ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – துலாம்

 

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

நம்பி வந்தவர்களைக் கைவிடாது நேசக்கரம் நீட்டுபவர் நீங்கள். கடலளவு அன்பு கொண்டவரான நீங்கள், சொன்ன சொல்லைக் காப்பாற்ற, துடிப்புடன் செயல்படக் கூடியவர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 9- ம் வீட்டில் அமர்ந்து சேமிப்புகளைக் கரைத்ததுடன், உங்களுக்கும் தந்தையாருக்கும் ஓர் இடைவெளியை ஏற்படுத்திய ராகு பகவான், இப்போது 8-ம் வீட்டில் சென்று மறைகிறார். சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக்கொள்வீர்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். பாகப் பிரிவினைப் பிரச்னை சுமூகமாக முடியும்.

8-ல் ராகு அமர்வதால் பயணங்கள் அதிகமாகும். இடமாற்றமும் இருக்கும். அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். குடும்பத்தில், கணவன் – மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும். வாகனத்துக்கான ஆவணங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் புதுப்பிக்கத் தவறாதீர்கள். அபராதம் கட்ட வேண்டி வரும்.

 

சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர், நண்பர்கள் வீட்டு உள்விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் உண்மையானவர்கள், யார் போலியானவர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதில் தடுமாற்றம் இருக்கும்.

திடீர் திடீரென்று ஒருவித மனோபயம் வந்து போகும். பிள்ளைகளுக்கு அதிக அறிவுரை சொல்லி நெருக்கடிக்குள்ளாக்காதீர்கள். முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களைப் பகிர வேண்டாம்.

சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்படுபவர்களுடன் எந்த நட்பும் வேண்டாம். புது வேலை கிடைக்கும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் தன, சப்தமாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பணத் தட்டுப்பாடு, எதிலும் பிடிப்பற்ற போக்கு, சிறுசிறு நெருப்புக் காயங்கள் வந்து செல்லும்.

வாழ்க்கைத் துணைவருக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்துமோதல்கள் வந்து நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோதர வகையில் மன வருத்தம் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழல் உருவாகும். பழைய கடன் பிரச்னையைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை, ஜீவனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

13.09.2021 முதல் 21.03.2022 வரை ராகுபகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், அரசால் நெருக்கடிகள், முன்கோபம், வீண் டென்ஷன் வந்து செல்லும். திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.

வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். சிலர் உதவுவதைப் போல் உபத்திரவம் தருவார்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். சந்தை நிலவரத்தை அவ்வப்போது உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்பச் செயல்படுங்கள். பாக்கிகளைப் போராடி வசூலிக்க வேண்டி வரும். வேலையாள்களின் குறை, நிறைகளைச் சுட்டிக் காட்டி அன்பாகத் திருத்துங்கள்.

தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலமாகப் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாவீர்கள். தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். ரியல் எஸ்டேட், ரசாயனம், இரும்பு, எலெக்ட்ரிக்கல்ஸ், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். புது அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களும் உங்களைப் புரிந்து கொண்டு உதவுவார்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது. சம்பள பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்கும் துணிச்சலையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து வந்த கேது பகவான், இப்போது ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைகிறார்.

இடம், பொருள், ஏவலறிந்து செயல்படப் பாருங்கள். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூடச் சிலர் தவறாகப் புரிந்துகொள்வார்கள். குடும்பத்திலும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்திலும் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்தப்பாருங்கள். பல் வலி, காது வலி வந்து போகும். கண் பார்வையைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. வழக்குகளில் அலட்சியப்போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். போலி புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். தொலைந்து போன பழைய ஆவணம் ஒன்று கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் வருமானம் உயரும். பாகப் பிரிவினை சாதகமாக முடியும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

சொந்த பந்தங்கள் உங்கள் வளர்ச்சி யைக் கண்டு வலிய வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். புதிதாக மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே… அதற்கு நல்ல பதில் வரும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் சுக, பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத் தில் கேது செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள்.

தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்துவீர்கள். மகனின் பொறுப்பு உணர்வு அதிகமாகும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும்.

17.01.2022 முதல் 21.03.2022 வரை கேதுபகவான் திருதியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்கிறார்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள், தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை வந்து நீங்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். இளைய சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். தங்க நகைகளை இரவல் தர வேண்டாம்.

யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து போகும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள்.

வேலையாள்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி – வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

தொழில் ரகசியங்கள் வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். சில சலுகைத் திட்டங்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் மத்தியில் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி செலவுகளையும் திடீர் பயணங்களையும் தருவதுடன், அவ்வப்போது உணர்ச்சி வசப்பட்டுப் பேச வைப்பதாக அமையும்!

பரிகாரம்: திருப்பதிக்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீகாளஹஸ்திக்குச் சென்று, ஸ்ரீகாளத்திநாதரையும், ஸ்ரீஞானப்பூங்கோதை அம்பாளையும் வழிபட்டு வாருங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்; வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.

%d bloggers like this: