வார்த்தைகள் சக்தி வாய்ந்தவை. அற்புதமான உறவை உருவாக்கும் அல்லது சிதைக்கும் தன்மை வார்த்தைகளுக்கு உண்டு. இதனால் மனைவியிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பேச வேண்டும். ஒருவருடைய உணர்வுகளை மற்றவர் ஒருபோதும் தவறாக மதிப்பிடக்கூடாது. மனைவியின் உணர்வுகளை கணவர் கேலி, கிண்டலாக பாவித்துவிடக்கூடாது. விளையாட்டுக்காக கூட
உணர்வுகள் விஷயத்தில் விளையாடக்கூடாது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலோ, நல்ல விஷயங்கள் நடக்க இருந்தாலோ மனைவியிடம் அதுபற்றி விளக்கமாக பேச வேண்டும். மூன்றாம் நபரிடம் பேசுவது போல் மேலோட்டமாக பேசக்கூடாது. இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டால் சில மணிநேரங்கள் விலகி இருப்பது அவசியம்.
அப்போது மனதை அமைதிப்படுத்தி நிதானமாக யோசித்து பார்ப்பதுதான் பிரச்சினையை குறைக்கும். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மன உளைச்சலில் இருக்கும்போது மனைவி ஆறுதலாக பேச வரும்போது எரிச்சல் அடைந்து வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. கணவன்-மனைவி இடையேயான உரையாடலில் எந்த ஒரு சூழ்நிலையிலும் விவாகரத்து என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. மற்றவர்களுடன் மனைவியை ஒப்பிட்டு பேசுவதை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக துணையின் செயல்பாடுகளில் இருக்கும் குறைகளை வெளிப்படையாக விமர்சனம் செய்வது தவறில்லை. நண்பர்கள், உறவினர்களிடம் குடும்ப விஷயங்களை விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. தம்பதியர் தங்களுக்குள் சாதாரணமாக கருதும் விஷயங்கள் மூன்றாம் நபர்கள் மூலம்தான் பிரச்சினையாக உருவெடுக்கின்றன.