ஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்; தினகரன் மகள் திருமணப் பின்னணி; தொகுதி மாறும் எடப்பாடி? – கழுகார் அப்டேட்ஸ்!

மகனுக்கு பதவி இல்லை… ஓ.பி.எஸ் மாஸ்டர் பிளான்!

சமீபத்தில் வெளியான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் மாற்றங்கள், நியமனம் பட்டியலில் தேனி இடம்பெறாதது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே ஆச்சர்யத்தை வரவழைத்துள்ளது. மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து அதில் ஒன்றைத் தனது இளைய மகன் ஜெயபிரதீப் கையில் கொடுத்து ஓ.பி.எஸ் அழகு

பார்ப்பார் எனப் பேச்சு ஓடிய நிலையில், அப்படி எந்த அறிவிப்பும் வரவில்லை. ஏற்கெனவே ஒரு மகன் எம்.பி-யாக இருக்கும் நிலையில் இன்னொரு மகனுக்கு பதவி கொடுத்தால் அது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்பதால், தற்போது பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் தேனி இடம்பெறவில்லையாம். `பதவி கிடைக்கலைன்னா என்ன, ஆண்டிப்பட்டி தொகுதியில சீட் கொடுக்கக்கூட அண்ணன் நினைச்சிருக்கலாம்’ என்று கிசுகிசுக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

சீட்டு கிடைக்கலாம்… ஓட்டு?

தினகரன் மகள் திருமணம்… ஆச்சர்யத்தில் மூழ்கிய டெல்டா!

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரணிக்கும், `கல்விக்காவலர்’ என டெல்டாவில் அழைக்கப்படும் பூண்டி துளசி அய்யா வாண்டையாரின் பேரனும் காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகனுமான ராமநாதனுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல்தான் டெல்டாவின் ஆச்சர்ய பேச்சாக வலம்வருகிறது.

“பூண்டி துளசி அய்யா வாண்டையார் முழு மனதுடன் இந்தத் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா?” என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. பூண்டி புஷ்பம் கல்லூரி மூலமாக ஏழை மக்களுக்கு கல்விச்சேவை புரிவதுடன், பொது வாழ்க்கையில் நேர்மையுடன் இருப்பவர் துளசி அய்யா வாண்டையார். மிகவும் கறார் பேர்வழியும்கூட. அதற்கு ஓர் உதாரணம் மட்டும் பார்க்கலாம்…

மகளுடன் தினகரன்

கடந்த காலத்தில் ஒருமுறை அ.தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்த தஞ்சாவூர் வந்தார் ஜெயலலிதா. அப்போது தஞ்சாவூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளரான துளசி அய்யா வாண்டையார், `என்னை ஜெயலலிதா வந்துதான் அறிமுகம் செய்ய வேண்டுமா? அவசியமே இல்லை’ என்று அந்தக் கூட்டத்தையே புறக்கணித்துவிட்டார். பதிலுக்கு அந்தக் கூட்டத்தில் துளசி அய்யாவின் பெயரையே உச்சரிக்கவில்லை ஜெயலலிதா. துளசி அய்யா வாண்டையாரின் தம்பி அய்யாறு வாண்டையார் அ.தி.மு.க-வில் இணைந்து 2001-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற 26 நாள்களில் அந்தப் பதவி பறிக்கப்பட்டது. அந்த முடிவை ஜெயலலிதாதான் எடுத்தார் என்றாலும்கூட அதன் பின்னணியில் சசிகலா குடும்பமும் இருந்ததாக அப்போது பேசப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா குடும்பத்தினர் மீதான விமர்சனங்கள் சுழற்றியடிக்கும் இன்றையச் சூழலில், துளசி அய்யா வாண்டையாரின் குடும்பத்தினர் இந்த முடிவுதான் டெல்டாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கிருஷ்ணசாமி வாண்டையார், அதிரடி முடிவுகளை எடுப்பவர்; தன் மனதுக்கு பட்டதை செய்பவர். அந்த வகையில் இந்த அதிரடியை அரங்கேற்றியிருக்கிறார் என்கிறார்கள் உறவுகள் வட்டத்தில். வாண்டையார் குடும்பத்தின் சொந்த ஊரான பூண்டியில் ஊர்த் திருவிழாபோல கோலகலமாகத் திருமணம் நடைபெறப்போகிறது.

நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேரு விளங்க வாழணும்

தொகுதி மாறும் எடப்பாடி?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் தனது சொந்தத் தொகுதியான எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு சட்டமன்றத்துக்குச் சென்றுள்ளார். ஆனால், இந்த முறை எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டாம் என்று அ.தி.மு.க-வின் அரசியல் ஆலோசனைக் குழு அட்வைஸ் செய்திருக்கிறதாம்.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் சொந்த கிராமமான சிலுவம்பாளையம் பூத்தில் மிகக் குறைவான வாக்குகள் பெற்றிருக்கிறீர்கள். எடப்பாடியில் போட்டியிட்டால் ஒவ்வொரு குக்கிராமத்திலும் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். பரப்பளவு அதிகம். கட்சித் தலைவராக இருப்பதால் மாநிலம் முழுவதும் பிரசாரத்துக்குச் செல்வது தடைபடும். சேலத்தில் உங்கள் வீடு உள்ள மேற்குத் தொகுதியில் போட்டியிடுவதே உங்களுக்குப் பாதுகாப்பு. மேற்குத் தொகுதியில் நீங்கள் கட்டியுள்ள பாலத்தைச் சொல்லியே ஓட்டு வாங்கிவிடலாம். தொகுதியின் பரப்பளவும் குறைவு. ஓரிரு நாள்களிலேயே பிரசாரத்தை முடித்துவிட்டு மாநிலம் முழுவதும் கட்சிக்காரர்களுக்கு வாக்கு சேகரிக்கலாம்” என்று ஆலோசனை கூறப்பட்டதாம். ஆழ்ந்த யோசனையில் இருக்கிறார் எடப்பாடி.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை!

பாஸ் என்கிற பாஸ்கரன்… வெடித்தது பட்டாசு… பற்றியது நெருப்பு!

சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் கொரோனா காலகட்டத்திலும் ஆட்சியர் ஜெயகாந்தனுடன் இணைந்து களத்தில் செயல்படுகிறார். சமீபத்தில் சக்கந்தி பகுதியில் புதிதாக நாடகமேடை கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொள்ள எப்போதும்போல தன் படை சூழ காரில் சென்றார். அப்போது அமைச்சரை வரவேற்க அவரின் ஆதரவாளர்கள் கொளுத்திய பட்டாசு தெறித்து அங்கிருந்த கூரைகள் தீப்பற்றி எரிந்தன. தீயை அணைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. “ஊரடங்கு நேரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளையும் எளிமையாக செய்ய வேண்டாமா, எதற்கு இந்த வீண் பந்தா?” என்று சொந்தக் கட்சியினரே தலையில் அடித்துக்கொள்கிறார்கள்!

பத்த வெச்சிட்டாரய்யா… பாஸ்கர்!

`மாறு’கண்டேயன்… மாறு! உற்சாகத்தில் உடன்பிறப்புகள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான மார்கண்டேயனுக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்குமான மோதல் ஊரறிந்த செய்தி. விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனக்கு சீட் கொடுக்காததால், சுயேச்சையாக களமிறங்கிய மார்கண்டேயன், தேர்தலில் தன் பலத்தைக் காட்டி மூன்றாம் இடம் பெற்றார். அதன் பிறகு, வேறு எந்தக் கட்சியிலும் இணையாமல், தான் நடத்தி வரும் மாட்டுப்பண்ணையை மட்டும் கவனித்து வந்தார்.

இந்த நிலையில்தான், சமீபத்தில் தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தரப்பினர் மார்கண்டேயனிடம், “கட்சி மாறுங்கள்… எங்கள் கட்சிக்கு வாருங்கள். கெளரவமான பதவி அளிக்கிறோம்” என்று கூவி கூவி அழைத்துவருகிறார்களாம். மார்கண்டேயனும் மனசு மாறிவிட்டார் என்கிறார்கள். விரைவில் அவரை தி.மு.க-வில் பார்க்கலாம் என்கின்றனர் உடன்பிறப்புக்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது… இது அரசியலுக்கு ரொம்பவே பொருத்தம்!

அரசு என்ன அன்னசத்திரமா நடத்துது?” தொடர் சர்ச்சையில் கரூர் கலெக்டர்

சென்சிட்டிவான நிகழ்வுகளில் மக்களிடம் எக்குத்தப்பான வார்த்தைகளை விட்டு, சர்ச்சையில் சிக்குவது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்கு தொடர்கதையாகி வருகிறது. ஏற்கெனவே, கரூர் தொகுதி எம்.பி-யான ஜோதிமணியை போனில் மிரட்டியதாகச் சர்ச்சையில் சிக்கினார். அதைத் தொடர்ந்து, மணப்பாறை அருகில் சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றின் காலி குழியில் விழுந்து இறந்தான். அப்போது, தரகம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தங்கள் பகுதியில் மூடப்படாமல் போர்வெல் குழி ஒன்று உள்ளதை ஆட்சியர் அன்பழகனிடம் சொன்னார். அதைக் கேட்டு கோபமான அன்பழகன், `மாவட்ட ஆட்சியரை என்ன சரவணபவன் ஹோட்டல் சர்வர் என்று நினைச்சியா?’ என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.

இப்போது, கரூர் நகரில் கொரோனா பாதித்த பகுதியைப் பார்க்கச் சென்ற இடத்தில், அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஆட்சியர். அந்தப் பகுதி பெண் ஒருவர், `இப்படி அடைச்சுட்டா நாங்க வெளியில போக முடியவில்லை. எனக்கு யாரும் இல்லை. வேலைக்கும் போக முடியாததால சாப்பாட்டுக்கு ரொம்ப சிரமமா இருக்கு’ என்று சொல்லி உதவி கேட்டிருக்கிறார். அதைக்கேட்டு கோபப்பட்ட அன்பழகன், ‘எல்லாருக்கும் சாப்பாடு போட, அரசு என்ன அன்னசத்திரமா நடத்துது?’ என்று பேசி அந்தப் பெண்ணை நோகடித்துள்ளார்.

பெயரில் மட்டும் அன்பு போதாது; செயலில் பண்பும் வேண்டும் ஆபிஸர்!

நீலகிரி அ.தி.மு.க மா.செ நியமனம்… பின்னணியில் கொங்கு அமைச்சர்!

சமீபத்தில் வெளியான அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் நியமன பட்டியலில் நீலகிரியின் புதிய மாவட்டச் செயலாளராக கப்பச்சி வினோத் பெயர் இடம் பெற்றுள்ளது. நீலகிரி அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, முன்னாள் மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன் நீங்கலாக அர்ஜுனன், புத்திச்சந்திரன், பால நந்தகுமார் எனக் குறிப்பிட்ட சமூகத்துக்கே பதவிகள் ஒதுக்கப்படுவதாகக் கழகத்தினர் புலம்பிக்கொண்டிருந்தனர். புத்திச்சந்திரனும் குன்னூர் எம்.எல்.ஏ சாந்திராமுவும் மாவட்டச் செயலாளர் பதவிக்காக சண்டைப் போட்டுக்கொண்டிருந்த வேளையில், லாகவமாக கொங்கு அமைச்சரிடம் காய்நகர்த்தி கப்பச்சி வினோத் பதவி பெற்றுவிட்டார் என்கிறார்கள்.

கப்பச்சிக்கு ‘கப்’!

புதுக்கோட்டைக்கு புது ரூட்.. விஜயபாஸ்கர் `போலாம் ரைட்’!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க-வுக்கு கணிசமான ஓட்டுகள் கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலிலும் விராலி மலைத் தொகுதியில் தி.மு.க அதிக ஓட்டுகளை வாங்கியதால் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நொந்துபோயிருந்தார். சமீபத்தில் தொகுதி மக்களுக்கு நிவாரணம் கொடுத்தபோது, “பாதிக்கப்படுகிற நேரத்தில் நாங்க நிவாரணம் எல்லாம் கொடுக்கிறோம். அதையும் வாங்கிக்கிட்டு ஓட்டை மாத்திப் போடுறீங்க” என்று வெளிப்படையாகவே பொதுமக்களிடம் கடுகடுத்தாராம்.

இதைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட விஜயபாஸ்கர் முடிவு எடுத்திருப்பதாக அவரின் ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதை முன்வைத்தே புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சரின் சொந்தச் செலவில் கொரோனா நிவாரணப் பொருள்கள் கொடுக்கப்பட்டன என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

மீண்டும் கோட்டையில் அமர வைக்குமா புதுக்கோட்டை?

புதுச்சேரி ஆளுநரை கடுகடுத்த அமித் ஷா!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 2020-21 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு மத்திய உள்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது புதுச்சேரி அரசு. அதற்கு உடனடியாக அனுமதி தராமல் இழுத்தடித்துவிட்டு பிறகு அனுமதி கொடுத்தது மத்திய உள்துறை. இதற்கிடையே புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் ஈகோ யுத்தத்தில் இருக்கும் கிரண் பேடி, பட்ஜெட் குறித்த முழு விவரங்களை தனக்கு அளிக்காததால் தன்னால் ஆளுநர் உரை நிகழ்த்த வர முடியாது என்றுவிட்டார். இதனால் ஆளுநர் உரை இல்லாமலே பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி. பட்ஜெட்டுக்கு ஆளுநரின் அனுமதி கிடைக்குமா, திட்டங்கள் நிறைவேறுமா, குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் சம்பளம் சரியான தேதியில் கிடைக்குமா என்று புதுச்சேரி முழுவதும் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று மாநில காங்கிரஸ் திசை திருப்ப… விவகாரம் சீரியஸ் ஆனது.

இந்தத் தகவல் டெல்லிக்கு எட்டியது. உடனடியாக கிரண் பேடியை தொடர்புகொண்ட அமித் ஷா, ‘நாங்களே அனுமதி கொடுத்துவிட்டோம். போய் உரை நிகழ்த்துங்கள்’ என்று கடுகடுத்தாராம். அதன் பிறகே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு மூன்று நாள்கள் கழித்து பேரவையில் ஆளுநர் உரை நிகழ்த்தினார் கிரண் பேடி.

முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு நிர்வாக ரீதியில் தொல்லைகள் கொடுப்பது, இரண்டு தொகுதிகளிலாவது வெற்றிபெறும் அளவுக்கு பி.ஜே.பி கட்சியை வளர்ப்பது என இரண்டு அசைன்மென்ட்களை கொடுத்துதான் கிரண் பேடியை புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தாராம் அமித் ஷா. இதற்கிடையே புதுச்சேரி பா.ஜ.க-வினர் சிலர் அமித் ஷா தரப்பினரிடம், “புதுச்சேரியில் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆளுநரின் செயல்பாடுகளால் நமது கட்சிக்கு டெபாசிட்கூட கிடைக்காது போலிருக்கிறது” என்று போட்டுக்கொடுத்ததன் விளைவே அமித் ஷாவின் கோபத்துக்குக் காரணமாம்.

புதுச்சேரி… ஓயாது கச்சேரி!

அ.தி.மு.க-வின் அடுத்தடுத்த மூவ்! கண்காணிக்கும் முன்னாள் காக்கி!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வில் யாருக்கு சீட் என்பதை தீர்மானிப்பதில் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடைய கை ஓங்கும் என்கிறார்கள். இப்போது கட்சிக்கு கரன்சியை சேர்க்கும் வேலையில் மருமகன் பிஸியாக இருக்கிறாராம். ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் அரசியல் மட்டத்தில் அதிகாரத்துக்குப் பெயர்பெற்றவர். அவரை இப்போது மருமகன் தரப்பு தி.மு.க-வுக்கு ஆதரவாகக் கொண்டுவந்துள்ளதாம். காவல்துறையில் தனக்கென ஒரு நெட்வொர்க்கை வைத்துள்ள அந்த அதிகாரியிடம், ‘அ.தி.மு.க-வின் மூவ்களை தி.மு.க-வுக்குச் சொல்ல வேண்டும்’ என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

பேமென்ட் பேசியாச்சா!

அழகிரிக்கு உதவும் ரஜினி!

ரஜினியுடன் தொடர்பில் இருக்கும் மு.க.அழகிரி, கட்சி தொடங்குவதற்கான உதவிகளைச் செய்யத் தயார் என உறுதிமொழி கொடுத்திருக்கிறாராம் அழகிரி. ரஜினி கட்சி ஆரம்பித்தால் தி.மு.க-வின் வெற்றி பாதிக்கப்படும் என்பது அழகிரியின் கணக்கு. இதன் அடிப்படையில்தான் கட்சி ஆரம்பிக்க உதவுவதாக டீல் பேசினாராம் அழகிரி. இதையறிந்த தி.மு.க தரப்பு, தே.மு.தி.க-வை தங்கள் பக்கம் கொண்டுவர காய் நகர்த்தியதாம். இந்த வாரம் தி.மு.க-வின் வாரிசு பிரமுகர் ஒருவருடன் தே.மு.தி.க மகளிர் பிரமுகர் நடத்திய ரகசிய சந்திப்பும் இதன் பின்னணியில்தானாம்!

%d bloggers like this: