கொரோனா யாரை பலி கொள்கிறது; சர்க்கரை, இருதய நோயாளிகள் கவனத்திற்கு..

மதுரை அரசு மருத்துவ மனையில் கொரோனா இறப்பு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. மொத்த இறப்பில் 82.8 சதவீதம் பேர் இணை நோய் இருந்தவர்கள். 72.62

சதவீதம் பேர் அறுபது வயதை கடந்தவர்கள் ஆவர்.சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 1.3 சதவீதம் பேர் மரணத்தை தழுவுகின்றனர். மதுரையில் தினமும் 5 பேரை கொரோனா காவு கேட்கிறது. நேற்று முன் தினம் வரை மாவட்டத்தில் 129 பேர் பலியாகி இருந்தனர். பெரும்பாலானா இறப்பு மதுரை அரசு மருத்துவமனையில் நேர்ந்தது. இங்கு நடந்த இறப்புகளுக்கான காரணங்களை சிறப்பு டாக்டர் குழுவினர் ஆராய்ந்தனர். இதன் விபரம்:ஆண்கள் 78.9 சதவீதம்* ஜூலை 7 வரை மதுரை அரசு மருத்துவமனையில் 95 பேர் கொரோனா தாக்கி இறந்துள்ளனர். இதில் 74 பேர் ஆண்கள்.21 பேர் பெண்கள். அதாவது, ஆண்கள் 78.9, பெண்கள் 21.1 சதவீதம் பலியாகி இருக்கின்றனர்.* மொத்த இறப்பில் 72.63 சதவீதம் பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள். அதாவது அறுபதை கடந்த 69 பேர் இறந்துள்ளனர். 60 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் 26 பேர்.* 75.4 சதவீதம் பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 24.6 சதவீதம் பேர் திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.* இதில் 66.2 சதவீதம் பேர் நகர் பகுதியில் வசித்தவர்கள். 33.8 சதவீதம் பேர் கிராமங்களை சேர்ந்தவர்கள்.இறப்பிற்கு காரணம் என்ன* நோய் அறிகுறியுடன் காணப்பட்டவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர். இவர்களின் விகிதம் 95.4 சதவீதமாகும். அறிகுறியின்றி பலியானவர்கள் 4.6 சதவீதமாகும்.* குறிப்பாக இணைநோய்களால் அவதிப்பட்டவர்கள் தான் 82.8 சதவீதம் பேர் இறந்துள்ளனர். இறப்புக்கு கொரோனா மட்டுமே காரணமானவர்கள் 17.2 சதவீதம் தான்.* 35.5 சதவீதம் பேருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இணை நோய் இருந்துள்ளன. குறிப்பாக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் ஆகிய இரண்டும் இணைந்தே இருந்தவர்கள் அதிகம்.* மொத்த இறப்பில் 59.6 சதவீதம் பேர் சர்க்கரை நோயாளிகள். 42.5 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டவர்கள், 18.8 சதவீதம் பேர் இருதய நோயாளிகள், 12 சதவீதம் பேர் நாட்பட்ட சிறுநீரக, நுரையீரல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.வீட்டிலேயே கவனம் தேவை:இது குறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த சர்வே முடிவை பார்த்தால் அரசு ஏன் முதியவர்கள், இணை நோய் இருப்பவர்களை வீட்டில் பத்திரமாக இருக்க சொல்கிறது என்பது புரியும். அவர்கள் மட்டும் வீட்டில் இருந்தால் போதாது.

அவர்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள மற்றவர்களும் அத்தியாவசிய தேவைத் தவிர வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அடிக்கடி கைகழுவ வேண்டும். வீட்டிற்கு திரும்பியதும் சோப்பால் 20 வினாடிகள் கைகளை தேய்த்துக் கழுவ வேண்டும்.

வீட்டில் இருக்கும் இணை நோயாளிகள், முதியவர்களுடன் நெருக்கம் காட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்போது தான் தொற்றில் இருந்து அவர்களை காக்க முடியும், என்றார்.சர்க்கரை நோயாளிகளுக்கு…* நிலவேம்பு, கபசுரக் குடிநீரை பருக வேண்டும். பருப்பு வகை, முட்டையின் மஞ்சள் கரு, மீன், முழுதானியங்களை உட்கொள்ளவும்.* வாரம் ஒரு முறை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை பரிசோதனை செய்யவேண்டும். குளுக்கோ மீட்டர் கருவியை வைத்திருந்தால் வீட்டிலேயே சுய பரிசோதனை செய்து சர்க்கரை அளவை கண்காணிக்கலாம்.* கால் மற்றும் பாதங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.* பச்சை மற்றும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உண்ணவும்.

மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.* தினமும் மருந்துகளை தவறாமல் சாப்பிட்டு, நோயை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.* இன்சுலின் சிகிச்சையில் இருப்பவர்கள் நீர் மற்றும் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டால் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவை அணுக வேண்டும்.உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் உண்டா* கொரோனா தொற்று காலத்தில் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருப்பது மிகவும் அவசியம். எனவே நீங்கள் உட்கொள்ளும் மாத்திரைகளை தாமாக நிறுத்தக் கூடாது.* புகைப்பிடிப்பது, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.* மாதம் ஒருமுறை ரத்த அழுத்தத்தை தவறாமல் சோதிக்கவும்.* மருத்துவரின் ஆலோசனையின்றி சுய வைத்தியம் செய்யக்கூடாது. குறிப்பாக வலி நிவாரணி, ஸ்டீராய்டு போன்ற மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது.இருதய நோயாளிகள் கவனத்திற்கு…* இருதய நலனை காக்க முதலில் தேவையற்ற அச்சத்தை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக எதிர்மறை செய்திகளை தவிர்க்கவும்.* வீட்டிற்குள்ளேயே நடைபயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். எளிய சுவாசப் பயிற்சிகள் சோர்வை போக்க உதவும்.* தினமும் 8 மணி நேரம் துாங்குங்கள். பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முன்பு போலவே தொடர வேண்டும்.* இருதய செயலிழப்பு நோயுள்ளவர்கள் உப்பு மற்றும் நீர் கட்டுப்பாடுகளை அவசியம் பின்பற்ற வேண்டும்.* மாரடைப்பு நோய்க்கான கரோனரி ஸ்டெண்டுகள் பொருத்தப்பட்டவர்கள், தவறாமல் மருந்தை தொடர வேண்டும்.* இருதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சமநிலை கலோரி உணவு எடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள பொருட்களை தவிருங்கள்.

%d bloggers like this: