ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – கும்பம்

கும்பம்

வாய்மையே வெல்லும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடையவர் நீங்கள். நாட்டுநலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உலக விஷயங்களை உன்னிப்பாகக் கவனிக்கும் நீங்கள், எப்போதும் தொலைநோக்குச் சிந்தனை உள்ளவர்கள். மற்றவர்களின் ஆளுமைக் குக் கட்டுப்பட்டுச் செயல்பட மாட்டீர்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு திசைக்கொரு பக்கமாகப் பிரச்னைகளைக் கொடுத்து நாலாவிதத்திலும் பாடாய்படுத்தினார் ராகு. உங்களை மனஉளைச்சலுக்கு ஆக்கினார். ஆழ்ந்த உறக்கமில்லாமல் தவித்தீர்கள். இப்போது ராகுபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் வந்து அமர்வதால் இனி எல்லாவற்றையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தைத் தருவார்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

5-ம் வீட்டை விட்டு ராகு விலகியதால், பல முறை சிகிச்சை பெற்றும் குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்க்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாத குணமும், பொறுப்பற்ற போக்கும் மாறும். இனி உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பூர்விகச் சொத்தில் உங்களுக்குச் சேர வேண்டிய பங்கு கைக்கு வரும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பழைய உறவினர்கள் இப்போது வலிய வந்து பேசுவார். ராகு 4- ம் வீட்டில் அமர்வதால், அரசு அப்ரூவல் வாங்காமல் வீடு கட்டத் தொடங்க வேண்டாம். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் திருதியாதி பதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், வேலைச்சுமையால் மனஇறுக்கம் அதிகமாகும். சொத்து வாங்கும் முன் தாய்பத்திரம், வில்லங்கச் சான்றிதழ்களையெல்லாம் சரி பார்ப்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். வழக்கில் தீர்ப்புத் தாமதமாகும். யாரையும் எதற்காகவும் பரிந்துரை செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் விரும்பத்தாக இடமாற்றம் வரும். சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை சஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் எதிர்ப்புகள், விமர்சனங்கள் அதிகமாகும். வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். வாகனம் அடிக்கடிச் செலவு வைக்கும்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகு பகவான் உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் நிம்மதியற்ற போக்கு நிலவும். வளைந்துகொடுத்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள்.

கணவன் – மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகளின் முன்னிலையில் வாழ்க்கைத் துணையைக் குறைவாகப் பேச வேண்டாம். திருமண முயற்சிகள் சற்றுத் தாமதமாகி முடியும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும்.

வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரங்களைத் தெரிந்து கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ எடுக்க்கப் பாருங்கள். வேலையாள்கள் குறித்து ஆதங்கப் படுவீர்கள். பங்குதாரர்கள் உங்களின் கருத்துக்களை முதலில் மறுத்தாலும் பிறகு ஏற்றுக்கொள்வார்கள். இரும்பு, கடல் உணவுகள், மூலிகை, கம்ப்யூட்டர் உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். சக ஊழியர்களில் ஒருசிலர், உங்களைப் பற்றிய தவறான வதந்திகளை உயரதிகாரிகள் மத்தியில் பரப்புவார்கள். நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் கூடப் போராடிப் பெற வேண்டி வரும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசிக்கு 11 -ம் வீட்டில் அமர்ந்து திடீர் யோகங்களையும், செல்வம், செல்வாக்கையும் தந்த கேது பகவான், இப்போது 10-ம் வீட்டில் வந்தமர்வதால், வேலைச்சுமையால் பதற்றம், சோர்வு வந்து போகும். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். அடுத்தவர்கள் விவகாரத்தில் நீங்களும் மூக்கை நுழைக்காதீர்கள்.

உங்களுடைய திறமைகளைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும், வாக்குறுதியும் தர வேண்டாம். பிரபலங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.

முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பிப் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடையும். எதிர்பாராத வகையில் பணம் வந்து சமாளிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். அனுபவபூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

01.09.2020 முதல் 10.05.2021 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால், திடீர் பணவரவு உண்டு. புதிய யோசனைகள் மனத்தில் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் பலன் அடை வீர்கள். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் அழகு, அறிவுக் கூடும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புது டிசைனில் ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுப்படுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் பலிதமாகும்.

வங்கிக் கடன் உதவி கிடைக்கும். புது வேலை கிடைக்கும். சிலர், சொந்தமாகப் புதுத்தொழில் தொடங்குவீர்கள்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் தனாதிபதியும் லாபாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வருமானம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும்.

புதுச் சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் செலவுகள் அதிகமாகும். ஷேர் மூலமாகப் பணம் வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

வியாபாரத்தில் சூட்சுமங்களைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். நீங்கள் விரும்பியது போல் கடையை விரிவுப்படுத்த வங்கி கடன் உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களைக் கவர விளம்பர யுக்திகளைக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைக் காலதாமதமின்றிச் செலுத்திவிடுவது நல்லது; தாமதம் காட்டினால் வீண் பிரச்னைகள் எழக்கூடும்.

பங்குதாரர்களை அனுசரித்துப் போங்கள்.உத்தியோக ஸ்தானத்தில் கேது அமர்வதால் விரும்பத் தகாத இடமாற்றங்கள், சின்னச் சின்ன அவமானங்கள், வேலையிழப்புகள் வந்து போகும். அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் நீடிப்போமோ, மாட்டோமோ என்ற சந்தேகம் வீண் பயம் எழுந்து மனத்தை வாட்டும். தெய்வ வழிபாடு துணை இருக்கும். சிலர் உங்களை அவதூறு வழக்குகளில் சிக்க வைப்பார்கள்.

மொத்தத்தில் இந்த ராகு – கேது மாற்றம், உங்களின் சேமிப்புகளைக் கரைப்பதுடன் அலைச்சலைத் தந்தாலும், புது ஆதாயங்களைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருவாரூர் – நாகை மார்க்கத்தில் உள்ள கீழ்வேளூரில் இருந்து சுமார் 3 கி.மீ, தொலைவில் உள்ளது திருக்கண்ணங் குடி எனும் ஊர். அங்கு சுயம்பு லிங்கமாக அருளும் ஸ்ரீகாளத்தீஸ் வரரை வணங்கி வாருங்கள். ஏழை தொழிலாளிக்கு உதவுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

%d bloggers like this: