உதயநிதிக்கு செக்… சீனியர்களை குஷிப்படுத்த மு.க. ஸ்டாலின் முடிவு..? சென்னையிலிருந்து தொடங்குது அதிரடி.!

தேர்தல் நெருங்கிவரும் வேளையில் சென்னையில் சீனியர்களை அரவணைத்துச் செல்லும்வகையில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரித்து பதவி கொடுப்பது தொடர்பாக திமுகவில் ஆலோசனைகள் பரபரப்படைந்துள்ளன.

சென்னை பெரும்பாலான காலகட்டங்களில் திமுகவின் கோட்டையாகவே இருந்திருக்கிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்போடு திமுக உள்ளது. ஆனால், மாவட்டச் செயலாளார் பதவி கிடைக்காத அதிருப்தியில் திமுகவிலிருந்து விலகிய கு.க. செல்வம், பாஜக பக்கம் சாய்ந்தது திமுகவுக்குள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த தவறவில்லை. உதயநிதியின் தலையீட்டால் இளைஞரணியைச் சேர்ந்த சிற்றரசுவை மேற்கு மாவட்ட செயலாளராக மு.க. ஸ்டாலின் நியமித்ததில் சீனியர்களுக்கே அதிருப்தி.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் எந்த ஒரு பிரச்னையாலும் திமுகவின் வெற்றிக்குப் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று திமுக தலைமை உஷாராக உள்ளது. அதன் அடிப்படையில்தான் நிர்வாகிகள் நியமன விவகாரம் உள்பட கட்சிப் பணிகளில் உதயநிதிக்கு வலதுகரமாக செயல்படும் மகேஷ் பொய்யாமொழியை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆஃப் செய்து வைத்திருப்பதாக திமுகவில் தகவல்கள் கசிகின்றன. அதேவேளையில் கு.க. செல்வம் போல சீனியர்களுக்கு மனக்கசப்பு ஏற்படாதவண்ணம் சென்னையில் திமுக மாவட்ட எல்லைகளை மேலும் அதிகரித்து பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் திமுகவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றன.
சென்னையில் தற்போது அமைப்பு ரீதியாக 4 மாவட்ட எல்லைகள் உள்ளன. மாவட்ட செயலாளர்களாக சீனியர்களான மா.சுப்பிரமணியம், சுதர்சனம், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உள்ளனர். இவர்கள் வரிசையில்தான் உதயநிதியின் சிபாரிசின் பேரில் சிற்றரசுவும் நியமிக்கப்பட்டார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களின் கீழும் 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. தற்போது இந்த மாவட்டங்களை 7 மாவட்ட பிரிவுகளாகப் பிரிப்பது தொடர்பாகத்தான் திமுகவில் ஆலோசிக்கப்படுகிறது. இதன்மூலம் புதிதாக 3 சீனியர்களுக்கு மாவட்ட செயலாளர் அல்லது பொறுப்பாளர் பதவி வழங்க முடியும் என்பது திமுக தலைமையின் கணக்கு.
உதாரணத்துக்கு திருச்சி மாவட்டம் அமைப்பு ரீதியாக 3 மாவட்டங்களாக தற்போது உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. இதேபோல கோவை மாவட்டம் அமைப்பு ரீதியாக 5 மாவட்டங்களாக உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 சட்டப்பேரவைத் தொகுதிகள் மட்டுமே உள்ளன. சென்னையையும் இதுபோல பிரிப்பதன்மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் 2 சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெறும்படி செய்யலாம். அதன்மூலம் சீனியர்களுக்கு அந்தப் பதவிகளைத் தரலாம் என்றும் கட்சிக்குள் ஆலோசனைகள் பரபரப்பாக நடந்துவருகின்றன.
இதுபோன்ற மறுசீரமைப்புகளை செயல்படுத்துவது குறித்து திமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியிலும் விவாதிகப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் சொல்கிறார்கள் அறிவாலாயத்தை எப்போதும் சுற்றிவரும் உடன்பிறப்புகள்.

%d bloggers like this: