எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வருவதை விரும்பும் பி.ஜே.பி’ – பின்னணி என்ன?

என்ன கழுகாரே… கிரீன்வேஸ் சாலையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறீரே..?’’ – நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை தட்டில்வைத்து நீட்டியவாறு கழுகாரை வரவேற்றோம். ‘‘அதுதான் நீர் குண்டு போட்டு, அமைச்சர்களைக் கதிகலங்க வைத்துவிட்டீரே…’’ – ஆப்பிள் துண்டுகளைச் சுவைத்தபடி செய்திகளைக் கொட்டினார் கழுகார்.

“15.7.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் ‘கொரோனா வலையில் எடப்பாடி?’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தீர்கள். அதைப் படித்த முதல்வர், ‘நான் எனது அலுவலகத்தில்

உள்ளவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யவிருக்கிறேன். அதேபோல் நீங்களும், உங்களைச் சுற்றிலும் இருப்பவர்களும் டெஸ்ட் செய்துவிடுங்கள்’ என்று அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார். அதையடுத்து அமைச்சர்களின் வீடு, அலுவலகங்களில் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. இதில், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் பி.ஏ ஒருவருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து, ஓ.எஸ்.மணியனை சில நாள்கள் வீட்டில் தனிமையில் இருக்கும்படி டாக்டர்கள் சொன்னார்களாம். இதனால், ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு அவர் வரவில்லை. அதேபோல, உடல்நிலை சீராக இல்லாததால் நிலோஃபர் கபிலும், சி.வி.சண்முகமும் வரவில்லை. இவர்கள் போக, கொரோனா பாதிப்பால் மூன்று அமைச்சர்களும் வரவில்லை.’’

‘‘ஓஹோ!’’

‘‘நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா அறிவாலயத்தில் அவரின் படத்துக்கு மரியாதை செய்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், ‘நாவலரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். நாவலருக்கு முழு உருவ வெண்கலச் சிலை சென்னையில் அமைக்கப்படும்’ என்று முதல்வர் அறிக்கை வெளியிட்டார். ஆனால், அவரின் பிறந்தநாளை தி.மு.க பாணியில் கொண்டாடாததில் அ.தி.மு.க-வின் சீனியர் புள்ளிகளுக்கு வருத்தம். ‘கருணாநிதியுடன் நெடுஞ்செழியன் இருந்த காலத்தைவிட அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் அவர் இருந்ததுதான் அதிகம். அ.தி.மு.க ஆட்சி நடக்கும் இந்த நேரத்தில், நாவலருக்கு தி.மு.க-வைப்போல மரியாதை செய்யவில்லை’ என்பது அவர்களின் வருத்தமாம்.’’

‘‘தி.மு.க-வில் ஏதும் செய்தி உண்டா?’’

‘‘தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 16 அன்று காணொளிக் காட்சி வாயிலாக நடந்தது. மின்கட்டண உயர்வுக்கு எதிராகக் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளனர். இளைஞரணி ஆரம்பித்து நாற்பது ஆண்டுகளாகிவிட்டதால், அதை எப்படிக் கொண்டாடலாம் என்று ஆலோசனை நடந்துள்ளது. ஏற்கெனவே ‘ஐபேக்’ நிறுவனம் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. பழைய நிர்வாகிகள், பிரபலமான நபர்கள், தி.மு.க ஆதரவு தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களின் விவரங்களைப் பட்டியலில் எழுதி, தலைமைக்கு அனுப்பச் சொல்லியிருந்தனர். கடந்த சந்திப்பின்போதே இதுபற்றி நான் உம்மிடம் கூறியிருந்தேன். `விரைந்து அந்தப் பட்டியலைத் தயார் செய்து அனுப்ப வேண்டும்’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார் ஸ்டாலின். `சரியான நபர்கள் அந்தப் பட்டியலில் இருக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.’’

கழுகாரிடம் ரவா கேசரியை நீட்டியபடி, “ஏதோ அரைத்த மாவையே அரைப்பதாக கமலாலயத்தில் பேச்சு ஓடுகிறதே..?” என்றோம். ‘‘அந்தச் செய்தியைப் பகிர்வதால், அரைத்த மாவை அரைப்பதாக என்னையும் சொல்லிவிடாதீர்’’ என்று சிரித்த கழுகார், கேசரியைச் சுவைத்தபடியே சொல்ல ஆரம்பித்தார்.

‘‘தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வரும் முன்னரே, ஆட்சிக்குச் சிக்கல் வருவதை விரும்புகிறதாம் பி.ஜே.பி. காபந்து அரசாகச் செயல்பட்டால், ஆளுநரைவைத்து அடுத்த ஆண்டில் தமிழகத்தில் ஒரு ரவுண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாம். மத்திய அரசின் திட்டங்களை மாநிலம் முழுவதும் காவிப் படைகளைக்கொண்டு விளம்பரப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்களாம். ‘அ.தி.மு.க – பா.ஜ.க இடையே உறவு நீடிக்காது. எனவே, சுயநலத்துடன் செயல்பட்டாக வேண்டும். தேவை ஏற்பட்டால் தனித்து களமிறங்கவும் வேண்டும்’ என்று சீரியஸாகப் பேசுகின்றனராம்.’’

“சரிதான்… ரஜினியின் அரசியல் வருகையைப் பற்றி கராத்தே தியாகராஜன் பேசியிருக்கிறாரே..?’’

‘‘அவர் அதைப் பேசாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். ரஜினியைச் சந்தித்துவிட்டு வந்துதான் நவம்பரில் ரஜினி கட்சி தொடங்கப்போவதாக கராத்தே கூறியிருக்கிறார். மாநாடு நடத்தி, கட்சி தொடங்குவதைப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது ரஜினியின் திட்டமாம். ஆனால், இப்போதுள்ள கொரோனா சூழலில் மாநாட்டை நடத்த முடியாத நிலை. இதனிடையே அரசியல் வியூகம் வகுக்கும் அணி ஒன்று ரஜினியைச் சந்தித்துப் பேசியுள்ளது. ‘மாநாட்டை இணைய வழியாக நடத்தலாம். இப்போது உங்களுக்கு உள்ள செல்வாக்கு, சமூக வலைதளங்களின் தாக்கம் ஆகியவற்றால் உங்கள் பேச்சை ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் பார்க்க ஏற்பாடு செய்துவிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ரஜினி வழக்கம்போல அமைதியாகக் கேட்டுக் கொண்டாராம்” என்ற கழுகார், “வாரிசு அரசியலை எதிர்த்துப் போரிட்ட ஒருவர். அதே வாரிசு அரசியலைக் கையிலெடுத்திருப்பது தெரியுமா உமக்கு?” என்றார்.

“யாரைச் சொல்கிறீர்?” என்றோம் ஆர்வம் கலையாமல்.

குறும்புப் பார்வை பார்த்த கழுகார், “வைகோவைத்தான் சொல்கிறேன். தி.மு.க-வில் வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக 1994-ம் ஆண்டில் அந்தக் கட்சியிலிருந்து பிரிந்து தனி இயக்கம் கண்ட வைகோதான், இன்று தன் மகன் துரை வையாபுரிக்காக வாரிசு அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார். இவ்வளவு காலம் தன் குடும்பத்தினர் யாரையும் அரசியலுக்குள் கொண்டு வராமல் இருந்த வைகோ, சில மாதங்களாக தன் மகனை ம.தி.மு.க-வுக்குள் கொண்டுவர முயல்வதாகக் கட்சியினர் தெரிவிக்கிறார்கள். ‘துரை வையாபுரி’ எனத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அவர் மகன், ‘துரை வைகோ’ என்கிற பெயரில் செயல்படத் தொடங்கிவிட்டார். பொது நிகழ்ச்சிகள், உலகத் தொழில்முனைவோர் கூட்டமைப்பு எனப் பல்வேறு அமைப்புகளின் காணொளி நிகழ்ச்சிகளில் தயங்காமல் பங்கேற்கிறார்.

அண்மையில் பள்ளி நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தன் தந்தைக்குத் தமிழக அரசியலில் உரிய இடத்தைக் கொடுக்க மக்கள் தவறிவிட்டதாக நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். கட்சி சார்ந்த விஷயங்களைக்கூட மாவட்டச் செயலாளர்களுக்குக் கட்டளையிடும் அளவுக்கு ‘துரை வைகோ’வின் செயல்பாடு இருப்பதாக மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ‘தன் காலத்திலேயே கட்சியில் துரைக்கு முக்கியப் பொறுப்பு இருக்க வேண்டும் எனத் தலைவர் விரும்புகிறார். இனி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலுமே துரை வைகோ பெயரும் இடம்பெறும்’ என்கிறார்கள் ம.தி.மு.க-வின் சீனியர்கள்.’’

‘‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?’’

கிளம்ப ஆயத்தமான கழுகார், ‘‘மதுரை மாவட்டத்திலிருக்கும் பாலமேடு எனும் ஊர் தேனி எம்.பி தொகுதிக்குள் வருகிறது. இந்த ஊர்் கோயில் காளை ஒன்று, பழகி வந்த பசுமாட்டைப் பிரிய மனமில்லாமல் பாசப் போராட்டம் நடத்தியது தென் மாவட்டங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஷயமறிந்த தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் சகோதரரும், பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகனுமான ஜெயபிரதீப், தன் சொந்தப் பணத்தில் பசுமாட்டை விலைக்கு வாங்கி, காளை இருக்கும் மஞ்சமலை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார். தன் அண்ணன் தொகுதியில் கோயில் காளை வருத்தப்படுவது பாவ காரியம் என்பதால், உடனடியாகக் காளையுடன் பசுவைச் சேர்த்துவிட்டாராம்” என்றபடி சிறகுகள் விரித்தார்.

%d bloggers like this: