மன அழுத்தம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்!

எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள், சர்க்கரை கோளாறு பற்றிய சந்தேகங்கள், ஆலோசனைகளை விட, ‘என்னுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, என்ன செய்ய வேண்டும் டாக்டர்?’ என்பதாகவே இருக்கிறது.

ஒரு மாத்திரையை விழுங்கினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விடும் என்று சொல்லும் அளவுக்கு, உடனடியாக கிடைக்க கூடிய விஷயம் இல்லை இது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, முறையாக தினசரி சிலவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அதில் முக்கியமான ஐந்தை சொல்கிறேன்.
‘டயட்’ஆரோக்கியமற்ற, ஊட்டச்சத்து இல்லாத, துரித உணவுகளை சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உணவு சாப்பிட்டால், போதுமான அளவு இன்சுலின் ஹார்மோன் சுரப்பு இல்லாமல், உடலின் உள் உறுப்பில் வீக்கத்தை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும்.
புரதம்
புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை, தினமும் சாப்பிட வேண்டும். அசைவ உணவுகளில் மீன், முட்டையின் வெள்ளை கரு, கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி போன்றவற்றில் புரதம் நிறைய உள்ளது.
சைவ உணவில், பால், அனைத்து பருப்பு வகைகள் மற்றும் காளான் இவற்றிலும் புரதம் உள்ளது. தினசரி உணவில் இவை இடம் பெற்றால், போதுமான அளவு புரத சத்து கிடைக்கும்.வேர்க்கடலை, வால்நட், முந்திரி , பாதாம் போன்ற கொட்டை வகைகள் கேக், எள், வெள்ளரி விதை, பூசணி விதை, கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் நல்ல கொழுப்பு உள்ளது. இவற்றை, தவறாமல் பயன்படுத்துவதால், நோய் எதிர்ப்பு சக்தி, நல்ல நிலையில் இருக்கும்.
உடற்பயிற்சிதினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, அவ்வளவு எளிதில் உடல் நலமில்லாமல் போவதில்லை; ‘கோவிட் 19’ உட்பட, எந்த தொற்றும் எளிதில் பாதிப்பதில்லை. அப்படியே தொற்று பாதித்தாலும், அதை எளிதாக சமாளிக்க முடியும்.
‘ரிலாக்ஸ்சேஷன்’
யாரெல்லாம் மன அழுத்தம், பதற்றம், படபடப்பு, வருத்தமான மனநிலை போன்ற எதிர்மறை மன உணர்வுகளுடன் இருக்கின்றனரோ, அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி, தானாகவே குறைந்து விடுகிறது. மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதற்கு தியானம், யோகா, பிராணாயாமம், புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது என்று, எது செய்தால் முழு மனதுடன் செய்ய முடியுமோ, அதை தினமும் குறிப்பிட்ட நேரம் செய்ய வேண்டும்.
துாக்கம்
துாக்கம் வரவில்லை, குறிப்பிட்ட நேரத்தில் துாங்க முடிவதில்லை என்று துாங்காமல் இருப்பதற்கு எந்த காரணத்தையும் தேடக் கூடாது. ஒரு நாளில், ஆறு – எட்டு மணி நேரம் துாக்கம் அவசியம். சராசரியாக, ஏழு மணி நேர துாக்கம் என்பது முக்கியம்.எங்கள் மையம் உட்பட, பல்வேறு மருத்துவ ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளது.
ஆறு மணி நேரத்திற்கு குறைவாக துாங்கினால் அல்லது எட்டு மணி நேரத்திற்கு அதிகமாக, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று துாக்கம் இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதற்காக, ஒரு நாளில் எந்த எட்டு மணி நேரம் வேண்டுமானாலும் துாங்கலாம் என்று அர்த்தம் இல்லை. இதனால், ‘பயலாஜிகல் கிளாக்’ எனப்படும், உயிர் கடிகாரம் பாதிக்கப்படும். அதிகபட்சம், இரவு, 11:00 மணிக்கு துாங்கி, காலை, 6:00 மணிக்கு எழுந்து, உடற்பயிற்சி செய்வது சரியாக இருக்கும்.
சர்க்கரை கட்டுப்பாடு
சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய கோளாறு, ஆஸ்துமா போன்று, நீண்ட காலம் இருக்கும் கோளாறுகளுக்கு, முறையான மருத்துவ ஆலோசனை பெற்று, டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளை, தவறாமல் சாப்பிட வேண்டும். கோளாறுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நீண்ட நாள் கோளாறு எதுவானாலும் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், ‘கோவிட் 19’ மட்டுமல்ல, எந்த தொற்றும் பாதிக்காது.
டாக்டர் வி. மோகன்,
நீரிழிவு மருத்துவ நிபுணர்,
சென்னை.
7825888631

%d bloggers like this: