ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – மகரம்

மகரம்

மனிதர்களின் மனநிலையை நொடிப் பொழுதில் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளவர்களே, துவண்டு வருவோருக்குத் தோள் கொடுக்கும் சுமைதாங்கிகளே… புரட்சிகரமான எண்ணங்கள் உடைய நீங்கள், மனிதநேயத்தை மழுங்க வைக்கும் மூடச் சிந்தனைகளை தூக்கி எறிவீர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 6- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு சமூக அந்தஸ்தையும், வசதி வாய்ப்பு களையும், வருமானத்தையும் தந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 5-ம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல. எனினும் சுக்கிரனின் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களைக் குறைத்து நல்லதையே செய்வார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

குடும்பத்திலிருந்த சச்சரவு குறையும். கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சோர்வு நீங்கித் துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் முன்கோபம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

சிலர் பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று காணிக்கையைச் செலுத்துவீர்கள். மகளின் திருமண விஷயத்தில் அவசரம் வேண்டாம். அக்கம் – பக்கம் வீட்டாருடன் பிரச்னைகள் வேண்டாம்.வழக்கில் அலட்சியம் வேண்டாம். அலைபேசியில் பேசிக்கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். முன்யோசனையில்லாமல் அவசர முடிவுகள் எடுத்து, பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் சுகாதிபதி யும் லாபாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்கிறார்.

வேலைச்சுமை, வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல்கள், களைப்பு, ஒருவித வெறுப்பு உணர்வு வந்து செல்லும். உங்களின் தாயார் கோபத்தில் ஏதோ சொன்னாலும் அதையெல்லாம் பொருட்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். வீட்டில் கழிவு நீர்க் குழாய், குடிநீர்க் குழாய் பழுது, மின் கசிவுகள் ஏற்படக்கூடும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசிப்பது நல்லது. பழைய கடன், பகையை நினைத்துக் கலங்குவீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை சப்தமாதி பதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.

உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பாதியில் நின்ற கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை, ராகு பகவான் உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். அரசுக் காரியங்கள் இழுபறியாகும்.

திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். தூக்கம் குறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

வியாபாரத்தில் வழக்கமான லாபம் உண்டு என்றாலும் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நட்டப் படாதீர்கள். சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.

வேலையாள்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். ஹோட்டல், துணி, பெட்ரோ கெமிக்கல், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களிடம் நீங்கள் வளைந்து கொடுக்க வேண்டி வரும்.

உத்தியோகத்தில் ஒருபக்கம் வேலைச்சுமை இருந்தாலும் மறுபக்கம் மூத்த அதிகாரிகளின் பாராட்டால் உற்சாகமடைவீர்கள். சக ஊழியர்களில், உங்களுக்கு எதிராகச் செயல் பட்டவர்களின் மனசு மாறும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள். உங்களின் செல்வாக்கு ஓங்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து பயணங்களால் அலைச்சல்களையும், சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவினங்களையும், மன இறுக்கத்தையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான 11 – ல் வந்தமருகிறார்.

பணப்புழக்கம் அதிகரிக்கும். கடனாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். வழக்கு சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

புதுப் பொறுப்புகள், பதவிகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். வீரியத்தை விடக் காரியம்தான் முக்கியம் என்பதை உணர்வீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் பாக்கியாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் திடீர் யோகம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விருந்தினர் வருகை, சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். பூர்விகச் சொத்தை புதுப்பிப் பீர்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து நிற்க வேண்டும் என்று எண்ணுவீர்கள். அதற்கேற்ப, கடுமையாக உழைத்து முன்னேற்றம் காண்பீர்கள்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் ராசிநாதனும் தனாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

குடும்பத்தில் நல்லது நடக்கும். நகர எல்லையைத் தாண்டி வீட்டு மனை வாங்குவீர்கள். நீண்ட நாள்களாகத் தள்ளிப்போன காரியங்கள் முடிவடையும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேது பகவான் திருதியாதிபதியும் விரையாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பயணங்கள் அதிகரிக்கும். தூக்கம் குறையும்.

சில காரியங்கள் தடைப்பட்டு முடியும். யாரும் நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று புலம்புவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழந்து விடாதீர்கள்.

வாகனத்தில் செல்லும் போதும், சாலைகளைக் கடக்கும் போதும் நிதானம் அவசியம். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

வியாபாரத்தில் பழைய தவறுகள் நிகழ்ந்துவிடாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். லாபம் இரட்டிப்பாகும். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். சிலர் மொத்த வியாபாரத்திற்கு மாறுவீர்கள். பழைய வேலையாள்கள் மீண்டும் பணியில் வந்து சேருவார்கள். கடையைப் பிரபலமான இடத்திற்கு மாற்றவீர்கள்.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களின் உயர் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். இங்கிதமாகப் பேசி சக ஊழியர்களின் குறை, நிறைகளைச் சரி செய்வீர்கள். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது மாற்றத்தில், ராகுவால் மனநிம்மதி இல்லாத போக்கு ஏற்பட்டாலும் கேதுவால் திடீர் யோகமும், வசதி, வாய்ப்பும் உண்டாகும். புது அனுபவ பாடங்களைப் பெற்றுத் தருவாதாகவும் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அமையும்.

பரிகாரம்:

நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற ஊர், நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள நாகூர். இங்கே கோயில் கொண்டு அருள்பாலிக்கும் ஸ்ரீநாகவல்லி சமேத ஸ்ரீநாகநாதரை வழிபடுங்கள். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள்; தொட்டது துலங்கும்

%d bloggers like this: