பதவிப் பஞ்சாயத்தில் திணறும் அ.தி.மு.க…

உமது நிருபர் போட்ட செய்தி, முதல்வர் வரை பேசவைத்திருக்கிறதே!’’ – பாராட்டிக் கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். வெள்ளைப் பணியாரத்தை அவரிடம் நீட்டிவிட்டு, ‘‘அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன்

விவகாரத்தைக் கூறுகிறீரோ..?’’ என்றோம். பணியாரத்தை காரச் சட்னியுடன் சுவைத்து மகிழ்ந்தவர், ‘‘ஆமாம். பிடித்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்களாம்’’ என்றபடி செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் ஐயப்பனின் தலையீடு, வேளாண்துறையில் அதிக அளவில் இருப்பதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தச் செய்தியை, ‘வாரிச்சுருட்டும் வாரிசு… முதல்வர் கண்டித்தும் கேட்கவில்லை’ என்கிற தலைப்பில் கடந்த 22.07.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் உமது நிருபர் எழுதியிருந்தார். கட்டுரை வெளிவந்த சில நாள்களிலேயே, அமைச்சர் துரைக்கண்ணுவின் சிறப்பு நேர்முக உதவியாளர் அண்ணாமலையை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டனர். அண்ணாமலையை நீக்கச் சொன்ன முதல்வர் அலுவலகம், ஐயப்பனைக் கடுமையாக எச்சரித்ததாம். ‘இனிமேலும் இது மாதிரி தப்பு நடந்தா நல்லா இருக்காது’ என ஒற்றை வரியில் தலைமை கர்ஜித்ததில், ஐயப்பன் தரப்பு ஆடிப்போய்விட்டதாகக் கூறுகின்றனர். டெல்டா முழுவதும் இதுதான் பேச்சு.’’

துரைக்கண்ணு - ஐயப்பன்

துரைக்கண்ணு – ஐயப்பன்

‘‘ஓஹோ… தி.மு.க கையில் எடுத்த இட ஒதுக்கீடு விவகாரத்தால் அந்தக் கட்சியின் இமேஜ் உயர்ந்துள்ளதா?’’

‘‘அவர்கள் போட்ட கணக்குப்படி அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தி, உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பும் பெற்றுவிட்டனர். இந்த விவகாரத்தில் பா.ஜ.க தரப்பு கொஞ்சம் அப்செட்தான். குறிப்பாக, இதற்குப் பதிலடி கொடுப்பதில் சில சிக்கல்களும் பா.ஜ.க தரப்புக்கு இருந்துள்ளது. ‘நாடு முழுவதுமுள்ள பிராந்தியக் கட்சிகள் தி.மு.க-வைப் போன்று இந்த விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகிவிடும்’ என்று மத்திய அரசு யோசிக்கிறதாம். அதனால், தி.மு.க-வுக்கு எதிராக சித்தாந்தப் பிரசாரத்தை முடுக்கிவிடச் சொல்லியிருக்கின்றனர்.’’

‘‘ஓ… என்ன செய்யப்போகிறார்கள்?’’

‘‘பழைய சம்பவம் ஒன்றை இப்போது தூசிதட்டி எடுக்கிறார்கள். ‘நீதிக்கட்சி ஆட்சியில் சமூகரீதியாக இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், ஏதேதோ காரணங்களால் அது கிடப்பில் போடப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சியில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அதற்குச் சட்ட வடிவம் கொடுக்க முயன்றார். அதற்கு சத்தியமூர்த்தி, காமராஜரிடமிருந்து கடுமையாக எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால், அதை பெரியார் கண்டிக்கவில்லை. அமைதியாக இருந்தார்’ என்று சொல்லும் பா.ஜ.க-வினர், இதைத்தான் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப் போகிறார்களாம். அடுத்ததாக, இட ஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டுவர 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் செயல்திட்டம் வகுக்கப்பட்டது. அது குறித்த வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தபோது, அந்த வாக்கெடுப்பில் தி.மு.க சார்பில் மாநிலங்களவையில் இருந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. இது போன்ற விவகாரங்களைத் தோண்டியெடுத்து தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யவிருக்கிறார்களாம்.’’

‘‘சரிதான்…’’

‘‘தமிழகத்தில் 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, இட ஒதுக்கீட்டில் சில திருத்தங்களைக் கொண்டுவர மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் முயன்றது. அதை எதிர்த்தால் மத்திய அரசில் அங்கம் வகிக்க முடியாது என்று அமைதியாக தி.மு.க இருந்ததையும் இப்போது மக்களிடம் நினைவூட்டத் திட்டமிட்டுள்ளதாம் பா.ஜ.க தரப்பு. இதையெல்லாம் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அ.தி.மு.க தரப்பு அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.’’

‘‘அ.தி.மு.க-வுக்கு உள்ளேயே ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றனவே?’’

ஜி.பாஸ்கரன் - கருணாகரன்

ஜி.பாஸ்கரன் – கருணாகரன்

‘‘சமீபத்தில் அறிவிக்கப்பட்ட அமைப்புச் செயலாளர்கள் பட்டியலுடன் சேர்த்து மொத்தம் 61 பேர் அமைப்புச் செயலாளர் பதவியிலிருக்கிறார்கள். முன்பெல்லாம் கட்சியின் மூத்தவர்களை கௌரவப்படுத்த இந்தப் பதவி வழங்கப்பட்டது. இப்போது சீனியர், ஜூனியர் என்கிற வித்தியாசமில்லாமல் பதவியை வாரி வழங்கியதால் சீனியர்கள் பலரும் அப்செட்டாம். ‘மாவட்டச் செயலாளர் ரேஸில் இருந்தவர்களை மடைமாற்ற அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கியுள்ளனர். இதன் மூலம் எங்களையும் அவமானப்படுத்துகின்றனர்’ என்று புலம்புகிறார்கள். தென் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகியும் அமைப்புச் செயலாளர். அவருக்கு உதவியாளராக இருந்த ஒருவர் இப்போது அமைப்புச் செயலாளர் பதவிக்கு வந்துள்ளார். இப்படிப் பல குளறுபடிகள் நடந்துள்ளன.”

“ஓஹோ!”

“இந்தக் குளறுபடியையும் ஒரு கட்சி சீனியர் காசாக்கி விட்டாராம். மாவட்டச் செயலாளர் பதவியை எதிர்பார்த்திருந்த சிலரைத் தொடர்புகொண்டு, ‘மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காது, அமைப்புச் செயலாளர் பதவியை எதிர்பார்க்கலாம்’ என்று கூறி தனக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டுவிட்டாராம். இதே பிரமுகர்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகச் சொல்லி சிலரிடம் கரன்ஸியைக் கறந்துகொண்டு இதுவரை திருப்பி வழங்கவில்லை என்கிறார்கள். தலைமைக்கு இது தெரிந்தும் அமைதியாக இருக்கிறதாம்.’’

‘‘பலே ஆள்தான்…’’

‘‘கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டதில் அம்மன் அர்ச்சுனன் மகிழ்ச்சியடைந்திருந் தாலும், புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பி.ஆர்.ஜி.அருண்குமார் ஏகத்துக்கும் அப்செட் டாகியிருக்கிறார். அமைச்சர் வேலுமணியைவிட அருண்குமார் கட்சியில் சீனியர். சற்று வெளிப்படையான மனிதர். 2017-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து, பிறகு ஓ.பி.எஸ் அணிக்குச் சென்றார். அணிகள் ஒன்றிணைந்த பிறகு அருண்குமாரை டம்மியாக்கிவிட்டனர். அவரின் தொகுதியான கோவை வடக்கில் ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியீட்டாளர் சந்திரசேகரின் கையே ஓங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே, ‘கோவை வடக்குத் தொகுதி வேட்பாளர் நான்தான்’ என்கிறரீதியில் சந்திரசேகரின் நடவடிக்கைகள் சென்றுவிட்டன.’’

‘‘ஓஹோ…’’

ஸ்டாலின்

ஸ்டாலின்

‘‘கடந்த 2018-ம் ஆண்டே, கோவை மாநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, வேலுமணியின் அபிமானியான அம்மன் அர்ச்சுனனுக்கு ஒரு மாவட்டத்தை ஒதுக்கத் திட்டம் போட்டனர். கடுப்பான அருண்குமார், ‘இது அம்மா எனக்குக் கொடுத்த பதவி. அதைப் பறிக்க உங்களுக்கு உரிமை இல்லை. எனக்கு இந்தக் கட்சியும் வேண்டாம், எம்.எல்.ஏ பதவியும் வேண்டாம்’ என்று அதிரடியாகக் கூறி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யத் துணிந்தாராம். பிறகு அவரைச் சமாதானப்படுத்தி மாவட்டத்தைப் பிரிக்கும் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதே அம்மன் அர்ச்சுனனுக்கு பதவி கொடுத்து, அருண்குமாரை டம்மி யாக்கிவிட்டனர். கவுண்டம் பாளையம் தொகுதியை அவருக்கு ஒதுக்குவதாகத் தலைமை குளிர்வித்தாலும், ‘இனி கட்சியில் வேலுமணி, அம்மன் அர்ச்சுனனின் ஆதிக்கம்தான் இருக்கும்’ என அருண்குமாரின் காதுபடவே சிலர் பேசுவதால் அவர் ஏக அப்செட்!’’

‘‘சிவகங்கை அ.தி.மு.க-விலும் ஏதோ பிரச்னையாமே?’’ – கேழ்வரகு அடையைக் கழுகாருக்குப் பறிமாறிக்கொண்டே கேள்வியையும் அடுக்கினோம். தொடர்ந்தார் கழுகார்.

‘‘சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரனை எதிர்க்கும் அளவுக்கு அவரின் மகன் கருணாகரன் மாறிவருகிறாராம். எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் கருணாகரன், தனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வேண்டும் என்பதற்காக மாவட்டத்தையே இரண்டாகப் பிரிக்கச் சொல்லி அடம்பிடிக்கிறாராம். ‘மா.செ பொறுப்பு கிடைத்துவிட்டால் அப்பாவின் தயவுகூடத் தேவையில்லை’ என்கிற முடிவுக்கு கருணாகரன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போதைய மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனின் ஆட்கள் போர்க்கொடி உயர்த்துவதால் சிவகங்கை அ.தி.மு.க ரணகளமாகிறது.’’

‘‘சண்டை வீதிக்கு வராமல் இருந்தால் சரிதான். சீட் விவகாரத்தில் தி.மு.க ஏக கெடுபிடி காட்டுகிறதுபோலவே?’’

‘‘ம்! ஏற்கெனவே `இளைஞர் அணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்’ என்கிற குமுறல் கட்சியின் சீனியர்களிடம் இருக்கிறது. `இப்போது 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கே அதிக சீட் வழங்கப்படும்’ என்கிற செய்தி ஒருபுறம் கசிகிறது. அதைத் தாண்டி, `உடல்நலத்துடன் உள்ளவர்களுக்கே சீட்’ என்று முடிவு எடுக்கவுள்ளார்களாம். ‘அடுத்த ஐந்தாண்டுகள் அவர்கள் நலமுடன் இருந்தால் மட்டுமே நமக்கு பாதிப்பு இருக்காது’ என்று வாரிசுகள் தலைமைக்கு ஆலோசனை கொடுத்துள்ளனர். தலைவரும் அதை ஆமோதிக்கும் மனநிலையில் இருக்கிறாராம். 45 வயதுக்குள் உள்ளவர்களுக்கு சீட் என்பது இந்த அடிப்படையில் உருவானதுதான் என்கிறார்கள்.”

வேலுமணி, அம்மன் அர்ச்சுனன், பழனிசாமி

வேலுமணி, அம்மன் அர்ச்சுனன், பழனிசாமி

‘‘கட்சி கலகலத்துவிடுமே?’’

‘‘அது அவர்கள் பாடு. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் சமீபத்தில் டெல்லி மேலிடப் பிரமுகருடன் பேசியிருக்கிறார். ‘நமக்கு இருபது சீட்டைத் தாண்டி தி.மு.க-விடம் எதிர்பார்க்க முடியாது. மாற்று ஏற்பாட்டையும் வைத்துக்கொள்ளலாம். ராகுலிடம் சொல்லி ரஜினியுடன் நட்பை பலப்படுத்தச் சொல்லுங்கள்’ என்றிருக்கிறார். தலைமைக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தாரம் அந்த மேலிடப் பிரமுகர்.’’

‘‘ஓ…’’

‘‘தமிழக அமைச்சர் ஒருவர் சர்ச்சைக்குப் பேர் போனவர். அவரது அரசியல் மூவ்களைக் கண்டு தலைமையே அச்சப்படுகிறதாம். மத்தியிலுள்ள கஜானா பிரமுகர் வீட்டுச் சமையல்காரர் முதல் வேலையாட்கள் வரை இவர் ஏற்பாட்டில்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி அணியில் அமைச்சராக இருந்துகொண்டே பரப்பன அக்ரஹாரா சிறைக்குள்ளும் ஆட்களை வைத்து உதவிகளைச் செய்துவருகிறாராம். இந்த நெட்வொர்க்கைப் பார்த்து ஆளும்தரப்பே சற்று மிரண்டுதான் போயிருக்கிறது’’ என்று சிறகுகளைச் சிலுப்பிய கழுகார்,

‘‘ஈ.சி.ஆரில் ஒரு பிரமுகர் 63 ஏக்கர் நிலம் வாங்கிக் குவித்திருப்பதை ஏற்கெனவே கூறியிருந்தேன் அல்லவா? ஈ.சி.ஆரில் ஒரு தியேட்டரையும் அவர் விலை பேசுவதாகக் கூறியிருந்தேன். அந்த தியேட்டரை அரசியல் குடும்ப உறுப்பினர் பெயரிலேயே பத்திரப்பதிவு செய்துவிட்டார்களாம். மேலும் சிலரும் பார்ட்னர்களாக அந்த தியேட்டரை வாங்கியுள்ளனர்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: