ரஜினி – பா.ம.க – பா.ஜ.க… புறப்படுகிறது புதிய கூட்டணி?

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்கிறதா, இல்லையா…’ என்ற கேள்விக்கு விடைதேடுவதுதான் தமிழக அரசியலின் தற்போதைய பரபர விவாதமாக இருக்கிறது.

காரணம்… சேலத்தில், வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்ய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசும்போது, “அ.தி.மு.க கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில்தான் முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், `வேல் பூஜை’ நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன், “அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது. தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில், பா.ஜ.க உறுப்பினர்கள் இடம்பெறுவது நிச்சயம்” என்று

உறுதியளித்திருக்கிறார்.

அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளில் காவிக் கொடிகளை ஏற்றிவைத்த சம்பவங்கள், `தமிழகத்தில் நடமாடவே முடியாது’ என்ற அ.தி.மு.க தரப்பின் நேரடி மிரட்டல் என அண்மைக்காலமாகவே பா.ஜ.க – அ.தி.மு.க கட்சிகளுக்கிடையிலான கூட்டணியில் சலசலப்பு நிலவிவந்தது. இந்த நிலையில், கூட்டணி குறித்து அ.தி.மு.க தரப்பிலிருந்து அதிரடி கருத்து தெரிவிக்கப்பட்ட உடனேயே பதறியடித்து, `உள்ளேன் ஐயா’ பாணியில், தமிழக பா.ஜ.க பதில் அளித்திருப்பது அரசியல் விமர்சகர்களிடையே பலத்த விவாத அலைகளை எழுப்பி வருகிறது.

இதுகுறித்துப் பேசும் முக்கியப் புள்ளிகள் சிலர், “தமிழகத்தைப் பொறுத்தவரையில் பா.ஜ.க என்பது எப்போதுமே அ.தி.மு.க-வுக்கு `எக்ஸ்ட்ரா லக்கேஜ்’தான். இதைத்தான் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலும் உணர்த்தியது. எனவே, கூட்டணியை முறித்துக்கொண்டு, சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவருகிறது அ.தி.மு.க.

இதை உணர்ந்துகொண்ட பா.ஜ.க-வும்கூட அ.தி.மு.க அல்லாத பிறகட்சிகளை ஒன்றுசேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. “ரஜினிகாந்தின் தலைமையில், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திப்பதுதான் இந்த மாற்றுத் திட்டம்” என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதுபோன்ற அரசியல் ஆரூடங்கள் ஒருபுறமிருக்க… உண்மையிலேயே தமிழக பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கட்சிகள் என்ன மாதிரியான மனவோட்டத்தில் இருந்துவருகின்றன என்பதை அறியும் முயற்சியாக, அந்தந்த கட்சிகளைச் சார்ந்த செய்தி தொடர்பாளர்களிடம் பேசினோம்… தமிழக பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, இந்த விவகாரம் குறித்துப் பேசும்போது,

ஒவ்வொரு அரசியல் கட்சியுமே தாங்கள் ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் கிடையாது. அந்தவகையில், 2021-ல் தமிழக ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் கட்சியின் கூட்டணியில் பா.ஜ.க அங்கம் வகிக்கும் என்ற அர்த்தத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். அங்கம் வகிப்பது மட்டுமல்ல… அமைச்சரவையிலும்கூட பா.ஜ.க பங்கேற்கும்.

பொதுவாக, அரசியல் கட்சிகளிடையேயான கூட்டணி என்பதே தேர்தல் கூட்டணிதான். எனவே, கொள்கை என்பது வேறு; கூட்டணி என்பது வேறு. கொள்கை ரீதியாக இரு கட்சிகளிடையே மாற்றுக் கருத்துகள் வரும்போது, சில சலசலப்புகள் எழுவது இயற்கைதான். அது கொள்கை சார்ந்த அரசியல். இதை தேர்தல் கூட்டணியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நேரம் இது அல்ல.

இன்றைய தேதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அ.தி.மு.க இருந்துவருகிறது. இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இனியும் இந்தக் கூட்டணி இப்படியே தொடரும். மற்றபடி எத்தனை சீட், எந்தெந்த தொகுதி என்பதுபோன்ற உடன்படிக்கை – பேச்சுவார்த்தைகளை தேர்தல் நேரத்தில்தான் செய்யமுடியும். இதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருப்பதாகவே நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில், ஒரே கருத்தை ஒவ்வொரு தலைவரும் அவரவர் பாணியில்தான் எடுத்துச் சொல்வார்கள். மற்றபடி `எங்களுடைய கூட்டணியில் பா.ஜ.க இல்லை’ என்று முதல்வர் எங்கேயும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை.

ரஜினிகாந்த் புதிதாக கட்சியைத் தொடங்கினால்தான், அவரோடு பா.ஜ.க கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கே நாம் பதில் சொல்லமுடியும். அதேநேரம் தி.மு.க-வோடு பா.ஜ.க கூட்டணி என்ற பேச்சுவார்த்தைக்கே இடம் இல்லை என்பதை மட்டும் இப்போதே உறுதியாக சொல்லமுடியும்” என்றார்

இதையடுத்து, கூட்டணி தொடர்பாக முதல்வர் தெரிவித்திருக்கும் கருத்தின் பின்னணி குறித்துத் தெரிந்துகொள்வதற்காக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் புகழேந்தியிடம் பேசியபோது,

“ஆளுங்கட்சியோடு இருக்கும் தோழமைக் கட்சிகளேகூட சில கருத்துகளில் முரண்படுகிறார்கள். எனவே, கூட்டணி என்பதெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் பேச முடியும். எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது உள்ளிட்ட பங்கீடுகள் அனைத்தையும் தேர்தலுக்கு முன்னதாகத்தானே கூட்டணிக் கட்சியோடு பேசவே முடியும். அதுதான் நியாயமானதும்கூட. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதைத்தான் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

அதனால்தான், இட ஒதுக்கீடு, இலவச மின்சாரம், இருமொழிக் கொள்கை என திராவிடக் கட்சிகளின் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதியாக நின்றுகொண்டு மத்திய பா.ஜ.க-வை நாங்கள் எதிர்த்து வருகிறோம். இப்போதும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது என்றே வைத்துக்கொண்டாலும்கூட, தேர்தல் நெருக்கத்தில்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைவர்கள் அனைவரும் ஒன்றுகூடி கூட்டணி குறித்த இறுதி முடிவெடுப்பார்கள். அப்போது இந்தக் கூட்டணியில் மாறுதல்கள் இருக்கலாம்; மாறுதல்கள் இல்லாமலும் இருக்கலாம்.


ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்

ரஜினிகாந்த் தலைமையில், பா.ஜ.க ஒரு கூட்டணியை அமைக்குமா என்ற கேள்விக்கு என்னுடைய தனிப்பட்ட கருத்து, `அப்படியொரு அணி அமைய வாய்ப்பில்லை’ என்பதுதான். ஏனெனில், `எனக்கு காவி சாயம் பூச நினைக்கிறார்கள். ஆனால், நான் இவர்களிடம் மாட்டிக்கொள்ளமாட்டேன்’ என ரஜினிகாந்த் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்” என்றார்.

அ.தி.மு.க – பா.ஜ.க இடையிலான சமீபத்திய முட்டல் மோதல் நடவடிக்கைகள், இதைத்தொடர்ந்துவரும் கூட்டணிக் குழப்பங்கள் என தற்போதைய தமிழக அரசியல் நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ப்ரியனிடம் பேசினோம்…

“2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், பா.ஜ.க என ஒரு வலுவான கூட்டணியைத்தான் கட்டமைத்தது அ.தி.மு.க. ஆனாலும்கூட, மத்திய – மாநில அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான மக்களின் மனநிலை, அந்தக் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்தது. `பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்ததுதான் தோல்விக்குக் காரணம். சிறுபான்மை வாக்குகளை ஒட்டுமொத்தமாக இழந்துவிட்டோம்’ என்றெல்லாம் தேர்தலுக்குப் பிறகு உணர்ந்துகொண்டது அ.தி.மு.க.

அதனால்தான் அதற்குப் பிறகு நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது பா.ஜ.க-வை முற்றிலுமாகத் தவிர்த்தது அ.தி.மு.க. அதாவது, `மத்திய அரசோடு இணக்கமாக இருந்துகொள்ளலாம். அதேநேரம் பா.ஜ.க-விடமிருந்து தனித்தே இருந்துகொள்ளலாம்’ என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு. இதுதான் `தேர்தல் நேரத்தில் கூட்டணியை முடிவு செய்வோம்’ என்ற முதல்வரின் வார்த்தைகளாக வெளிப்படுகிறது. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்த அணுகுமுறை சரிதான்.

ஆக, `உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட…’ என்பதுபோல்தான் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி இருக்கிறது. இந்த உண்மையை பா.ஜ.க-விலுள்ள ஒருசிலரும் புரிந்தே வைத்திருக்கிறார்கள். ரஜினிகாந்த் – பா.ஜ.க இடையே கூட்டணி ஏற்பட்டாலும் இதுதான் நிலைமை. ஆக, தமிழக அரசியலில், பா.ஜ.க யாரோடு சேர்ந்தாலும் அது அந்த கட்சிக்குப் பின்னடைவுதான் என்கிற சூழலில், இப்போதைக்கு தமிழக பா.ஜ.க-வின் ஒரே நோக்கம், தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான்.

ஆனால், சுற்றுச்சூழல், மின்சாரம், புதிய கல்விக்கொள்கை, இட ஒதுக்கீடு என மத்திய அரசு எடுத்துவரும் கொள்கை ரீதியிலான சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்துமே தமிழக அரசியலில், ஒட்டுமொத்த எதிர்ப்பு மனப்பான்மையைத்தான் மக்களிடையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. எனவேதான் வலுவாக இருக்கும் தி.மு.க கூட்டணியை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாக கடவுள், மதம் என்று களம் இறங்கியிருக்கிறார்கள் பா.ஜ.க-வினர். இந்த வியூகத்தால், பா.ஜ.க-வுக்கு வாக்கு கிடைக்கவில்லை என்றாலும்கூட, தி.மு.க-வுக்கு எதிராக தேர்தல் களத்தில் நிற்கும் அ.தி.மு.க-வுக்கு பலன் கிடைக்கலாம். அப்படிக் கிடைப்பதைப் பற்றி பா.ஜ.க-வும் கவலைப்படப் போவதில்லை.

பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன், இப்போது கூட்டணி குறித்துப் பேசுவதைப் பற்றியெல்லாம் பெரிதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில், தமிழ்நாட்டில் பா.ஜ.க யாரோடு கூட்டணி சேரவேண்டும் என்பதையெல்லாம் அக்கட்சியின் மத்திய தலைமைதான் முடிவு செய்யப்போகிறது. அதன்படி, வருகிற சட்டமன்றத் தேர்தலை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தனித்தனியேதான் தேர்தலை சந்திக்கப்போகிறார்கள்.

அடுத்து, `ரஜினிகாந்த் – பா.ம.க – பா.ஜ.க’ என்றொரு கூட்டணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். ஏனெனில், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் அன்புமணிதான் முதல்வர் வேட்பாளர் என்பதில் பா.ம.க தெளிவாக இருக்கிறது. மேலும் பா.ம.க-வோடு கூட்டணி சேருகிறபோது, தலித்களின் வாக்குகளோடு ஏனைய இடைநிலை சாதிகளின் வாக்குகளையும் அக்கூட்டணி இழக்க நேரிடும்.


நரேந்திர மோடி

ரஜினிகாந்த், பா.ம.க-வோடு சேர்ந்தால் சாதிச்சாயமும் பா.ஜ.க-வோடு சேர்ந்தால் மதச் சாயமும் பூசப்பட்டு வாக்குகளை இழக்க வேண்டிவரும். அவருக்குப் புத்திசாலித்தனம் இருந்தால், `நான் என்னை நம்பித்தான் நிற்கிறேன். எனக்கு வாக்களியுங்கள்’ என்று மக்களிடம் கேட்டால், அவருக்கு கணிசமான வாக்குகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அதுவும்கூட, ஆட்சியைப் பிடிக்கிற அளவுக்கான மெஜாரிட்டி எண்ணிக்கையாக இருக்காது” என்கிறார் விளக்கமாக.

%d bloggers like this: