அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலா கையிலா?’ – கொதிக்கும் அமைச்சர்கள்; மௌனம் காக்கும் சீனியர்கள்

சசிகலா விரைவில் ரிலீஸ் ஆகப்போகிறார்’ என்று உலாவிக் கொண்டிருக்கும் தகவல். அ.தி.மு.க நிர்வாகத்தில் பலரின் உறக்கத்தைக் கெடுத்திருக்கிறது. சசிகலா வருகையை எதிர்பார்த்தும் அ.தி.மு.க-வில் ஓர் கூட்டம் காத்திருக்கிறது.

அதேநேரம், ‘சசிகலா இப்போதைக்கு ரிலீஸாக வாய்ப்பில்லை’ என்று திட்டவட்டமாக அடித்துச் சொல்கிறார்கள் சில அ.தி.மு.க அமைச்சர்கள். தஞ்சையில், நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘‘இரண்டு அண்ணன்களும் கட்சியையும் ஆட்சியையும் செம்மையாகக் கொண்டு செல்கிறார்கள்.

சசிகலா விரைவில் விடுதலை ஆகப்போகிறார் என்ற தகவல் வதந்தி. யாரும் நம்ப வேண்டாம். எங்களின் ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது’’ என்றார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில், நேற்று சித்த மருத்துவ மையத்தைக் கலகலப்பாக திறந்து வைத்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணியின் முகம் அடுத்த சில நொடிகளில் இறுக்கமானது. அதற்குக் காரணம் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்புதான். ‘சசிகலா ரிலீஸால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா?’ என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்ப மற்ற நிருபர்களும் சசிகலா தொடர்பான கேள்விகளையே கேட்கத் தொடங்கினர்.

அமைச்சர் வீரமணியோ, ‘‘சசிகலா வெளியில் வருவது குறித்து அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவில்லை. அவர் ரிலீஸ் என்று ஊடகங்கள்தான் சொல்கின்றன. சசிகலா வந்தாலும் என்றுமே அவரும் அவரது குடும்பத்தாரும் அ.தி.மு.க-வின் எதிராளிகள்தான். அவர்களை எதிர்த்துத்தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்தக் கருத்தில், எங்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க-வில் இருந்து எவருமே சசிகலா பின்னால் செல்ல மாட்டோம்’’ என்றவர் அமைச்சர் காமராஜின் கருத்தை வழிமொழிந்து இ.பி.எஸ், ஓ.பி.எஸ்-ஸை புகழ்ந்து தள்ளினார்.

இரண்டாம் கட்ட அமைச்சர்கள் மட்டுமே சசிகலா குறித்து வாய்திறக்கும் சூழலில் மூத்த அமைச்சர்களான செங்கோட்டையன் உள்ளிட்டோர் தொடர்ந்து மௌனம் சாதித்துவருவதும் அ.தி.மு.க வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திவருகிறது.

‘‘சசிகலா அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் விடுதலை ஆக வாய்ப்புள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தல் அ.தி.மு.க-வின் வாழ்வா.. சாவா போராட்டமாக அமையும். தோல்வியைத் தழுவும் பட்சத்தில் அ.தி.மு.க-வின் எதிர்காலம் சசிகலாவின் கையில் சென்றுவிடும். இப்போதைக்கு சசிகலா குறித்து தனிப்பட்ட கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என்று தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. பத்திரிகையாளர்களின் தொடர் கேள்விகளுக்கு பின்வாங்கக் கூடாது என்கிற நோக்கத்தில்தான் அமைச்சர் வீரமணி பதில் அளித்தார்’’ என்கிறது அமைச்சரின் உதவியாளர் வட்டாரம்.

%d bloggers like this: