நோமோபோபியா’ குறைபாடு உள்ள இளம் வயதினருக்கு தூக்கம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும் என்று ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதினர் ஸ்மார்ட்போன் உபயோகிக்க முடியாத நேரத்தில் ஏற்படும் பயம் அல்லது பதற்றமே நோமோபோபியா’ எனப்படுகிறது. இது கல்லூரி பருவத்தினரிடையே அதிகம் இருப்பதாகவும், இது
ஒருவரது தூக்கத்தை வெகுவாக பாதிக்கிறது என்றும் அமெரிக்கப் பலக்லைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போனுடன் தொடர்பில்லாத சமயத்தில் ஏற்படும் பதற்றம் அல்லது பயம் மிகவும் பொதுவானது. ஆனால், சமீபமாக கல்லூரி மாணவர்களிடையே சுமார் 89 சதவிகிதம் மிதமான அல்லது கடுமையான நோமோபோபியா இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வில், சராசரியாக 20 வயதுடைய 327 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நேரம், தூங்கும் நேரம், ஸ்மார்ட்போன் இல்லையெனில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதன் முடிவில், தூங்குவதற்கு முன்னும் பின்னும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைத்தால் மட்டுமே இந்த குறைபாட்டை போக்க முடியும் என்றும் குறிப்பாக படுத்தவுடன் ஸ்மார்ட்போனை எடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
லிட்டில் ராக் ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டேவிட் மாஸ்டின், ப்ரூஸ் மூர் மற்றும் இளங்கலை மாணவர்கள் அடங்கிய ஆய்வுக்குழு இந்த ஆய்வினை மேற்கொண்டு முடிவுகளை ‘ஸ்லீப்’ என்ற ஆன்லைன் பத்திரிகையில் வெளியிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பட்டால் இளைஞர்களைத் தாக்கும் ‘நோமோபோபியா’