விடுதலைக்கான விலையும்… விவகாரப் பின்னணியும்!’ – சதுரங்க ஆட்டத்தில் சசிகலா.

சசிகலாவின் வருகை எப்போது?’ – இந்த ஒற்றைக் கேள்விதான் அ.தி.மு.க வட்டாரங்களில் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. `இந்த மாத இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்புகள் இருக்கின்றன’ என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன் சொல்லியிருப்பதுதான் இந்த விவகாரம் மீண்டும் புயலாகக் கிளம்பக் காரணமாகிவிட்டது.

14-2-2017-அன்றுதான் சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சென்றார். அவர் சிறைக்குள் சென்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த சில மாதங்களாகவே சசிகலாவின் விவகாரம் அவ்வப்போது கிளம்பி அடங்கிவிடும். கடந்த ஜூலை மாத இறுதியில் பா.ஜ.க-வைச்சேர்ந்த நிர்வாகி ஆசீர்வாதம் ஆச்சாரி “ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார்” என்று போட்ட ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பா.ஜ.க முக்கியப் பிரமுகர் ஒருவர் கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில், அந்த ட்வீட்டை ஆசீர்வாதம் போட்டதாகக் கூறப்பட்டது.

இந்தநிலையில் இப்போது சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன், “செப்டம்பர் இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளது” என்று சொல்லியிருக்கிறார். சசிகலாவின் விடுதலையை எதிர்நோக்கி அ.தி.மு.க-விலும் சில மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் காத்திருக்கிறார்கள். அடுத்த ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக சசிகலா விடுதலையானால், அ.தி.மு.க-வில் நடக்கும் சில குழப்பங்களுக்கு விடை கிடைக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள்.

சசிகலா -சிறைக்கு முன்!

சசிகலா சிறைக்குச் சென்றபோது “தினகரனை அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளராக நியமித்துவிட்டுச் சென்றார். சசிகலாவின் தம்பி திவாகரன், டாக்டர் வெங்கடேஷ், ம.நடராசன் உள்ளிட்டவர்கள் பவர் சென்டர்களாக இருந்தார்கள். ஆட்சியை எடப்பாடி பார்த்துக்கொண்டாலும், கட்சியை வழிநடத்தும் பணியை தினகரன் பார்த்துவந்தார். அதே நேரம் சசிகலாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் எதிராக ஓ.பன்னீர்செல்வம் பதினோரு சட்டமன்ற உறுப்பினர்களுடன் போர்க்கொடி தூக்கியிருந்தார். “சின்னம்மா எங்களுக்கு அம்மா” என்று வரிக்கு வரி வசனம் பேசிக்கொண்டிருந்தார்கள் அமைச்சர்கள்.

கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த சசிகலா சிறையிலிருந்தார். மற்றொருபுறம் துணைப் பொதுச்செயலாளராக இருந்த தினகரனும் திகார் சிறைக்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அடுத்த சில மாதங்களிலேயே காட்சிகள் மாறின. பழனிசாமியின் பணிவு கொஞ்சம் நிமிர ஆரம்பித்தது. சசிகலா குடும்பத்துக்கு எதிராகக் கழகத்தில் வெடித்த கலகக்குரலுக்கு எடப்பாடியும் செவிசாய்த்தார். பிரிந்திருந்த பன்னீரும் பழனிசாமியும் பரஸ்பரம் இணைந்தார்கள்.

சி்றையிலிருந்து தினகரன் வெளியே வருவதற்கு முன்பாகவே அ.தி.மு.க-வில் பல நகர்வுகள் சத்தமில்லாமல் நடந்தி்ருந்தன. அதைப் புரிந்துகொண்ட தினகரன் தனியாகக் கட்சியைத் தொடங்கினார். தினகரன் உள்ளிட்ட சசிகலாவின் உறவுகள் அ.தி.மு.க-விலிருந்த நீக்கப்பட்டார்கள். சசிகலாவை மட்டும் அப்போது முதல் இப்போதுவரை அ.தி,மு.க-விலிருந்து நீக்கவில்லை. சசிகலா அ.தி.மு.க-விலிருந்து இதுவரை நீக்கப்படாமல் இருப்பது குறித்து அந்தக் கட்சியினர் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்துவிட்டனர். ஆனால், `நீக்கிவிடுகிறோம்’ என்று எந்த நிர்வாகியும் சொல்ல மறுக்கிறார்கள்.

`சசிகலா’ என்கிற பெயரை அழுத்தமாகச் சொல்லவே அச்சப்படும் அமைச்சர்கள் இப்போதும் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள். அந்த அச்சம்தான் சசிகலாவின் பலம். சிறையிலிருந்து வந்தால் மீண்டும் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்று சசிகலா உறுதியாக நம்புவதன் அடிப்படை. ஆனால், அவர் சிறை செல்லும்போது அவருக்குப் பக்கபலமாக இருந்த உறவுகளுக்குள் இப்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது சசிகலாவுக்கு பலவீனமே. தினகரனுக்கும் திவாகரனுக்கும் ஏற்பட்ட மோதல் இருவருமே தனித் தனியாகக் கட்சி தொடங்கும் நிலைக்குச் சென்றது. இளவரசி குடும்பத்துக்கும் தினகரனுக்கும் ஒத்துப்போகவில்லை. `அரசியல் சாணக்கியனாக’ விளங்கிய சசிகலாவின் கணவர் நடராஜனின் மரணம், சசிகலாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றே சொல்லலாம். இத்தனை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் சசிகலாவின் விடுதலைக்கான காலமும் நெருங்கிவருகிறது.

சசிகலாவின் விடுதலை!

சசிகலாவின் விடுதலை குறித்த பேச்சு இப்போது எழவில்லை. கடந்த 2019-ம் ஆண்டே `அவர் வெளியே வந்துவிடுவார்’ என்று பேசப்பட்டது. அதற்குக் காரணமும் இல்லாமல் இல்லை. நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “தண்டனைக் கைதியாக இருக்கும் சசிகலாவுக்கு சிறைவிதிப்படி முழுச் சலுகைகளையும் கர்நாடக சிறைத்துறை வழங்கியிருந்தால், கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியிலேயே சசிகலா விடுதலையாகியிருக்கலாம்” என்கிறார் அவரது வழக்கறிஞர் ராஜா செந்துார்பாண்டியன். ஆனால், அந்த விடுதலை தள்ளிப்போனது. 2020, பிப்ரவரியிலும் அதேபோல் விடுதலை குறித்த பேச்சு எழுந்தது. இப்போது செப்டம்பர் மாதம் வாய்ப்புள்ளது என்று சொல்லியிருக்கிறார். இதற்கு உறுதியான சில காரணங்களும் உள்ளன.

சசிகலாவின் சிறைத்தண்டனைக் காலம் மொத்தம் 48 மாதங்கள். ஒவ்வொரு தண்டனைக் கைதிக்கும் மறுக்கப்படாத ஒரு சலுகை என்றால் அது நன்னடத்தைச் சலுகை. ஒரு மாதத்துக்கு மூன்று நாள்கள் நன்னடத்தைக்காக, தண்டனைக் காலத்தில் குறைத்துக்கொள்ளப்படும். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை சசிகலா சிறையிலிருந்த காலங்கள் 43 மாதங்கள். இந்த நாற்பத்து மூன்று மாதங்களுக்கு நன்னடத்தை அடிப்படையில் மாதத்துக்கு மூன்று நாள்கள் என்று கணக்கிட்டால் 129 நாள்கள் அவரது தண்டனை காலத்தில் கழியும். அதேபோல் சசிகலா, இதற்கு முன்பு சிறையிலிருந்த நாள்களும் தண்டனை நாள்களில் கழியும். இந்த அடிப்படையில்தான் `செப்டம்பர் மாத இறுதியில் சசிகலா விடுதலையாக வாய்ப்புண்டு’ என்று ராஜா செந்துார்பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.

வழக்குகள் சிக்கலாக்குமா?

`சசிகலாவின் விடுதலை தள்ளிப்போகும்’ என்கிற பேச்சும் பலமாக அடிபடுகிறது. பெங்களூர் சிறையில் அவர் சிறைவிதிகளை மீறியதாகத் தனியாக வழக்கு உள்ளது என்பதையும் அதற்குக் காரணமாகச் சொல்கிறார்கள். ஆனால், `அதற்கும் சசிகலாவின் தண்டனைக்கும் சம்பந்தம் இல்லை’ என்கிறார்கள் சட்ட நிபுணர்கள். “சிறையில் சொகுசு வசதிக்காக டி.எஸ்.பி-க்கு சசிகலா லஞ்சம் கொடுத்தார் என்கிற குற்றச்சாட்டை கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா அரசுக்கு அளித்திருந்தார். இது குறித்து உண்மையைக் கண்டறிய அரசு சார்பில் குழுவும் அமைக்கப்பட்டது. இந்த அறிக்கையும் அரசிடம் உள்ளது. இதைவைத்து சசிகலாவின் நன்னடத்தைக்குத் தடைபோடலாம்’’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். ஆனால், இந்த வழக்கில் இதுவரை எந்த விசாரணையும் முறைப்படி நடக்கவில்லை. வழக்கின் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதியப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் இதுகுறித்து விசாரணை நடந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் இந்த வழக்கு சசிகலாவுக்கு சிக்கலாகுமா என்கிற விவாதம் வரும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கர்நாடக சிறைத்துறை, மாநில அரசுக்கு கைதிகளின் நன்னடத்தை குறித்த விவரங்களை அனுப்பும். சில மாதங்களுக்கு முன்னர் சிறைத்துறை அரசுக்கு அளித்த பட்டியலில் சசிகலாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதனால், `நன்னடத்தைச் சான்றிதழ் கொடுக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் அதை ரத்து செய்யும் அதிகாரம் இருக்காது’ என்கிற வாதமும் வைக்கப்படுகிறது. `செப்டம்பர் இறுதியில் சசிகலா விடுதலை செய்யப்படாவிட்டால், அக்டோபர் காந்தி ஜெயந்தியை ஒட்டி நல்லெண்ண அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்படும்போது விடுதலையாவார்’ என்கிறார்கள் சசிகலா தரப்பினர்.

விடுதலைக்குப் பிறகு?

சசிகலா, எப்போது விடுதலையானாலும் அது அ.தி.மு.க-வுக்குள் புயலை ஏற்படுத்தும் என்பதே யதார்த்தம். தினகரனை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பவர்கள்கூட சசிகலா வந்தால் பின்னால் செல்லத் தயங்க மாட்டார்கள். அதைத் தடுக்கும் வேலையில்தான் எடப்பாடி இப்போது இறங்கியுள்ளார். ஆனால், சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் வரை சென்ற பன்னீர் இப்போது சசிகலா பின்னால் செல்லவும் தயாராகிவிட்டார். மேலும், ஏற்கெனவே சசிகலாவின் தயவால் அமைச்சர்களாக அரியணை ஏறியவர்கள், மீண்டும் சசிகலாவின் மீதான பழைய பாசத்தைக் காட்டிவிடும் வாய்ப்புள்ளது.

இன்றைக்கு எடப்பாடிமீது அதிருப்தியிலுள்ள அமைச்சர்கள் சிலர் பன்னீருடன் தனிப்பட்ட முறையில் பேசிவருகிறார்கள். அவர்கள் எடப்பாடிக்கு எதிராக அமைத்துவரும் வியூகத்துக்கு சசிகலா விடுதலை, உரமாக அமைந்துவிடும். எனவே, என்ன விலை கொடுத்தாவது சசிகலாவின் விடுதலையைத் தள்ளிப்போட வேண்டிய நெருக்கடி எடப்பாடிக்கு உள்ளது. அப்போதுதான் தனது தலைமையில் அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்க முடியும் என்று கணக்கு போடுகிறார் எடப்பாடி. டிசம்பர் மாதம் வரை சசிகலாவின் விடுதலை தள்ளிப்போனால், அதற்கு முன்பாக பொதுக்குழுவைக் கூட்டி தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என எடப்பாடி போடும் கணக்குக்கு எடியூரப்பாவின் கர்நாடக அரசு ஒத்துழைக்குமா என்பதைப் பொறுத்தே அ.தி.மு.க-வின்அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கப்போகின்றன.

%d bloggers like this: