கம் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தரப்பு நடத்திய ஒரு சர்வேயில், ‘பா.ஜ.க-வுடன் சேர்ந்து தேர்தலைச் சந்தித்தால் அ.தி.மு.க படுதோல்வியைச் சந்திக்கும்’ என்று முடிவுகள் வந்தனவாம். இதனால் பா.ஜ.க-வை தேர்தல்வரை சமாதானம் செய்து சமாளிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளார்கள்.”

“அ.தி.மு.க கூட்டணியில் வேறு எந்தக் கட்சிகள்தான் இடம்பிடிக்கும்?”

“இப்போதைக்குப் புதிதாக எதுவும் முடிவாகவில்லை. வட மாவட்டங்களில் பாமக-வுடன் கூட்டணியில் இருப்பதால் தைரியமாக இருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர். ஆனால், தைலாபுரத்தில் சமீபத்தில் நடந்த ஓர் ஆலோசனைக் கூட்டத்தில் வேறு மாதிரியாகப் பேசப்பட்டதாம். ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணியைத் தொடர்ந்தால், வரும் தேர்தலில் வெற்றி பெறுவது சிரமம்’ என்று பேச்சு அடிபட்டதாம். ஆனால், ராமதாஸ் அதற்குப் பிடிகொடுக்கவில்லை என்கிறார்கள். மேலும், அன்புமணிக்கு எதிராக ட்விட்டரில் தருமபுரி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் தெரிவித்த கருத்தில் கடும் கோபத்தில் இருக்கிறாராம் மருத்துவர். ஸ்டாலினைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டச் சொல்லியிருக்கிறார்.”

“தி.மு.க தரப்பும் தேர்தல் வேலைகளில் ஜரூர் காட்ட ஆரம்பித்துவிட்டதே?”

“அனைத்து தி.மு.க மாவட்ட நிர்வாகிகளுக்கும் இரண்டு பட்டியல்களுடன், சுற்றறிக்கைகளையும் ஐபேக் நிறுவனம் அனுப்பியுள்ளது. கட்சியில் பொறுப்பில் இல்லாத பழைய நிர்வாகிகள், ஒவ்வோர் ஊரிலும் இருக்கும் பிரபலமான நபர்கள், தி.மு.க ஆதரவு தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களைப் பட்டியலில் எழுதி தலைமைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க தலைவர் அந்த நபர்களுடன் விரைவில் கலந்துரையாடுவார் என்று சுற்றறிக்கையில் கூறியிருக்கிறார்களாம். மேலும், அந்தச் சுற்றறிக்கையில் கட்சியினருக்கு வேறு சில நிபந்தனைகளும் விதிக்கப் பட்டுள்ளனவாம்!”

“சரிதான்…”

“இதை முன்வைத்துத்தான் அ.தி.மு.க-வுக்காகப் பின்னணியில் வேலை செய்துவரும் சுனில் டீமைப் பார்த்துப் பொறாமையில் பொங்குகிறார்களாம் உடன்பிறப்புகள். ‘இங்க நாமெல்லாம் ஐபேக் நிர்வாகிகளைத் தாண்டி கட்சி மேலிடத்தை நெருங்க முடியலை. சுதந்திரமா ஒரு கட்சி வேலைகூடச் செய்ய முடியலை. ரொம்ப டார்ச்சர் பண்றாங்க. ஆனா, அ.தி.மு.க-வுல பாருங்க… சுனில் ஆளுங்க ஐடியா கொடுக்கற தோட நிறுத்திக்கிறாங்க. கட்சி நிர்வாகிகள்கிட்ட மரியாதையாவும் பக்குவமாகவும் பேசுறாங்க… கட்சி விஷயங்கள்ல தலையிடுறதில்லை’ என்கிறார்களாம்.”

“இக்கரைக்கு அக்கரை பச்சைதான்!”

“ராஜஸ்தான்போல பாண்டிச்சேரியிலும் பகடைக் காய்களை உருட்ட ஆரம்பித்துவிட்டது பா.ஜ.க. காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதால், அதைத் தங்களுக்குச் சாதகமாக்கி, காங்கிரஸையே இரண்டாக உடைக்கத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறதாம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சரும், சில எம்.எல்.ஏ-க்களும் இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டுகிறார்களாம். இந்தத் திட்டம் தெரிந்ததால் தான் அதிருப்தி எம்.எல்.ஏக்களில் ஒருவரான தனவேலுவை கட்சித்தாவல் சட்டத்தின்கீழ் அதிரடியாகத் தகுதிநீக்கம் செய்திருக்கிறதாம் காங்கிரஸ்” என்ற கழுகார், “ரஜினி கூட்டணி சம்பந்தமாக சிலருடன் பேச ஆரம்பித்திருக்கிறார். அவரது போனில் பல தலைவர்களின் குரல்கள் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: