கொரோனாவுக்குப் பிறகு செய்ய வேண்டியது என்ன?!

உலகத்தின் சுமுகமான இயக்கத்தையே முடக்கிப் போட்டுவிட்டது கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் கிருமி. கொரோனா என்ற வார்த்தையை  அனுதினமும் பீதியுடன் ஒவ்வொருவரும் உச்சரிக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்பு சாதாரணமாக செய்து வந்த விஷயத்தை இப்போது செய்ய  முடியவில்லை. ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் முன்னும் பல முறை யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. மக்களுக்கு மட்டுமல்ல; 

மருத்துவர்களுக்குமே இந்தச் சூழல் அசாதாரணமாகவும் சவாலாகவும் அமைந்துவிட்டது.
கொரோனா தொற்றால் கோவிட் நோய் தாக்கியவர்களுக்கான சிகிச்சை வழிமுறைகள்(Management protocol) இந்த 6 மாத காலத்தில்  வகுக்கப்பட்டுவிட்டன. பொதுவெளியில் தொற்று அதிகம் பரவாமல் இருப்பதற்காக ஊரடங்கு, சமூக இடைவெளி, வீட்டிலிருந்தே வேலை செய்வது  போன்ற திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு விட்டன. அவற்றுக்கும் மக்கள் ஓரளவு பழகி வருகிறார்கள்.சிறிய உடல் உபாதைகளுக்கு  மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அரசும், மருத்துவர் சங்கங்களும் எச்சரிக்கின்றன. எது சிறிய உபாதை, எது அவசர சிகிச்சை தேவைப்படும்  பிரச்னை என்பதை கண்டுகொள்ள எல்லோராலும் முடியாது. பல சமயம் சாதாரணமாக நினைக்கும் பிரச்னைகள் தீவிரமாக மாறிவிடுவது உண்டு.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான மருத்துவமனைகளில் நோய் தடுப்பு முறைகளைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம்  இன்றியமையாததாக உள்ளது. ஏனெனில், கொரோனா தோற்று பாதித்தவர்களில் 85 சதவிகிதம் பேர் அறிகுறிகள் ஏதும் அற்றவர்களாக உள்ளனர்.  மருத்துவமனை ஊழியர்கள் அல்லது மருத்துவர்களுக்குத் தொற்று ஏற்பட்டிருந்தால் பிறருக்கும் எளிதில் பரவி விட வாய்ப்பிருக்கிறது. அதனாலேயே  வழக்கமான சேவைகள் முடக்கப்பட்டு அவசர சிகிச்சைகள் மட்டுமே நடைபெறுகின்றன.
அவசர சிகிச்சை தேவைப்படும் உறுப்புகளில் ஒன்று கண். தூசு, காயங்கள் இவற்றுடன் கண் அழுத்த நோய் விழித்திரை பாதிப்புகள் போன்றவையும்  அவசர பிரச்னை பட்டியலில் வருகின்றன. இத்தகைய பிரச்னைகளுக்கு உடனடி கவனிப்பு அவசியம். அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றில்  கண்களிலும் அறிகுறிகள் ஏற்படலாம். கோவிட் நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட சீனா மற்றும் இத்தாலியில் கோவிட் நோயாளிகள் 10 சதவிகிதம்  பேருக்கு கண் வலியும் (Follicular conjunctivitis) ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கண்வலியில் மற்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படும் பிரச்னை போலவே கண்ணில் நீர்வடிதல், கண்சிவப்பு, வலி ஆகிய அறிகுறிகள்  காணப்படுகின்றன. அத்தகைய நோயாளிகளின் கண் நீரிலிருந்து கொரோனா வைரஸ் கிருமிகள் பிரித்தறியப்பட்டுள்ளன. வழக்கமான அடினோ வைரஸ்  கிருமியால் ஏற்படும் கண் வலியே வெகு எளிதில் கைக்குட்டை, காற்று மூலம் பரவக்கூடியது. வீட்டில் ஒருவருக்கு கண் வலி வந்தால் ஓரிரு  நாட்களில் மற்றவருக்கும் வருவதைப் பார்த்திருப்போம். கொரோனா வைரஸ் ஒரு பொருளில் தங்கியிருக்கும் நேரமும், உயிர் வாழும் வலிமையும் மிக  அதிகம் என்பதால் வழக்கத்தை விட அதிக கவனம் தேவை.
கொரோனா தாக்கியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அறிகுறி இல்லாமல் இருப்பார்கள் என்று கூறினோம் அல்லவா? இத்தகைய நபர்களுக்கு  வேறு பிரச்னைகளுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்போது அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோருக்குத் தொற்று  ஏற்பட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.
தற்போது பிரசவத்துக்காக காத்துக் கொண்டிருக்கும் பெண்கள் அனைவருக்கும் பிரசவ தேதிக்கு ஒரு வாரம் முன்பே கொரோனா பரிசோதனை செய்ய  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அப்படி செய்த பரிசோதனையின் முடிவில் ‘நெகடிவ்’ என்று வந்தால் கூட முழுமையான முடிவாக அதனைக் கருதிவிட  முடியாது. அந்த நேரம் அந்தப் பெண் உடலில் மிகச்சில கிருமிகள் இருந்திருக்கலாம். அறுவை சிகிச்சையின்போது அவை பெருகி பாசிட்டிவ்  ஆகிவிடலாம். ஏனென்றால் கொரோனா வைரஸ் உலகளாவிய அளவில் பல நோயாளிகளிடம் தொற்று ஏற்பட்டு 28 நாட்கள் கழித்துக் கூடபெருகியிருக்கிறது.
இத்தகைய சூழல் நவீன மருத்துவ உலகிற்குப் புதிது என்பதால் இந்த காலத்தில் கண் மருத்துவத்துக்கான புதிய நெறிமுறைகளும் வழிகாட்டுதல்களும்  கொஞ்சம் கொஞ்சமாக வகுக்கப்பட்டு வருகின்றன. கண்புரைக்காக செய்யப்படும் Phacoemulsification, Vitrectomy போன்ற நவீன அறுவை  சிகிச்சைகளின்போது அதிகமாகக் கிருமி பரவுதல்(Aerosolisation) நிகழ்வதாகக் கூறப்படுகிறது. மூளை நரம்பியல், எலும்பு அறுவை சிகிச்சை போன்ற  எலும்பைத் துளையிட நேரும் சிகிச்சை முறைகளிலும் கிருமித் தொற்றின் பரவல் அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் அவசர சிகிச்சை  தேவைப்படும் நேரங்களில் நவீன அறுவை சிகிச்சை முறைகளைச் சற்று ஒதுக்கிவிட்டு, பழங்காலத்தைய சிகிச்சைகளுக்குச் செல்லலாமா என்றும்  மருத்துவ உலகம் யோசித்து வருகிறது.
இந்த நிலையில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?
* கண் அழுத்த நோய் போன்ற தொடர் சிகிச்சை பெறும் நோய்களுக்கான மருந்துகளை எப்போதும் போலத் தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டும்.
* காலாவதி தேதியைக் கவனித்து இரண்டு, மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
* கண் வலியுடன் தும்மல், ஜலதோஷம், இருமல் சேர்ந்து வந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையைக் கண்டிப்பாகக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
* விழித்திரை பாதிப்பால் அவதிப்பட்டு லேசர் சிகிச்சை பெறுபவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் லேசர் சிகிச்சையை மேற்கொள்ள முயற்சிப்பது நல்லது.  இதைத் தள்ளிப்போட வேண்டாம். கண்களுக்குள் முறையான கால அளவில் ஊசி செலுத்துமாறு(Intravitreal injections) அறிவுறுத்தப்பட்ட  நோயாளிகளுக்கும் அப்படியே. 
*குறை மாதத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான விழித்திரை பரிசோதனை மற்றும் சிகிச்சை (Retinopathy of prematurity- ROP screening)  கட்டாயம் குறித்த தேதியில் செய்யப்பட வேண்டும்.
* ஆறு மாதத்துக்கு அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு முறை செய்ய வேண்டிய வழக்கமான பரிசோதனைகளைச் சற்றுத் தள்ளிப் போடலாம்.
*ஊரடங்கு அல்லது லாக்டவுன் முடிந்த பின்னரும் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியதில்லை. மருத்துவமனைக்குத் தொடர்பு  கொண்டு முன்னேற்பாடாக அப்பாயின்ட்மென்ட் குறித்த பின்னரே செல்லலாம்.
*அப்படி செல்லும்போதும் சமூக இடைவெளி, கை சுத்தம் இவற்றைப் பேண வேண்டும்.
*அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் கண் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத சூழலில் குடும்ப மருத்துவரையோ, அரசு மருத்துவமனையையோ  நாடலாம். சுய மருத்துவம் வேண்டாம்.
* கண்ணாடியை உடைத்துவிடாமல் பத்திரமாகப் பாதுகாப்பது பல சங்கடங்களைத் தவிர்க்கும்.
*அப்படி உடைய நேர்ந்தால் பழைய கண்ணாடிச் சீட்டைக் கடையில் கொடுத்து கண்ணாடி வாங்கிக்
கொள்ளலாம்.
*Telemedicine மூலம் கண் மருத்துவம் செய்வது கடினமானது. இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் ஆராயப்பட்டு வருகின்றன.
லாக் டவுன், ஊரடங்கு எல்லாம் நமக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. ஒரு பேரிடரில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் பேரிடரைச் சந்திக்க  வியூகம் வகுக்கவும் நமக்கு அளிக்கப்பட்டுள்ள பொன்னான நேரம் இது. கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் பிற நோய்களுக்கான மருத்துவம்  பாதிக்கப்படுகிறதே என்று வருந்த வேண்டாம். போர்முறைகள் மாறிவிடவில்லை, வியூகம்தான் மாறுகிறது. புத்திக்கூர்மையுடனும் ஒற்றுமையுடனும்  இந்தச் சவாலை எதிர்கொள்வோம்!

%d bloggers like this: