அதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா? தேர்தல் வியூகம் எப்படி இருக்கும்.

2016 சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கிய அதிமுக வரப்போகும் 2021 சட்டசபைத் தேர்தலில் கூட்டணி அமைக்குமா? தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்று எதிர்கட்சியினர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே இருக்கிறது. ஆளுங்கட்சி,

எதிர்கட்சி,கூட்டணியை எதிர்பார்த்திருக்கும் கட்சி என அனைத்து கட்சியினருமே தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேரடியாக நிர்வாகிகளை சந்தித்து பேச முடியாவிட்டாலும் வீடியோ காண்பரன்ஸ் மூலமாக பேசி வியூகம் வகுத்து வருகின்றனர்.ஆளுங்கட்சியான அதிமுக கடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்து களமிறங்கியது. இந்த சட்டசபைத் தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும், தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் எதிர்கட்சியினர் கவனிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

துணைவலியும் தூக்கிச் செயல்

இந்த திருக்குறல் அரசியல் கூட்டணிக்கும் வியூகத்திற்கும் அதிகமாகவே பொருந்தி வரும். தான் செய்யப்போகும் காரியத்தின் பலன், தன்னுடைய பலம், தன்னுடைய எதிரியின் பலம், தன்னுடைய கூட்டாளிகள் பலம், எதிரியின் கூட்டாளிகளின் பலம் என அனைத்து பலத்தையும் அறிந்து களமிறங்கினால் நம்முடைய காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

அரசியல் களத்தில் தன் பலத்தோடு கூட்டணி பலமும் மிகவும் முக்கியம். இது மறைந்த முதல்வர்கள், தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு நன்றாகவே தெரியும். எனவேதான் எந்த நேரத்தில் கூட்டணி சேரவேண்டும் எந்த நேரத்தில் தனித்து போட்டியிட வேண்டும் என்று தெளிவாகவே அறிந்திருப்பார்கள்.

அரசியல் வியூகம்

இந்த சாணக்கியத்தனமும், அரசியல் வியூகமும் இப்போது இருக்கும் தலைவர்களுக்கு எந்த அளவிற்கு கைகூடி வரும் என்று தெரியாது. லோக்சபா தேர்தலில் திமுக,காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கூட்டணி இணைந்தது. அதே போல அதிமுக அணியில் பாஜக, புதிய தமிழகம், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்தன.

அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு

அதிமுகவிற்கு தொண்டர்பலம் அதிகம் இருக்கிறது. அந்த தைரியம் மட்டுமல்லாது இளம் வாக்காளர்களை மனதில் வைத்தும் கடந்த 2016 சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி வெற்றி பெற்றார் ஜெயலலிதா. பல முனை போட்டியும் அதிமுகவின் வெற்றிக்கு வாய்ப்பாக அமைந்தது. ஜெயலலிதாவின் கணிப்பு பொய்க்கவில்லை. இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார்.

கூட்டணி வியூகம்

இரண்டு முறையும் திமுக ஆட்சியை பிடிக்காமல் பார்த்துக்கொண்ட சாமர்த்தியமும் ஜெயலலிதாவிடம் இருந்தது. இந்த முறை பாஜக, பாமக, தேமுதிக கட்சிகள் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் கூட்டணியில் இணைந்திருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல்களிலும் இதே கூட்டணி நீடித்தது. இந்த சட்டசபைத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் பட்சத்தில் திமுகவிற்கு எதிரான பலமான கூட்டணியாகவே அமையும்.

அன்புமணி பேச்சு

அதே நேரத்தில் கடந்த மார்ச் மாதத்தில் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், யாருடன் கூட்டணி என்பது பற்றி எதுவுமே பேசவில்லை. அதே நேரத்தில், அதிமுக, திமுக போன்ற கட்சிகள் ஆட்சி செய்வதற்காக நாங்கள் கட்சி தொடங்கவில்லை எங்கள் கட்சி ஆட்சி அமைப்பதற்காக கட்சி தொடங்கியிருக்கிறோம் என்று கூறினார். சட்டசபைத் தேர்தல் நேரத்தில் நாங்கள் கூட்டணியில் இருப்போமா? இல்லையா? யாருடன் கூட்டணி சேருவோம் என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.

3வது முறையாக அதிமுக

தேமுதிகவின் முடிவு பற்றி இதுவரைக்கும் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் சட்டசபைத் தேர்தலில் அதிமுக உடன் பாஜக நீடிக்கும் என்பது உறுதியானதாகவே இருக்கிறது. இந்த கூட்டணி கட்சிகளின் பலத்தோடு தனது கட்சித் தொண்டர்களின் பலம், கொரோனா காலத்தை ஆளுங்கட்சி கையாண்ட விதம், மக்களிடையே இந்த ஆட்சிக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவை எல்லாம்தான் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையை மீண்டும் அரியணையில் ஏற வைக்கும்.

தேர்தல் கூட்டணி கணக்குகள்

என்னதான் கார்ப்பரேட் நிறுவனங்கள் வியூகம் வகுத்து கொடுத்தாலும், தோற்றங்களை மாற்றினாலும், செயல்பாடுகளைப் பார்த்து மக்கள் செய்யும் முடிவில்தான் வாக்குகள் விழும் என்பதை ஜெயலலிதா நன்றாக உணர்ந்தவர். இதை 2011, 2016 தேர்தலில் சரியாக கையாண்டார் ஜெயலலிதா. அதே போல ஈபிஎஸ், ஓபிஎஸ் சாமர்த்தியமாக காய் நகர்த்துவார்களா? சாணக்கியத்தனத்தை கடைபிடிப்பார்களா? என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்து விடும்.

%d bloggers like this: