வீட்டுக் கடனை முன்கூட்டியே முடிப்பது நல்லதா? – லாப நஷ்டக் கணக்கீடு!

ஒருவர் வீட்டுக் கடனை ஐந்து ஆண்டுகளில் செலுத்தி முடிக்கிறார் எனில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான வரிச் சலுகையை இழக்கிறார்.

டுத்தர வருமானப் பிரிவினர் அல்லது உயர் நடுத்தர வருமானப் பிரிவினரில் சிலர் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியிருப்பார்கள். இவர்களில் பலருக்கு இந்தக் கடன் மிகப்பெரும் சுமையாக, கவலை தருவதாக இருக்கும். அதனால் முடிந்தவரை விரைவாகக் கடனைச் செலுத்தி முடித்து, வீட்டுப் பத்திரத்தை வாங்கித் தங்கள் வசம் வைத்துக்கொள்வது என்பது பெரிய லட்சியமாகவே இருக்கும்.

ஆனால், மாதந்தோறும் சம்பளம் வாங்குபவர்களால் கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பது முடியாத செயலாகவே இருக்கும். தற்போதுள்ள கோவிட்-19 சூழலில் கடன் என்பது கூடுதல் சுமையாக இருக்கும். கையில் பணம் இருக்கும் பலர், வீட்டுக் கடனை முதலில் அடைத்துவிடும் எண்ணத்திலேயே இருக்கிறார்கள்.

தொழில்நுட்பத்தில் மேம்பட்டிருப்பவர்களுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கப் பல வழிகள் உள்ளன. கணவன்-மனைவி இருவரும் வேலைக்குப் போவதால், குடும்பத்தில் பணப்புழக்கம் உயர்ந்திருக்கும். ஐ.டி துறையில் அதிக சம்பளத்திலிருப்பவர்கள் கணிசமான தொகையைச் சம்பாதிக்க முடியும். இதுதவிர, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலையில் இருப்பவர்களிடம் கணிசமான தொகை இருக்கும். அதனால், `வீட்டுக் கடனிலிருந்து விரைவில் விடுதலை பெற வேண்டும்’ என நினைப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது.

ஆனால், முதல் சில ஆண்டுகள் கடனைச் செலுத்திவிட்டு, அதைத் தொடர்ந்து மொத்தத் தொகையையும் செலுத்துவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய யோசனை அல்ல. கடனை விரைவாகச் செலுத்தி முடிப்பதால் வருமான இழப்பையும், அரசின் பல சலுகைகளையும் நாம் இழக்கிறோம்.

உதாரணமாக, 40 லட்ச ரூபாய்க்கு ஒருவர் வீட்டுக் கடன் வாங்குகிறார்; இந்தக் கடனுக்கு ஆண்டுக்கு 8% வட்டி செலுத்துகிறார்; கடனைச் செலுத்தும் காலம் 15 ஆண்டுகள் என வைத்துக்கொள்வோம். மேலே சொன்ன தொகைக்கு மாதம் 37,500 ரூபாய் இ.எம்.ஐ செலுத்த வேண்டியிருக்கும். அப்படியானால், ஆண்டுக்கு 4.5 லட்ச ரூபாய் செலுத்தியிருப்பார். ஐந்தாண்டுக்கு சுமார் 22.50 லட்ச ரூபாய் செலுத்தியிருப்பார்.

`ஐந்து ஆண்டுகளில் இவ்வளவு தொகை செலுத்திவிட்டோம். அதனால் இனியும் அதிக தொகை செலுத்த வேண்டாம். இனி, கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம்’ என நினைத்தால், அந்த முடிவு மிகப்பெரிய தவறாக இருக்கும். ஐந்து ஆண்டுகளில் ரூ.22.50 லட்சம் செலுத்தியிருந்தாலும், இதில் அசலுக்காகச் செலுத்தப்பட்ட தொகை என்பது ரூ.8.50 லட்ச ரூபாய்தான். மீதமுள்ள 14 லட்ச ரூபாய் வட்டியாகத்தான் செலுத்தப்பட்டிருக்கும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 31.5 லட்ச ரூபாய் ரொக்கமாக இருந்தால்தான் இந்தக் கடனை அடைக்க முடியும். ஒருவேளை, அந்தத் தொகை இருந்தால்கூட கடனை உடனடியாக அடைக்காமல் இ.எம்.ஐ செலுத்துவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

ஏன் கடனை அடைக்க வேண்டாம்?

தற்போது பெரும்பாலான வீட்டுக் கடன்கள் ‘ரெட்யூஸிங் பேலன்ஸ்’ என்ற முறையில்தான் நிர்வகிக்கப்படுகின்றன. அதாவது, கடனைச் செலுத்தும் காலத்தில் முதல் ஐந்து ஆண்டுகளில் செலுத்தப்படும் தொகையில் வட்டிக்கு அதிகமாகச் செலுத்துவோம். ஆண்டுகள் செல்லச் செல்ல வட்டிக்காகச் செலுத்தும் தொகை குறைந்து, அசலுக்குச் செலுத்தும் தொகை உயரும்.

மேலே கூறிய உதாரணத்தில் 40 லட்ச ரூபாய் கடனுக்கு 15 ஆண்டுக் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டித் தொகை என்பது 28.80 லட்ச ரூபாய். இதில் கிட்டத்தட்ட சரிபாதித் தொகையை முதல் ஐந்து ஆண்டுக் காலத்தில் செலுத்தியிருப்பீர்கள்.

இரண்டாம் ஐந்து ஆண்டுக் காலத்தில் செலுத்தப்படும் 22.5 லட்ச ரூபாய் தவணைத் தொகையில் 12.65 லட்ச ரூபாய் அசலுக்காகவும், சுமார் 10 லட்ச ரூபாய் வட்டிக்காகவும் கணக்கிடப்படும். இப்படிப் பார்த்தால், மூன்றாம் அல்லது கடைசி ஐந்து ஆண்டுக் காலத்தில் வட்டிக்காகச் செலுத்தும் தொகை என்பது சுமார் ரூ.4 லட்சம் மட்டுமே.

முதல் ஐந்து ஆண்டுகளில் இ.எம்.ஐ செலுத்தியதில் நாம் வட்டிக்காகச் செலவு செய்த தொகை மிக மிக அதிகம். கடன் தொகையில் வட்டிக்காக அதிக தொகை செலுத்தும் சமயத்தில் இ.எம்.ஐ-யைச் சரியாகச் செலுத்திவிட்டு, வட்டி குறையும் இந்த நேரத்தில் கடனை முன்கூட்டியே முடிப்பது சரியான செயலாக இருக்காது.

என்ன செய்யலாம்?

சம்பாதித்த தொகை அதிகமாக இருக்கிறது; கடனை முன்கூட்டியே முடிப்பது சரியான செயலாக இல்லை என்னும்பட்சத்தில் நாம் என்ன செய்யலாம்? ஐந்து அண்டுகளுக்குப் பிறகு உங்களிடம் சுமார் 32 லட்ச ரூபாய் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். இந்தத் தொகையை ஏதாவது நிரந்தர வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதாக வைத்துக்கொண்டால், மாதம் சுமார் 21,000 ரூபாய் அளவுக்கு வருமானம் (8% வருமானம் எனக் கணக்கிட்டால்) கிடைக்கும். மீதம் 16,500 ரூபாய்தான் கையிலிருந்து செலுத்த வேண்டியதாக இருக்கும். தவிர, வீட்டுக் கடனுக்காக வரிச் சலுகை கிடைக்கிறது. இந்த வரிச் சலுகையை வேறு எந்த முதலீட்டுத் திட்டத்திலும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. நிதியாண்டில் திரும்பச் செலுத்தும் தொகையில் வட்டிக்கு 2 லட்ச ரூபாயும், அசலுக்கு 1.5 லட்ச ரூபாயும் வரிச் சலுகையாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஒருவர் வீட்டுக் கடனை ஐந்து ஆண்டுகளில் செலுத்தி முடிக்கிறார் எனில், அடுத்த 10 ஆண்டுகளுக்கான வரிச் சலுகையை இழக்கிறார். ஒருவர் 20% வரி வரம்பில் இருக்கிறார் என்றால், ஆண்டுக்கு 3.5 லட்ச ரூபாய் வீட்டுக் கடன் செலுத்துவதன் மூலம் ரூ.70,000 சேமிக்க முடியும். பத்து ஆண்டுகளுக்கு என்னும்பட்சத்தில், 7 லட்ச ரூபாயை வரி சேமிப்பிலிருந்து பெற முடியும். கையிலிருக்கும் தொகையை முதலீடு செய்து, அதில் கிடைக்கும் வட்டியை வைத்துக்கொண்டு இ.எம்.ஐ செலுத்தும்பட்சத்தில், வீட்டுக் கடன் முடியும் நேரத்தில் வரிச் சலுகையும் பெற முடியும். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு வீடும் சொந்தமாக இருக்கும். தவிர, ஏற்கெனவே உள்ள பணமும் பத்திரமாக இருக்கும்.

`கடன் இருக்கக் கூடாது’ என்பது நல்ல கொள்கைதான். ஆனால், அந்தக் கொள்கை அநாவசியச் செலவுகளுக்கான கடன்களைத் தவிர்ப்பதற்காகவே தவிர, வீட்டுக் கடனுக்கு அல்ல என்பதை அறிந்துகொள்வது அவசியம். சொத்தை உருவாக்கப் பயன்படும் வீட்டுக் கடன் நல்லதுதான்!

%d bloggers like this: