கூட்டணி பேரத்தை ஆரம்பித்த தமிழக காங்கிரஸ்… திமுக- அதிமுகவுக்கு செக் வைக்கும் கே.எஸ்.அழகிரி..!

சுதந்திர தினம் மற்றும் காந்தியின் 150 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக்கம்பத்தில், 40/30 அடி பிரம்மாண்ட கட்சிக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மகாத்மா காந்தி அவர்களின் 150 ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேசப்பிதாவிற்கு பெருமையும், புகழும் சேர்க்கிற வகையில் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றுகிற நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில், தேசிய கொடியை நான் ஏற்றிய பிறகு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைக்கிற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

தமிழக காங்கிரஸ் வரலாற்றில் புதிய சாதனை படைக்கிற வகையில் சர்வதேச தொழில் நுட்பத்தின் அடிப்படையில் 150 அடி கொடி கம்பம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஏற்றப்படுகிற காங்கிரஸ் கொடியின் அளவு 45 அடி அகலம், 30 அடி உயரம் கொண்ட பிரமாண்டமானதாகும். உலகத்தில் எந்த அரசியல் கட்சி அலுவலகத்திலும் இவ்வளவு பெரிய கொடி அமைத்ததில்லை என்கிற கின்னஸ் சாதனையை இது படைத்திருக்கிறது. இது தமிழக காங்கிரஸின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பறை சாற்றுகிற வகையில் 150 அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கவிருக்கிறது.

காங்கிரஸ் மூவர்ண கொடி குறித்து நாமக்கல் கவிஞர் பாடும் போது, ‘சாதி பேத தீமையை சாம்பலாக்கும் கொடியிது! நீதியான எதையுமே நின்று காக்கும் கொடியிது’ என்று அர்த்தம் பொதிந்த கருத்துக்களை கூறியதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்

நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு எத்தனை கொடியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் கொடியில் இருக்கிற வண்ண தோற்றப் பொலிவைப் போல எந்தக் கொடிக்கும் இல்லையென்று பெருமையாகக் கூற முடியும். கைராட்டை பொறித்த இந்த மூவர்ண கொடியின் கீழ் தான் காந்தியடிகளின் தலைமையில் இந்தியாவிற்கு விடுதலை பெற்று தந்தோம்.

எனவே, ஆகஸ்ட் 15 அன்று காலையில் நடைபெறுகிற சுதந்திர தின விழாவில் தேசிய கொடி மற்றும் 150 அடி உயர கம்பத்தில் காங்கிரஸ் கொடியேற்றுகிற விழாவிற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள், காங்கிரஸ் செயல் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் செயல்வீரர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்

காங்கிரஸ் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை படைக்கப் போகும் இந்த எழுச்சிமிகு விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன் என அழைப்பு விடுத்தித்திருட்ந்தார். கொரோனா காலத்தில் இப்படி காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா நோய் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்தாண்டு, பொது மக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் விழாவைக் காண நேரில் வரவேண்டாம் எனவும், சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டிருந்தார். அதற்கு மாறாக கே.எஸ்.அழகிரியின் இந்த அழைப்பு அமைந்துள்ளது. இதுகுறித்து அரசியல் ஆர்வலர் ஒருவர், ”எப்போதுமே காங்கிரஸ் தேர்தல் நேரத்தில் மட்டும் கூட்டம் கூட்டும். மாநாடு நடத்தும். காரணம் கூட்டணி கட்சிகளிடம் அதிக சீட் பெறுவதே அதன் நோக்கம். அந்த யுக்தியை தான் கொரோனா காலத்திலும் எடுக்க முன் வந்துள்ளார் கே.எஸ். அழகிரி. அவர் அழைப்பு விடுத்ததில் இரண்டு வகை அரசியல் உண்டு.

இந்த விழா பிரம்மாண்டமாக நடந்தால் கூட்டணி கட்சிகளிடம் சீட் பேரம் நடத்துவது. அனுமதி அளிக்கவில்லையென்றால் ஆளுங்கட்சி அனுமதிக்கவில்லை என குறை கூறி எதிர்ப்பு அரசியல் நடத்தி அனுதாபம் தேடுவது… இந்த இரண்டில் எது நடந்தாலும் ஆதாயம் பெறலாம் என கே.எஸ்.அழகிரி கணக்கு போடுகிறார்” என அவர் கூறுகிறார்.

%d bloggers like this: