இந்த 10 விஷயங்கள்தான் குடும்ப உறவில் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்றால் நம்புவீர்களா?

கணவன், மனைவி இடையே பிரச்னைகள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். அப்படி பிரச்னைகள் ஏற்படுவது இயல்பானதும்கூட. என்றாலும், அந்தப் பிரச்னைகள் நிம்மதியையும், அவை நீடித்துத் தொடர்வதால் வாழ்க்கையையும் பாதிக்காமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை நீளவிடாமல் சுலபமாகத்

தீர்த்துக்கொள்ள, முத்தான 10 ஆலோசனைகளைக் கூறுகிறார் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மனநல மருத்துவர், பேராசிரியர் அருள்பிரகாஷ். நம்மைச் சுற்றிச்சுற்றி வந்து உறவைச் சிக்கலாக்கும் பொதுவான பிரச்னைகள் இவைதான். இவற்றை சரியாகக் கையாண்டாலே போதும். குடும்ப உறவில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

1. இணைக்கு மதிப்புக் கொடுக்காதது

எந்த உறவிலும் பரஸ்பர மரியாதை முக்கியம். குறிப்பாக, கணவன் சொல்லும் கருத்துகளுக்கு மனைவியும், மனைவி சொல்லும் ஆலோசனைகளுக்கு கணவனும் மதிப்புக் கொடுத்து, அவற்றைப் பரிசீலிக்க வேண்டும். அவற்றை ஏற்றுக்கொள்ள இயலாததற்கான காரணங்கள் இருந்தாலும்கூட, `நீ சொல்றதெல்லாம் சரிதான்… ஆனா…’ என்று அதை பக்குவமாக எடுத்துச் சொல்லவேண்டும். ஒருவர் பேச ஆரம்பிக்கும்போதே மற்றொருவர், `நீங்க சொல்றது எல்லாம் தப்பாதான் இருக்கும்’, `நீ சொல்றதை நான் என்ன கேட்குறது’ என்ற போட்டி மனப்பான்மையுடன் உரையாடலை அணுகக் கூடாது.

2. போதுமான நேரம் ஒதுக்காதது

என்னதான் கடுமையான அலுவல் பணி, வீட்டு வேலைகள் இருவருக்கும் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தை இருவரும் சேர்ந்து செலவழிக்க, பேச, ஆலோசிக்க ஒதுக்க வேண்டும். ஒரு நாளில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது இந்த க்வாலிட்டி டைம் முக்கியம். இருவருக்கும் அன்றைய பொழுது எப்படிக் கழிந்தது என்பதில் ஆரம்பித்து, பரஸ்பரம் பகிர்ந்துகொள்ளலாம்.

3. ரகசியம் ரொம்ப தப்புங்க!

கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். இருவருக்குள்ளும் ரகசியம் என எதுவும் இருக்கக் கூடாது. இது ஆரோக்கியமான உறவுக்கு வழிவகுக்கும்.

4. காதுகளுக்குப் பொறுமை வேண்டும் பாஸ்!

இணை ஒரு கருத்தைச் சொல்லும்போது, அவர் முழுவதுமாகப் பேசி முடிக்கும்வரை பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும். `அதெல்லாம் எனக்குத் தெரியும்’ என்று பாதியிலேயே பேச்சை முறிக்கக் கூடாது. அவர் தன் உணர்வுகளை வெளிப்படுத்த அவகாசம் கொடுக்க வேண்டும்.

5. மூன்றாவது நபரை அனுமதிப்பது!

கணவன், மனைவிக்கு இடையில் ஒரு பிரச்னை என்றால், நேருக்கு நேர் உங்களுக்குள்ளாகவே பேசி முடிக்க வேண்டும். கணவன் குடும்பத்தினரோ, மனைவி குடும்பத்தினரோ யாராக இருந்தாலும் மூன்றாவது நபரை மத்தியஸ்தம் பேச ஆரம்பம் முதலே அனுமதிக்கக் கூடாது. அது பிரச்னையை சரிசெய்வதைவிட, மேலும் மேலும் அதிகரிக்கவே வழிவகுக்கும்.

6. அவசரம்.. அவசரம்..!

ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசும்போது தீர்வு கிடைக்கவில்லை எனில், `இது சரிப்பட்டு வராது’, `இனி ஒட்டாது’ என்று முற்றுப்புள்ளி வைக்கக் கூடாது. ஒரு `மார்னிங் காபி’ வேளையில், மாலை நடைப்பயிற்சியின்போது என்று சுமுகமான சூழலில், மீண்டும் பக்குவமாகப் அந்தப் பேச்சை ஆரம்பிக்கலாம். ஒரு பிரச்னைக்கான தீர்வை எட்டுவதில் கால அவகாசம் எடுத்துக்கொள்ள இரண்டு பேரும் தயாராக இருக்க வேண்டும்.

7. அறிவுபூர்வமாக முடிவெடுக்காதது!

கணவன், மனைவி பிரச்னையில் உணர்வுபூர்வமாக முடிவுகளை எடுப்பதைவிட அறிவுபூர்வமாக முடிவுகளை எடுக்க வேண்டும். கோபத்தில் எடுக்கும் முடிவு எப்போதும் சரியாக அமைவதில்லை. கோபமோ, கண்ணீரோ… உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பிராக்டிக்கலாக எது சரி என்று யோசித்து எடுக்கும் முடிவுதான் நல்லதாக அமையும்.

8. தீர்வுகளைப் பரிசீலிக்காதது!

ஒரு வாக்குவாதம் என்று வரும் பட்சத்தில், அந்தப் பிரச்னையில் கணவன், மனைவி இருவருக்கும் தோன்றும் தீர்வுகளை முதலில் பட்டியலிட வேண்டும். பின்னர், அவற்றின் நன்மை, தீமைகளை இருவரும் ஆலோசிக்க வேண்டும். லிஸ்ட்டில் உள்ள தீர்வுகளில் எந்த முடிவை எடுப்பதால் நன்மை அதிகமாக இருக்குமோ, அந்த முடிவை இரண்டு பேருமே சேர்ந்து ஒருமித்த முடிவாக எடுக்க வேண்டும்.

9. முடிந்துபோன பிரச்னைகள் எதற்கு?

கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒருமித்த முடிவை எடுத்த பின்னர், மீண்டும் பழைய பிரச்னைகளைக் கிளறக் கூடாது. அப்படி உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசி மீண்டும் பிரச்னைகளுக்குள் சென்றுவிடக் கூடாது என்பதில் இருவரும் கவனமாக இருக்க வேண்டும்.

10. நிபந்தனையற்ற அன்பு!

கணவன், மனைவி கண்டிஷன் அடிப்படையில் அன்பை பரிமாறக் கூடாது. `நீ அதைச் செய்தால்தான் நான் இதைச் செய்வேன்’ என்ற ஒப்பந்தங்கள் இருக்கக் கூடாது. நிபந்தனைகள் இல்லாத அன்பையும் காதலையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் கணவனின் கோரிக்கை சற்று அதிகமாகவே இருந்தாலும், மனைவி விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். அதேபோல இன்னொரு சமயத்தில் மனைவி கேட்பது சற்று அதிகமாகத் தோன்றினாலும், கணவன் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து நிபந்தனையற்ற அன்பை செலுத்தினால், கணவன் மனைவி இடையே பிரச்னையே வராது.”

%d bloggers like this: