திமுகவுக்கு நேரடி எதிரி அதிமுகவா? ரஜினியா? .

துவரை தாங்கள் யாரை நேரடி எதிரியாக நினைத்தார்களோ அவர்களைத்தான் ஜெயலலிதாவும், கருணாநிதியும், ஸ்டாலினும் விமர்சித்தனர். இன்று ஸ்டாலின் நேரடியாகவும், திமுகவின் அதிகாரப்பூர்வ

நாளேடான முரசொலி மூலமும் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சிக்கிறார். பாஜகவின் ஊதுகுழல் ரஜினிகாந்த் என்கிறார். திராவிட இயக்கத்தை யாராலும் அழிக்கமுடியாது என்கிறார்.

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் கமல்ஹாசனை எந்தக் கட்சியும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக ஸ்டாலின், மக்கள் நீதி மய்யத்தை கட்சியை ஒரு கட்சியாகவே கூட பார்ப்பதாகத் தெரியவில்லை. தங்களுக்கு ஆபத்தில்லாத ஒருவனை பற்றி விமர்சித்து தங்கள் நேரத்தை எந்த பெரிய கட்சியின் தலைவரும் வீணடிக்கமாட்டார்.

திமுக ஒரு மிகப்பெரிய இயக்கம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு. ஜெ எப்போதும் தன்னையும், தன் பலத்தையும், தன் கட்சியையும், தன் தொண்டர்களையும் மட்டுமே நம்பி அனைத்து வியூகங்களையும் வகுப்பார். தன் பலத்தை அதிகரித்து அதை மக்களிடம் கொண்டு சென்று வெற்றி பெறுவதில்தான் ஜெ எப்போதுமே குறியாக இருப்பார். அதே சமயத்தில், மேடைகளில் தன்னை கருணாநிதிக்கு எதிராக நிலைநிறுத்தி அவரை வாங்கு வாங்கென்று வாங்கியே மக்கள் மனதில் தன்னை ஒரு ஆபத்பாந்தவராக காட்டிக்கொள்வார்.

ஆனால் திமுகவினர் அப்படியல்ல. அவர்கள் தனியாக போட்டியிடுவதை தவிர்ப்பார்கள். முதலில் பெரிய கூட்டணிக்கு முயல்வார்கள், ஆனால் அவர்கள் கேட்கும் இடங்களை கொடுக்க தயங்குவார்கள். அதிக கட்சிகள் கூட்டணியில் வேண்டும் அதே சமயம் குறைவான சீட்டுகளை பிரித்து கொடுப்பார்கள். இதனாலேயே கடைசிவரை அவர்களுடன் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவிடம் அடைக்கலமான கட்சிகள் நிறைய உண்டு.

அப்படிப் போனவர்களை விட்டுவிட்டோமே என்கிற பயத்தில் அவர்களின் பிம்பத்தை சிதைக்கும் முயற்ச்சியில் ஆட்களை நியமிப்பார்கள். ஊடகங்களையும், சமூக ஊடகங்களையும் கையில் போட்டுக்கொண்டு, பொதுமக்களிடம் திமுகதான் ஜெயிக்கும் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்ச்சிப்பார்கள். ஆனால் கடைசியில் ஜெயலலிதா நேரடியாக களத்தில் இறங்கி இவர்களை வென்றுவிடுவார்.

2006ல் வைகோவை தங்கள் கூட்டணியில் சேர்க்க கடைசிவரை முயன்றும் அவர் அதிமுக கூட்டணிக்கு போய்விட்டார். அதிமுகவில் ஜெ ஒருவர்தான் முழு பிரச்சாரத்தையும் முன்னெடுப்பார். தன் பேச்சுக்கள் மூலமாக தேர்தல் பார்வையை தன் பக்கம் திருப்புவார். பேச்சுத்திறமை உள்ள வைகோவும் சேர்ந்துவிட்டதால் அவரை சமாளிக்க, திமுக அவரின் பிம்பத்தை சிதைக்கும் வேலையில் ஈடுபட்டது.

அதே சமயம் வைகோவை திட்டினால் அது ஒரு கட்டத்தில் எதிர்மறையாகவும் போகக்கூடும் என்பதால் அவரை ஒரு காமெடியனாக சித்தரித்து அவர் என்ன பேசினாலும் மக்கள் சிரிக்கும் அளவுக்கு கொண்டு வர திட்டமிட்டனர். இந்த வேலைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.ராஜேந்தர். அவர் சந்து பொந்துகளில் எல்லாம் போய் அடுக்கு மொழியில் வைகோ அவர் ஒரு பொய்கோ, அவர் ஒரு சைக்கோ என கண்டபடி பேசிப் பேசி திமுக தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்தார். அதுவரை வைகோவின் பேச்சுக்களை உணர்ச்சிபூர்வமாக கேட்டுக் கொண்டிருந்த மக்களை, அதற்குப்பின் காமெடியனாக பார்க்க வைத்து விட்டனர். இருந்தும் 2006ல் திமுக மெஜாரிட்டி பெற முடியவில்லை.

அடுத்து 2011 தேர்தல். 2006ல் நடந்தது போலவே இம்முறையும் நடந்தது. வைகோவுக்கு பதில் விஜயகாந்த். டி.ராஜேந்தருக்கு பதில் வடிவேலு. அவ்வளவுதான். 40 சீட்டுக்களை அதிமுகவிடம் வாங்கிய விஜயகாந்தை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர முயன்று தோற்றதால் அவரின் பிம்பத்தையும், வடிவேலுவையும், மீம்ஸ் கிரியேட்டர்களையும் வைத்து திட்டமிட்டு சிதைத்து அவரையும் காமெடியனாக்கினர். ஆனால் இம்முறை ஜெயலலிதா உஷாராகிவிட்டதால் திமுகவின் எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெ மறைவுக்கு பின் திமுகவை தவிர வேறு வாய்ப்பே மக்களுக்கு இல்லாத ஒரு நிலை வந்தது. ஏன் என்றால் தமிழக மக்களை பொறுத்தவரை 1977 முதல் இன்றுவரை மக்களின் முதல் தேர்வு திமுக இல்லை. மக்களைப் பொறுத்தவரை அது ஒரு மாற்றுக் கட்சிதான். அதாவது கார் டயர் பஞ்சர் ஆகும் போது தேவைப்படும் ஸ்டெப்னி டயர் போலத்தான்.

எம்ஜிஆர் இருந்தவரை மக்களுக்கு திமுக தேவைப்படவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டு பஞ்சரானபோதும், 1996ல் ஜெயலலிதாவின் மொத்த இமேஜும் பஞ்சரானபோதும் மட்டுமே நம் மக்கள் திமுக என்னும் ‘மாற்றுக் கட்சி’யைத் தேர்ந்தெடுத்தனர். பின் ஜெ இமேஜ் மீண்டும் ரெடியானவுடன் திமுக தேவைப்படவில்லை. ஆனால் இப்போது சக்கரமே இல்லாத நிலையில் ஒரு வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போது இதைவிட திமுகவுக்கு வேறென்ன வாய்ப்பு கிடைக்க வேண்டும் ?

ஆனால் நிஜத்தில் நம் மக்கள் இன்னும் புதுசாக ஏதாவது நல்ல சக்கரம் வருமா என்று பார்க்கின்றனர். கமல்ஹாசன் உருவில் ஒரு சக்கரம் கண்ணில் பட்டது. வரும்போதே தேய்ந்துபோன அதே பழைய டயராக வந்து அதுவும் பஞ்சரானவுடன் வெறுத்துப் போய்விட்டனர். ரஜினி என்னும் சக்கரம் வருகிறதா என்ற எதிர்ப்பார்ப்புகள் இருப்பதால் அதை பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம் என்ற மனநிலையில் மக்கள் இருக்கின்றனர்.

சிலர் அந்த ரஜினி சக்கரம் எப்படா வரும் என காத்திருக்கின்றனர். சிலருக்கு அது வருமா, வராதா என்று சந்தேகம் உள்ளது, சில பேருக்கு அது வந்தாலும் நன்றாக ஓடுமா என்ற சந்தேகம் உள்ளது. சிலருக்கோ அது வந்தால் நாம முடிந்தோம் என்ற நிலை உள்ளது. இன்னும் சிலருக்கு அது வந்தால் திமுக என்னும் ஸ்டெப்னி டயரேயே இனி தேவைப்படாது என்ற மனநிலை உள்ளது. ரஜினிகாந்த் ஏன் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்கிற கோபம் மட்டும் பெரும்பாலான மக்கள் மனதில் உள்ளது.

தேர்தலை பற்றிப் பேசும்போது , ரஜினி என்று பெயரை எடுத்தாலே பல பேர் ” அட போங்க, முதல்ல அவர் வரட்டும், அப்புறம் பேசுவோம்” என்று பேச்சையே துண்டிக்கின்றனர். ஆனால் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்துவிட்டால் ? இந்த கேள்விக்கு மக்கள் வேண்டுமானால் ஒரு சலிப்பான பதிலை தரலாம். ஆனால் திமுக இதை ஜஸ்ட் லைக் தட் ஆக உதறித்தள்ள தயாரில்லை. வழக்கம் போல் பல ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு ரஜினிக்கு செல்வாக்கே இல்லை என்று இப்போதே அவருக்கெதிரான பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.

திமுகவின் வியூகம்தான் என்ன ? திரை மறைவில் என்னதான் நடக்கிறது ? ரஜினிகாந்த்தின் நிலை என்ன? உண்மையிலேயே ரஜினியை கண்டு திமுக பயப்படுகிறதா ? ரஜினியால் ஜெயிக்க முடியுமா ? இப்படி பல கேள்விகள் இன்று மக்கள் மனதில் இருக்கிறது. ரஜினிகாந்த் சதுரங்க ஆட்டம் ஆடுகிறார் என்பதும், அரசியல் கட்சி ஆரம்பிக்காமலேயே அடிப்படை கட்டமைப்பை பலப்படுத்திவிட்டார் என்பதும் ரஜினி மன்றத்தினருக்கும், அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாகவே தெரியும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தவுடன் விமர்சிக்க நிறைய இருக்கிறது. வராவிட்டால் நிம்மதி. ஆனால் வருவேன் என்கிற நிலையை மறைமுகமாக ஏற்படுத்தினால் ? பயமும், கோபமும்தான் வரும். அதனால்தான் திமுகவும் மறைமுகமாக பல் வேலைகளை செய்கிறது. இன்னும் செய்வார்கள்.

வைகோவை போன்று மூன்றாம் நபரை வைத்து பிம்ப சிதைப்பைச் செய்ய ரஜினிகாந்த் பதினோராவது ஆட்டக்காரர் ஆளில்லை. பிரதான எதிரியே அவர்தான். அதனால் திமுக தலைவர் ஸ்டாலினும் அவரது கட்சி நாளேடும் நேரடியாக களம் இறங்குகிறார்கள்.

திரைப்படங்களில் தனக்கு வில்லனாக நடிப்பவரை ரஜினிகாந்தே தேர்வு செய்வார், அரசியலில் மு.க.ஸ்டாலின் முந்திக்கொண்டுள்ளார். தனக்கும் திமுகவுக்கும் எதிரி ரஜினிகாந்த் என்பதை பல தடவை உணர்த்தி விட்டார். தமிழக தேர்தல்களில் எப்போதும் இருமுனை போட்டி தானே!

%d bloggers like this: