தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிஸ்அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராகிறார்

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ், 55, அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது. அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட உள்ள, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், தன் துணை அதிபர்

வேட்பாளராக, ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா தேவி ஹாரிஸ் பெயரை அறிவித்துள்ளார். அமெரிக்க வாழ் ஆப்ரிக்க மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை குறி வைத்து, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ல் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப், 74, மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து, ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், 77, போட்டியிட உள்ளார்.ஆதரவு:அதிபர் வேட்பாளரை முறையாக அறிவிக்கும், ஜனநாயக கட்சியின் மாநாடு விரைவில் நடக்க உள்ளது.இந்நிலையில், தன் துணை அதிபர் வேட்பாளராக, செனட் எம்.பி.,யான, கமலா ஹாரிஸ் பெயரை, ஜோ பிடன் அறிவித்துள்ளார். அதிபர் வேட்பாளர் தேர்தலில், கமலா ஹாரிசும் போட்டியிட்டார். இந்தாண்டு துவக்கத்தில், போட்டியில் இருந்து விலகிய அவர், ஜோ பிடனுக்கு ஆதரவு தெரிவித்தார்.சாதனை:கமலா ஹாரிசின் தந்தை, ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்டவர்; தாய், சென்னையைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான கமலா ஹாரிஸ், கலிபோர்னியாவின் செனட் எம்.பி.,யாக உள்ளார்.
கமலா ஹாரிஸ், துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் மூலம், பல புதிய பெருமைகளை பெற்றுள்ளார். தேர்தலில் வென்றால், நாட்டின் முதல் பெண் துணை அதிபராவார். ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட முதல் பெண் துணை அதிபர் வேட்பாளர், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட முதல் பெண் துணை அதிபர் வேட்பாளர் என, பல சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராகிறார். அதிபர் தேர்தல் தொடர்பாக, இதுவரை வெளிவந்துள்ள கருத்துக் கணிப்புகளில், டிரம்பை விட, ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.


பெரும் சாதகம்:இந்நிலையில், ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிசை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது, ஜோ பிடனுக்கு பெரும் சாதகமாக கருதப்படுகிறது. ஆப்ரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர், ஜார்ஜ் பிளாய்ட், போலீசாரால் கொல்லப்பட்ட விவகாரத்தை அடுத்து, அமெரிக்காவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடந்தன. அதேபோல், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகளும், பல முக்கிய மாகாணங்களில் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பதாக உள்ளன.’ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவரை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளது, ஜனநாயக கட்சிக்கு இரட்டிப்பு சாதகமாக இருக்கும்’ என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் மூலம், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவின் துணை அதிபராகும், ‘லக்’ அடித்துள்ளது.’தாமரை மலர்கிறது’கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு, அமெரிக்க வாழ் இந்தியர்கள் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
”மிகச் சிறந்த தேர்வு; நம் சமூகத்துக்கு பெருமை சேர்க்கிறது,” என, பெப்சிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் இந்திரா நுாயி கூறியுள்ளார்.கமல் என்றால், ஹிந்தியில், தாமரை என்று பொருள். அதைக் குறிப்பிடும் வகையில், ‘அமெரிக்காவில் தாமரை மலர்கிறது’ என, கமலா ஹாரிஸ் ஆதரவாளர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். கமலா ஹாரிஸ் தேர்வுக்கு பாராட்டு தெரிவித்து, அமெரிக்க பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஆப்ரிக்க ஊடகங்களும் இந்த முடிவை வரவேற்று செய்தி வெளியிட்டுள்ளன.டிரம்ப் ஆச்சரியம்:இது குறித்து, டிரம்ப் கூறியதாவது: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலின்போது, ஜோ பிடனை மிகவும் மோசமாக விமர்சித்தவர், கமலா ஹாரிஸ்.
அந்தக் கட்சியைச் சேர்ந்த மற்றவர்களை விட, மிக மோசமான குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். தன்னை இகழ்ந்து பேசிய அவரை துணை அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் தேர்வு செய்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது.வரிகளை உயர்த்துவது, ராணுவத்துக்கான ஒதுக்கீட்டை குறைப்பது உள்ளிட்டவையே அவருடைய கொள்கையாக உள்ளது. கமலா ஹாரிசை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். அவருடைய தேர்வு ஆச்சரியமளிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.’ஜோ பிடன் மற்றும் ஜனநாயக கட்சியினர், மதவாத கொள்கைக்கு மாறியுள்ளனர். அதுவே, இந்த தேர்வின் வெளிப்பாடு’ என, துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டுள்ளார்.ஒபாமா பரிந்துரை:கமலா ஹாரிசை, துணை அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து, ஜனநாயக கட்சி மூத்த தலைவர்கள் கூறியதாவது:ஜோ பிடன் துணை அதிபராக இருந்தபோது, கமலா ஹாரிஸ், செனட் எம்.பி.,யாக பணியாற்றினார். அவருடைய திறமைகளை நேரில் பார்த்துள்ளார். வழக்கறிஞராக அவருடைய அனுபவமும் சாதகமாக அமைந்தது.
மேலும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆலோசனை மற்றும் பரிந்துரையும், கமலாவுக்கு சாதகமாக அமைந்தது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.தாயின் மந்திரம்’சும்மா உட்கார்ந்து கொண்டு, எப்போதும் குறை கூறாதே; மாற்றத்துக்கு நீயாக எதையாவது செய்.’ இது தான், கமலாவுக்கு அவருடைய தாய், ஷியாமளா கோபாலன் கூறிய மந்திரம். இதைத் தொடர்ந்து தன் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருவதாக, கமலா ஒருமுறை கூறியுள்ளார்.ஷியாமளா, தன் மகள்களுக்கு, கமலா தேவி, மாயா என, பெயரிட்டார். இருப்பினும், கணவரின் விருப்பத்திற்கேற்ப, குழந்தைகளை ஆப்ரிக்க முறைப்படி வளர்த்தார்.
இருந்தாலும், சென்னையுடன், கமலாவுக்கு எப்போதும் ஒரு பிடிப்பு உண்டு. இந்தியக் கலாசாரத்திலும் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.இட்லியும் சாம்பாரும்…கமலா ஹாரிசிற்கு இட்லி, சாம்பார், தயிர் சாதம், பருப்பு, உருளைக்கிழங்கு மசாலா உணவு மிகவும் பிடிக்குமாம். சிறு வயதில், ஒவ்வோர் ஆண்டும், கமலா ஹாரிசும், அவரது சகோதரியும், சென்னை, பெசன்ட் நகரில் உள்ள தாத்தா வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது, இவற்றை விரும்பி சாப்பிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவில் இந்தியர்கள்:அதிபர் தேர்தலில், அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.
மொத்தம், 13 லட்சம் இந்தியர்கள் ஓட்டளிக்க உள்ளனர். அதில், பென்சில்வேனியாவில் உள்ள, இரண்டு லட்சம் ஓட்டுகள்; மிச்சிகனில் உள்ள, 1.25 லட்சம் இந்தியர் ஓட்டுகள், வெற்றித் தோல்வியை நிர்ணயிக்க உள்ளன. கடந்த, 2016 தேர்தலில், 77 சதவீத இந்திய அமெரிக்கர்கள், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஓட்டளித்ததாக, புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.யார் இந்த கமலா ஹாரிஸ்?அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசிய பெண்.
இவர், 1964 அக்., 20ல் கலிபோர்னியாவின் ஆக்லேண்டில் பிறந்தார். மார்பக புற்றுநோய் விஞ்ஞானியான இவரது தாய் ஷியாமளா கோபாலன், தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்தவர். தந்தை, டொனால்டு ஹாரிஸ், ஆப்ரிக்காவின் ஜமைக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் பெர்க்லி பல்கலையில், ஆராய்ச்சி படிப்புக்காக வந்த ஷியாமளாவும், ஹாரிசும் காதலித்து திருமணம் செய்தனர்.
ஹாரிஸ், ஸ்டான்போர்டு பல்கலையில் பேராசிரியராக பணியாற்றியவர். கமலா ஹாரிஸ், சகோதரி மாயா ஹாரிஸ் தமிழகத்துக்கு பல முறை வந்துள்ளனர். தமிழ் மொழி கொஞ்சம் தெரியும் என கமலா தெரிவித்துள்ளார். இவருக்கு ஏழு வயதான போது, பெற்றோர் விவாகரத்து பெற்றனர்.
இதனால் தாய் மற்றும் சகோதரியுடன் கனடாவின் மான்ட்ரீல் நகருக்கு சென்றனர். பின் அமெரிக்கா திரும்பிய இவர், 1986ல் ஹார்வர்டு பல்கலையில் பி.ஏ., அரசியல் அறிவியல், பொருளாதாரம் மற்றும் 1990ல் சட்டம் முடித்தார். இரண்டு கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். தன்னுடைய தாய் வழி தாத்தாவான, வி.டி.
கோபாலனை சந்திக்க, சென்னைக்கு அடிக்கடி வந்துள்ளார். பெசன்ட் நகர் கடற்கரையில், தாத்தாவுடன் நடந்து சென்ற அனுபவங்கள் பசுமையாக இருப்பதாக, பலமுறை அவர் குறிப்பிட்டுள்ளார்.கமலா, வழக்கறிஞரான, டக்ளல் எமோபை, 2014ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதே நேரத்தில், தன் கணவரின் முந்தைய திருமணத்தில் பிறந்த எல்லா மற்றும் கோலோயை அவர் வளர்த்து வருகிறார்.
அட்டர்னி ஜெனரல்:கமலா, ஆரம்பத்தில், கலிபோர்னியாவின் அலமேடா மாவட்ட அட்டர்னியாக பணியாற்றினார். 1998ல் சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அட்டர்னியானார். 2011 ஜன., 3ல் கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரல் தேர்தலில் வெற்றி பெற்றார். இப்பொறுப்பை ஏற்ற முதல் தெற்காசிய அமெரிக்கரானார்.
2014ல் மீண்டும் தேர்வானார். இன வெறிக்கு எதிரான வழக்குகளில் ஆஜராகியுள்ளார். ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு ஆதரவு அளித்த அவர், கருப்பினத்தவர் வாழ்க்கை விவகாரம் இயக்கத்திற்கு ஆதரவாக பேசி, பலரின் ஆதரவை பெற்றவர். கல்வித் துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது குறித்தும் பேசியுள்ளார்.
மரணத் தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தார். புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிரான அதிபர் டிரம்பின் திட்டத்தை எதிர்த்து பேசியுள்ளார். முன்னாள் அதிபர் ஒபாமா பதவிக்காலத்தில், அமெரிக்காவின் அட்டர்னி ஜெனர லாக வாய்ப்பு இருந்தது. ஆனால் இதில் ஆர்வமில்லை என மறுத்து விட்டார்.
2016ல் சுப்ரீம் கோர்ட் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 21 புத்தகங்களை எழுதியுள்ளார். 2019 ஆக.,படி இவர் மற்றும் கணவரது சொத்து மதிப்பு, 43.34 கோடி ரூபாய்.முதன் முதலாக…கமலா ஹாரிசிற்கு அவரது தாய் ஷியாமளா கோபாலன் மீது அன்பு அதிகம். இது குறித்து அவர் கூறுகையில், ‘ஷியாமளா மகள் என்பதை உலகின் மிகப்பெரிய பொக்கிஷமாக கருதுகிறேன். என்னை இந்திய கலாசாரப்படி வளர்த்தார். அவரது பாசத்தின் வார்த்தைகள் தாய்மொழியான தமிழில் வந்தன. வாழ்க்கையில் எப்போதும் முதலிடத்தில் இருக்க வேண்டுமென வலியுறுத்துவார்’ என்றார்.

%d bloggers like this: