அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ்…? முதலமைச்சர் வேட்பாளர் இ.பி.எஸ்…? முடிவுக்கு வரும் மோதல்..!

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் விரைவில் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

பனிப்போர்

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்த விவகாரம்.

ஓ.பன்னீர்செல்வம் வருத்தம்

இந்த சூழலில் முதலமைச்சர் வேட்பாளர் மீண்டும் இ.பி.எஸ். தான் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டி ஓ.பன்னீர்செல்வத்திற்கு உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி மூத்த அமைச்சர்கள் குழு ஓ.பி.எஸ். வீட்டுக்கும், இ.பி.எஸ்.வீட்டுக்கும் சடுகுடு பாய்ந்து பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் ஒரு வழியாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மழை விட்டும் தூவானம்

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாக கனல் இருந்துகொண்டே இருந்தது. இந்நிலையில் சசிகலா விடுதலை விவகாரம் அவர்கள் இருவரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. அந்த வகையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் வசமும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் முன்னிறுத்தப்படுவது பற்றி கடந்த சில நாட்களாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனையை செயல்படுத்த வேண்டுமானால் பொதுக்குழுவை நடத்தியாக வேண்டும்.

எப்படி பொதுக்குழு?

அப்படி பொதுக்குழுவை நடத்த வேண்டும் என்றால் எப்படி நடத்துவது, என்னென்ன மாற்றங்களை கொண்டு வருவது சட்டதிட்ட விதிகளில் என்ன திருத்தம் செய்வது என்பது பற்றியெல்லாம் இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பாமக, தேமுதிகவின் நிலைப்பாடு பற்றியும் புதிய கட்சிகளை இணைப்பது பற்றியும் முக்கிய முடிவெடுக்கப்படுகிறது.

%d bloggers like this: