ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – தனுசு

தனுசு

நெருக்கடிகள் வந்தாலும் நேர்வழியில் செல்லும் நீங்கள் பணம், பட்டம், பதவிக்கெல்லாம் பணியமாட்டீர்கள். மற்றவர்கள் ஏளனமாகப் பேசினாலும், எரிச்சல் அடையாமல் யதார்த்தமாக இருப்பீர்கள். மனசாட்சி அதிகமுள்ள நீங்கள், பெற்ற தாயையும் பிறந்த மண்ணையும் முழுமையாக நேசிப்பவர்கள்.

ராகுவின் பலன்கள்

 

இதுவரை உங்கள் ராசிக்கு 7- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே… திறமை இருந்தும் வெளி உலகில் ஓர் அங்கீகாரம் இல்லாமல் கௌரவக் குறைவை உண்டாக்கினாரே… தாழ்வு மனப்பான்மையால் மனஉளைச்சலுக்கு ஆளானீர்களே… இப்படி உங்களைப் பாடாய்ப்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

உங்களை எதிரியைப்போல் பார்த்த குடும்பத்தினர் இனி பாசத்துடன் நடந்துகொள்வார்கள். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் மருந்து, மாத்திரையிலிருந்து விடுபடுவார். அவரின் ஆரோக்கியம் சீராகும். அவர் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.

பிள்ளைகளின் வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பழைய வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தள்ளிப்போன அரசாங்க விஷயங்கள் விரைந்து முடிவடையும்.

ராஜதந்திரமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கூடாப்பழக்க வழக்கங் களிலிருந்து மீள்வீர்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும்.

உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். திடீர்ப் பயணங்கள் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு வேலை கிடைக்கும்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், சில நேரங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைபோல் உணர்வீர்கள். மன அழுத்தம், டென்ஷன், கழுத்து வலி, தொண்டை வலி, சைனஸ் – தலை வலி வந்து நீங்கும். சிலர் உங்களைத் தவறான போக்கிற்குத் தூண்டுவார்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன் சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகுபகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், பிதுர்வழிச் சொத்து பிரச்னை தீரும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும்.

தந்தைவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். லோன் உதவிகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் இழப்புகளைச் சரி செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். அனுபவமிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

கட்டட உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடனான மோதல்கள் விலகும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்குத் தகுந்தாற் போல் ஒருவர் பங்குதாரராக அறிமுகமாவார்.

உத்தியோகத்தில் அவப்பெயர் நீங்கும். உயரதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்து கொள்வார்கள். அண்டை மாநிலத்தில், அயல்நாட்டில் வேலை வாய்ப்புகள் வரும். சம்பள உயர்வு, சலுகைகளும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து கொண்டு பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சுறுத்தலையும், அவ்வப்போது படபடப்பையும், இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தந்து கொண்டிருக்கும் கேது, ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும்.

வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். நோய்கள் குணமாகும். ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்களின் பலவீனங்களை ஒவ்வொன்றாகச் சரி செய்யவேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள். உணர்ச்சிவசப்படாமல் பேசத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைத் தெரிந்து கொள்வீர்கள்.

ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட 500 ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போது திட்டமிட்டாலும் முடியாமல் போகும். சில நாள்கள் தூக்கம் குறையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் வந்து போகும். வேற்று மொழியினர், அண்டை மாநிலத்தவர்களால் ஆதாயமடைவீர்கள்.

வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். முதல் மரியாதைய கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். புதுப் பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். வி.ஐ.பிகளின் நட்பால் சில விஷயங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் சப்தமாதிபதியும் தசமாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேது பகவான் செல்கிரார். ஆகவே ஒருவித மனோபயம், முன்கோபம், வீண் டென்ஷன், அலர்ஜி, நரம்புச் சுளுக்கு, தோலில் நமைச்சல் வந்து போகும்.

வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமோ, முடியாதோ என்றெல்லாம் சில நேரங்களில் சங்கடப்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரக்கூடும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் தன சேவகாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், துணிச்சலாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.

இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். தள்ளிப் போன சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. திருமணம் கூடி வரும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை, கேதுபகவான் ராசிநாதனும் சுகாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அழகு, அறிவு, ஆரோக்கியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பால் தெளிவடைவீர்கள்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. சமுதாயத்தில் மதிக்கத்தகுந்த அளவிற்குக் கௌரவப் பதவிகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஷேர் மூலம் பணம் வரும்.

வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இங்கிதமாகப் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.

உத்தியோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். என்றாலும், சுடுதல் நேரம் ஒதுக்கிப் பணி புரிய வேண்டிய நிலை ஏற்படும். சக ஊழியர்களுக்காக வாதாடிச் சாதித்துக் காட்டுவீர்கள். நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது மாற்றம், உங்களுக்கு அழகு, ஆரோக்கியத்தையும் பணம், பதவியையும் பெற்றுத் தந்து உங்களை மகிழ்விப்பதாக அமையும்.

பரிகாரம்:

கும்பகோணம் நகரத் தின் மையத்தில் அமைந்துள்ள – ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ் வரர் கோயிலில் அருளும் ஸ்ரீநாகேஸ் வரரையும் ஸ்ரீபெரியநாயகியையும் வழிபட்டு வாருங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்; வாழ்வில் வெற்றி கிட்டும்.

%d bloggers like this: