முதல்வரை ஆர்.கே.நகருக்கு ஓடவைத்துவிட்டீரே?” என்று சூடாக மிளகாய் பஜ்ஜியுடன் கேள்வியையும் நீட்டினோம். அர்த்தம் புரிந்தவராகப் புன்னகைத்த கழுகார், “ஆர்.கே.நகரிலுள்ள அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததைத்தானே குறிப்பிடுகிறீர்” என்று பஜ்ஜியைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
“மதுசூதனனுக்கு உடல்நிலை சரியில்லை; புதிய அவைத்தலைவர் பதவிக்கு ரேஸ் நடப்பதாகக் கடந்த இதழில் கூறியிருந்தேன். அதன் விளைவாகத்தான் ஆகஸ்ட் 26-ம் தேதி மதுசூதனனைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி. சில வாரங்களுக்கு முன்னர் வாக்கிங் சென்றபோது மதுசூதனன் கீழே விழுந்து லேசாகக் காயம் அடைந்தாராம்.
தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டபோது, ‘மதுசூதனன் தலைமையிலான அணிக்குத்தான் சின்னம்’ என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அப்போது அணிகள் இணைந்திருந்தாலும், ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன் இருந்தார். கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், சின்னத்தை வைத்திருக்கும் மதுசூதனனும் தன் பிடிக்குள் இருக்க வேண்டும் என்று எடப்பாடி கருதுகிறாராம். இப்போதைக்குப் புதிய அவைத்தலைவர் நியமனத்தை ஓரங்கட்டிவிட்டு, மதுசூதனனைக் கையிலெடுக்க எடப்பாடி தீர்மானித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.”
“பன்னீர் என்ன செய்கிறார்?”
“ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடரும் முடிவில் இருக்கிறார். ‘எனக்கு முதல்வர் வேட்பாளர் பதவி மீதெல்லாம் பெரிய விருப்பம் இல்லை. வரும் தேர்தலில் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தினால் எப்படியிருக்கும்?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதேவேளையில் தினகரன் தரப்பு, பன்னீரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்கிற பேச்சும் கட்சிக்குள் ஓடுகிறது.
இதை மறுக்கும் பன்னீரின் முகாம், ‘இரட்டைத் தலைமையில்தானே இடைத்தேர்தல்களையும் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்தோம். இடையில் தினகரன் எதற்கு? முதலில் தேர்தலைச் சந்தித்துவிட்டு, பிறகு முதல்வர் யாரென முடிவெடுக்கலாம்’ என்கிறது. சமீபத்தில் பன்னீரைச் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனம்விட்டுப் பேசியிருப்பது, ‘முக்குலத்தோர் ஒன்று கூடுகிறார்களோ?’ என்கிற அச்சத்தை கவுண்டர் சமூகத் தரப்பில் விதைத்துள்ளது.”