வேகமெடுக்கும் உதயநிதி! – அப்செட்டில் தி.மு.க சீனியர்கள்

விஷ்ஷ்ஷ்க்க்…” என்ற சத்தம். திரும்பிப் பார்த்தால் ஆர்ப்பாட்டமில்லாமல் என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

நமது கையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலின் அறிக்கை இருப்பதைப் பார்த்தவர், “தமிழ், தமிழர் என பா.ஜ.க உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்திருப்பதைப் கவனித்தீரா!” என்றபடி செய்திக்குள் நுழைந்தார். சூடான ஃபில்டர் காபியை அவரிடம் நீட்டிவிட்டு அமைதி காத்தோம்.

காபியின் மணத்தை ரசித்து ருசித்துக் கொண்டே, “பிரதமர் மோடி திருக்குறள் புகழ் பாடுகிறார். `டெல்லியிலுள்ள முக்கிய சாலைக்கு மாமன்னன் ராஜராஜ சோழனின் பெயர் சூட்ட வேண்டும்’ என பா.ஜ.க எம்.பி தருண் விஜய் கூறுகிறார். இப்போது அப்துல் கலாமை ஏகத்துக்கும் புகழ்ந்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அறிக்கை விடுத்துள்ளார். தமிழ், தமிழர் என உயர்த்திப் பிடித்து மக்களோடு நெருங்க ரூட் போடுகிறது பா.ஜ.க” என்றார் கழுகார்.

“ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் வேறொரு ரூட்டில் திருநெல்வேலி வரைக்கும் பயணித்தது ஏனோ?” என்று கண்சிமிட்டினோம்.

“நயினார் நாகேந்திரன் விவகாரத்தைக் கூறுகிறீரா… தமிழக பா.ஜ.க தலைவர் பொறுப்புக்குப் போட்டியிட்டவர்களில் அவரும் ஒருவர். டெல்லி வரை முட்டிப் பார்த்தும் பொறுப்பைக் கைப்பற்ற முடியவில்லை. நயினாரின் மனநிலையைப் புரிந்துகொண்ட நெல்லை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள், அவரை தி.மு.க-வுக்கு இழுக்கத் திட்டமிட்டனர். இதற்கு தி.மு.க தலைமையும் சம்மதித்ததாம். இத்தகவல் கசிந்ததால், அவசரமாக சென்னையிலிருந்து நெல்லைக்குச் சென்ற பா.ஜ.க தலைவர் முருகன், நயினார் நாகேந்திரனைச் சமாதானப் படுத்தியுள்ளார். மத்திய அரசு நிறுவனங்களில் போர்டு மெம்பர் பதவி தருவதாகக்கூடப் பேசப்பட்டதாம். ஆனால் நயினார் பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள்.”

“ஓஹோ… தி.மு.க முகாம் வேகமெடுத்து விட்டதோ?”

“ஆமாம்! தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூகத்தினர் எவ்வளவு பேர் கட்சியில் முக்கியப் பதவியில் இருக்கிறார்கள், வட மாவட்டங்களில் வன்னியர்களுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் என்ன என்றெல்லாம் கணக்கு எடுத்துவருகிறது ஐபேக். சாதிரீதியான இந்தக் கணக்குகளைத் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளார்கள். முதலில், ‘சொந்தச் செல்வாக்குள்ள கட்சி நபர்களுக்கு வட மாவட்டங்களில் பதவி தரப்பட வேண்டும்’ என்று தலைமைக்கு ஐபேக் அறிவுறுத்தியுள்ளதாம். அதேபோல, மாற்றுக் கட்சியிலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர்களுக்கும் ஜாக்பாட் அடிக்கலாம் என்கிறார்கள்.”

“ஆனால், கட்சிக்குள் போர்க்குரலும் எழுகிறதே?”

“ம்! சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்டதைவைத்து அப்படிச் சொல்கிறீர் என்று புரிகிறது. தி.மு.க-வில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களில் நாமக்கல், திருச்சிக்கு அடுத்து சென்னை மேற்கு மாவட்டம் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்களால் நிரப்பப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகன் மறைந்தவுடன், அவரது கட்சிப் பொறுப்பை நிரப்ப ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ-வான கு.க.செல்வம், வி.பி.கலைராஜன், விருகம்பாக்கம் தனசேகர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. ஆனால், நுங்கம்பாக்கத்தில் கூரியர் நிறுவனம் நடத்திவரும் சிற்றரசுவுக்கு யோகம் அடிக்கும் என யாரும் நினைக்கவில்லை.”

“ஓ…”

“மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த சிற்றரசுவுக்காக உதயநிதியிடம் பேசியது அன்பில் மகேஷ் பொய்யாமொழி என்கிறார்கள். ‘இவரால் செலவு செய்ய முடியுமா?’ எனச் சிலர் உதயநிதியிடம் சந்தேகம் கிளப்பியபோது, ‘அதான் நான் இருக்கேன்ல… சென்னைக்குள்ள நம்ம ஆள் ஒருத்தர் தேவை. மாவட்டப் பொறுப்புல சிற்றரசுவே இருக்கட்டும்’ என்று கூறிவிட்டாராம் உதயநிதி. மாவட்ட சீனியர்களிடம் வாழ்த்துப் பெற சிற்றரசு முயன்றபோது, பலரும் ‘கொரோனா நேரம்கறதுனால இப்போ வர வேண்டாம் தம்பி. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும். நாங்களே வந்து பார்க்கிறோம்’ என்று பிடிகொடுக்காமல் நழுவி விட்டனராம். இந்தத் தகவல்களெல்லாம் ஸ்டாலினுக்கு எட்டியதால், அவர் அப்செட் என்கிறார்கள்.”

“சிற்றரசுவால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறாரோ?”

“2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், சென்னை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த வி.எஸ்.பாபு குடும்பத்துடன் தி.மு.க-வைவிட்டு வெளியேறினார். அப்போது புதிதாகக் கட்சிக்குள் வந்திருந்த சேகர்பாபுவை மாவட்டப் பொறுப்பில் நியமிக்க ஸ்டாலின் விரும்பினார். அதற்கு கருணாநிதி தடைபோடவும், பெரம்பூர் ஆர்.டி.சேகரை மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தார்கள். மூன்று வருடங்களுக்கு மேல் அந்தப் பொறுப்பிலிருந்த ஆர்.டி.சேகரால், கடைசி வரைக்கும் கட்சி நிர்வாகிகளைக் கையிலெடுக்க முடியவில்லை. ஈகோ யுத்தம் தலைவிரித்தாடியது. கடைசியில் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, ஒன்றை சேகர்பாபுவுக்கும் மற்றொன்றை மாதவரம் சுதர்சனத்துக்கும் அளித்துவிட்டனர். இதே குழப்பம் சென்னை மேற்கு மாவட்டத்திலும் வந்துவிடக் கூடாது என ஸ்டாலின் நினைக்கிறார்.”

“ஓ…”

“மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் உதயநிதியின் கை ஓங்கிவருவது தி.மு.க சீனியர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ‘இன்னைக்கு சென்னையில நடக்குறது, நாளைக்கு நம்ம மாவட்டத்துலயும் நடக்கலாம். தலைவர் பையன்கிறதுக்காக சீனியாரிட்டியை மீறுறதை எப்படிங்க ஏத்துக்க முடியும்?’ என்று தமிழகத்தின் மேற்கு மாவட்டச் செயலாளர் ஒருவர் டெல்டா மாவட்டத்திடம் கமென்ட் அடித்தாராம். சிற்றரசுவை மாவட்டப் பொறுப்புக்கு அறிவிக்கப் போகிறார்கள் என்று அறிந்த மதுரவாயல் தொகுதி பகுதிச் செயலாளர் ஒருவர், நேரடியாக ஸ்டாலினிடமே இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன் பிறகுதான், மதுரவாயல் தொகுதி மா.சுப்பிரமணியனின் தென் சென்னை மாவட்டத்துக்குள் கொண்டுவரப்பட்டு அறிவிக்கப்பட்டதாம். தேர்தல் நேரம் என்பதால், வரும் மாதங்களில் தன்னை நிரூபித்தால் மட்டுமே சிற்றரசுவால் மாவட்டப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்கிறார்கள்.”

“தி.மு.க இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல்மீதும் சர்ச்சைகள் களைகட்டுகின்றனவே?”

“சமீபத்தில் கட்சிக்காரர்கள் நூறு பேரை தூத்துக்குடியிலுள்ள தன் வீட்டுக்கு அழைத்த ஜோயல், விருந்து படைத்தாராம். ‘ஶ்ரீவைகுண்டம் தொகுதிக்கு நான்தான் வேட்பாளர்னு தலைவரே சொல்லிட்டார். அடுத்த தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும் நான்தான். நீங்க எல்லாரும் எனக்காக வேலை பார்த்து ஜெயிக்க வைக்கணும்’ என்றாராம். ஊரடங்கு நேரத்தில் நூறு பேரை அவர் அழைத்து விருந்து வைத்ததும், நாற்பது வண்டிகளில் ஶ்ரீவைகுண்டத்தை ரவுண்ட் அடித்ததும் ஆதாரங்களுடன் தலைமைக்குப் போயிருக்கிறது. விசாரணையும் நடைபெறுகிறதாம்.”

“ம்ம்… அ.தி.மு.க நிர்வாகிகள் மாற்ற அறிவிப்புக்கு ரியாக்‌ஷன் எப்படி?” என்றபடி அதிரசங்களைத் தட்டில் நிரப்பினோம்.

அதிரசங்களைப் பிய்த்து மென்றுகொண்டே தொடர்ந்த கழுகார், “விழுப்புரம் மாவட்டத்தைப் பிரிக்க சி.வி.சண்முகம் கடைசிவரை அனுமதிக்கவில்லை. திருநெல்வேலியைப் பிரித்து மனோஜ் பாண்டியனுக்குக் கொடுக்க தங்கமணி, வேலுமணி விரும்பவில்லை.

எம்.ஜி.ஆர் காலத்து நபரான நடிகை லதா கொள்கை பரப்பு அணியில் இடம் கேட்டுள்ளார். அவரைப் புறக்கணித்துவிட்டனர். ‘மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை’ என மகளிரணி கண் சிவக்கிறது. இப்படி ஏகப்பட்ட குளறுபடிகள். சென்னையைப் பிரிப்பதற்கு இப்போதுள்ள அ.தி.மு.க மா.செ-க்கள் எல்லோரும் ஒரு தனியார் ஹோட்டலில் ஒன்றுகூடி விவாதித்துள்ளனர். ஆளுக்கு இரண்டு தொகுதிகளை எடுத்துக்கொண்டு, மீதமுள்ளதை தங்கள் ஆதரவாளர்களுக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர். இந்த அறிவிப்பு தனியாக வருமாம்.”

“ஓ…”

“மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தரப்பை சிண்டிகேட்டிலிருக்கும் இரண்டு முக்கியப் புள்ளிகள் தங்கள் அரசியல் செல்வாக்கைச் சொல்லி மிரட்டி வருகிறார்களாம். துணைவேந்தராக அவர் பொறுப்பேற்ற பிறகுதான் தொலைநிலைக் கல்வித்துறையில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிக்க உத்தரவிட்டார். ‘தனியார் கல்லூரிகள் தகுதியானவர்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். அந்த ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக விதிகளின்படி ஊதியம் கொடுக்க வேண்டும். இதைப் பின்பற்றாத கல்லூரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சுற்றறிக்கையும் விட்டார். இதனால் கடுப்பான சிண்டிகேட் உறுப்பினர்கள் இருவர், ‘இது போன்ற உத்தரவுகளைப் போடக் கூடாது. நாங்க சொல்றதைக் கேட்கலைன்னா இந்தப் பதவி உங்களுக்கு நிரந்தரமில்லை’ என்று மிரட்டினார்களாம். அதற்கும் அஞ்சாத கிருஷ்ணன் தரப்பு, ‘இந்த மிரட்டலையெல்லாம் வேற எங்கேயாவது வெச்சுக்கோங்க. நான் ஆளுநர் மூலம் தேர்வானவன். இதுக்கெல்லாம் பயப்படுற ஆளில்லை’ என்று போட்டுத் தாக்க பல்கலைக்கழகம் முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பாகியுள்ளது” என்று கிளம்ப எழுந்த கழுகார்,

“மூத்த அமைச்சர் ஒருவர் ஊரடங்குக்கு முன்பாக, மோட்டார் பம்ப் நிறுவனம் ஒன்றை தன் பினாமி பெயரில் தொடங்கியுள்ளாராம். அந்த நிறுவனத்தைத் தொடங்கிய குறுகிய காலகட்டத்திலேயே 40 கோடி ரூபாய்க்கு ஜாப் ஆர்டர் கிடைத்துள்ளதாம். கொரோனா, ஊரடங்கு போன்றவற்றால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடியைச் சந்தித்து வந்தாலும், அந்த நிறுவனத்தின் காட்டில் மட்டும் மழை பெய்து வருகிறதாம்” என்றபடி சிறகுகள் விரித்தார்.

%d bloggers like this: