ஸ்டாலின் மட்டும் முதல்வர் ஆகிட கூடாது”.. அதிமுக கூட்டணியின் தீவிர ஸ்கெட்ச்.. வியூகங்கள் வெல்லுமா?

திமுகவுக்கு எதிராக ஒன்று திரளுகிறதாம் அதிமுக கூட்டணி

திமுகவுக்கு எதிராக ஒன்று திரளுகிறதாம் அதிமுக கூட்டணி

சென்னை: “திமுக மட்டும் ஜெயித்துவிட கூடாது.. ஸ்டாலின் மட்டும் முதல்வர் ஆகிவிட கூடாது”.. இந்த ஒன்றை மட்டுமே மனசில் வைத்து காய் நகர்த்தி வருகிறது அதிமுக கூட்டணி! அதற்கான வியூகங்களும் ஜரூராக நடக்க ஆரம்பித்துள்ளன.

இந்த 3 வருட காலமாகவே எடப்பாடி அரசு திறன்படவே செய்து வருகிறது.. கொரோனா சமயத்தில் மட்டும் கொஞ்சம் அதிருப்தியை சம்பாதித்துவிட்டது.

ஏடாகூட அறிவிப்புகள், அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுக்கள், தொற்று குறித்த தவறான புள்ளிவிவரங்கள், பாதிப்பு, பலி எண்ணிக்கை உயர்வு, இப்படி பல காரணங்களினால் பொதுமக்கள் எடப்பாடி அரசு மீது அதிருப்தி அடைந்தனர்..

கேள்விகள்

இதற்கு நடுவில் திமுக தலைவர், எடப்பாடி அரசை தினமும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தார்.. அறிக்கை மேல் அறிக்கை விடுத்தார்.. சிறப்பாக செயல்படவில்லை என்றால், திமுக செயல்பட வைக்கும் என்ற ஒரு காரசார வார்த்தையை சொன்னார்.. ஒருசில கேள்விகளுக்கு பதில் சொல்லிய அரசு, ஸ்டாலினின் பல கேள்விகளுக்கு, பதில் சொல்ல முடியாமல் போனது என்னவோ உண்மையே. தற்போது முதல்வர் வெளியிட்டு வரும் அதிரடி அறிவிப்புகள்கூட திமுக தந்த அழுத்தம்தான் என்பதையும் முழுசுமாக மறுக்க முடியாது!

பாஜக வளர்ச்சி

இது எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் நாளுக்கு நாளான வளர்ச்சியும், பாஜக அரசு முதல், அதிமுக அரசு வரை துணிச்சலுடன் கேள்வி கேட்கும் தைரியமும் எடப்பாடி தரப்புக்கு எரிச்சலையே தந்து வருகிறது.. எனவே, வரும் தேர்தலில் திமுகவை டம்மியாக்க அதிமுகவும், திமுகவை டேமேஜ் செய்ய பாஜகவும் தயாராகிவிட்டன… ஆனால், இதனை தனியாக நின்று செய்ய போகிறதா? அல்லது கூட்டணி வைத்து செய்ய போகிறதா என்பதுதான் கேள்வியே!

பாமக

பாமகவை பொறுத்தவரை நிச்சயம் இந்த முறையும் திமுக பக்கம் சாய வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.. அதேபோல தமிழக நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த அறிவிப்பு வந்தாலும், அதற்கு முதல் ஆளாக கண்டனம் தெரிவிப்பவர் டாக்டர் ராமதாஸ்தான்.. இருந்தாலும், பாஜகவுடன் காரசார மோதல் பாமகவுக்கு இருந்தது இல்லை.. அன்புமணிக்கு பதவி கொடுத்த, அந்த நன்றியும் பாமகவுக்கு இருக்கவே செய்கிறது. எனவே பாஜக – பாமக என்பதில் பிரச்சனை இல்லை என்கிறார்கள்.

தேர்தல்

தேமுதிகவை பொறுத்தவரை, தனித்து போட்டி என்ற பிரேமலதா சொன்னாலும், நிச்சயம் அதற்கு ஒரு சதவீதம்கூட வாய்ப்பு இல்லை.. இது தேமுதிகவுக்கே நன்றாக தெரியும்.. மேலும் அதிமுகவுடனான சீட் பேரத்துக்காகதான் என்பதும் அனைவருக்கும் தெரியும்.. இதனிடையே நேற்று சுதீஷ் பதிவிட்டு, நீக்கம் செய்த அந்த ஃபேஸ்புக் பதிவானது, நிச்சயம் திமுகவுடன் கூட்டணி இல்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டது. அதனால், அதிமுகவுடன்தான் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கூட்டணி

வாசனை பொறுத்தவரை எல்லா கட்சியிலும் அவருக்கு நல்ல பேர் எப்போதுமே உண்டு.. அந்த வகையில், அதிமுக, பாஜக எல்லாமே அவருக்கு ஒன்றுதான்.. இப்போது பாஜக தலைமைக்கு வாசனை ரொம்பவும் பிடித்துவிட்டதால், எப்படியும் அவரை நழுவ விட்டுவிடாது, சரியாக பயன்படுத்தி கொள்ளவே செய்யும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

அதிருப்தி

பாஜகவை பொறுத்தவரை, ஒரே கசமுசாதான்.. அதிமுகவுடன் சரியான இணக்கமான போக்கு இல்லை.. முருகனின் அதிருப்தி பேட்டிகள், 60 சீட்டுக்கு செக் வைப்பது, வழக்கு போடுவோம் என்று சொல்வது இதையெல்லாம் பார்த்தால், அதிமுக வேறு வழியில்லாமல் பாஜகவை தன்னுடன் சேர்த்து கொள்ளுமோ என்று நினைக்க தோன்றுகிறது.

முதல்வர் பதவி

ஆக மொத்தம், அதிமுக + பாஜக + தேமுதிக + பாமக + வாசன் = இப்படி எல்லாருமே ஒரே அணியில் ஒன்றுதிரளும் வாய்ப்பு உள்ளது… இவர்களின் தனிப்பட்ட அல்லது ஒட்டுமொத்த நோக்கமும் திமுகவை தோற்கடிக்க வேண்டும், ஸ்டாலினை எக்காரணம் கொண்டும் முதல்வராக வர விடக்கூடாது என்பதுதானாம்.. ஒருவேளை இதெல்லாம் உண்மையாகும் பட்சத்தில் அதை திமுக எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான் அளவுகடந்த எதிர்பார்ப்பாக உள்ளது!

%d bloggers like this: