அணி தாவ தயாராகும் கட்சிகள் : சூடுபிடிக்கிறது தேர்தல் அரசியல்

அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள், எந்த பக்கம் தாவுவது என தெரியாமல், மதில் மேல் பூனைகளாக உள்ளன. இருக்கும் இடத்தில் போதிய இடங்கள் கிடைக்காவிட்டால், அணி தாவ, அக்கட்சிகள் நேரம் பார்த்து காத்திருக்கின்றன. இதை நன்றாக அறிந்துள்ள, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தலைமைகள், அதற்கேற்பகாய் நகர்த்த துவங்கி உள்ளதால், தேர்தல் அரசியல் சூடுபிடிக்க துவங்கி

உள்ளது.தமிழகத்தை பொறுத்த வரை, 2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., தலைமையில், இரு கூட்டணி அமைந்தது.அந்த கூட்டணி, தற்போது வரை தொடர்கிறது. அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,- – பா.ம.க.,- – தே.மு.தி.க.,- – த.மா.கா., மற்றும் புதிய நீதிக் கட்சி உள்ளன.தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ்,- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,- இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க.,- விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக் மற்றும் சில சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.இரு கூட்டணியிலும் உள்ள சில கட்சிகள், அதிருப்தி காரணமாக, தற்போதுள்ள கூட்டணியில் தொடரலாமா அல்லது கூட்டணி மாறலாமா என, ஆலோசிக்க துவங்கி உள்ளன.அதிருப்திஅ.தி.மு.க., கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா, லோக்சபா தேர்தலில் குறைவான தொகுதிகள்ஒதுக்கியதாகவும், வெற்றிக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் அதிருப்தியில் உள்ளது.
எனவே, அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள், ‘சட்டசபை தேர்த லில், பா.ஜ., தலைமையில் கூட்டணி’ என்று பேசத் துவங்கியுள்ளனர். அதோடு, ‘அடுத்த சட்டசபையில், பா.ஜ., – எம்.எல்.ஏ.,க்கள் அதிகளவில் அமருவர்’ என்றும் பேசி வருகின்றனர். இதிலிருந்து, அ.தி.மு.க., கூட்டணியில் தொடர்ந்தால், அதிக தொகுதிகளை பெற வேண்டும் என்பதில், அக்கட்சி முனைப்பு காட்டுவது தெரிகிறது. அதேநேரத்தில், ரஜினியின் வருகையையும், அக்கட்சி ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது.தானாக விலகுமா?இச்சூழலில், கூட்டணியில் இருந்து, பா.ஜ., தானாக விலகினால் நல்லது என்ற மன நிலையில், அ.தி.மு.க.,வும் இருக்கிறது.

சிறுபான்மையினர் ஓட்டுக்காக, பா.ஜ.,வை இழக்க, அக்கட்சி தயார் நிலையில் உள்ளது. பா.ஜ., விலகினால், தி.மு.க., கூட்டணியில் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை இழுக்க வாய்ப்பும், அக்கட்சிகள் வருவதற்கு வழியும் கிடைக்கும் என, ஆளும் கட்சி நினைக்கிறது.இதேபோன்ற மனநிலை, மற்றொரு கூட்டணி கட்சியான பா.ம.க.,வுக்கும் இருக்கிறது. ரஜினி கட்சி துவக்கினால், அவருடன் கூட்டணி வைப்பதற்கே, அக்கட்சி முன்னுரிமை அளிக்கும் என, தெரிகிறது.அதை தவிர்க்க, அதிக இடங்களை அக்கட்சிக்கு கொடுக்க வேண்டிய நெருக்கடி, ஆளும் அ.தி.மு.க.,வுக்கு ஏற்படும்.வாசல் திறப்புஅந்த நோக்கத்தில் தான், ‘பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் தான், அனைவருக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்டவை கிடைக்கும். பா.ம.க.,விற்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என, ராமதாஸ் பேசத் துவங்கி உள்ளார்.இதற்கிடையில், ஆளும் கூட்டணியில், பா.ம.க.,விற்கு தரும்முக்கியத்துவம், தங்களுக்கு தரப்படவில்லை என்ற அதிருப்தியில், தே.மு.தி.க., உள்ளது.

நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்த அதிருப்தி காரண மாக, கூட்டணிக்கான வாசலை திறந்து வைக்க அக்கட்சி விரும்புகிறது. இரு தரப்பிலும் பேரம் பேசுவது, அக்கட்சிக்கு புதிதல்ல என்பதால், மதில் மேல் நிற்கும் பூனைகளில், முதலிடத்தில் இருக்கிறது இக்கட்சி. அங்கேயும் அதே நிலைஅதே நிலை, தி.மு.க., கூட்டணியிலும் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு, அதிக, ‘சீட்’ கொடுத்ததால் தான், கடந்த முறை ஆட்சியை பிடிக்க முடியவில்லை.எனவே, இம்முறை குறைந்த சீட்டுகளையே ஒதுக்க வேண்டும் என்ற முடிவில், தி.மு.க., உள்ளது.

அதை ஏற்கும் மனநிலையில், காங்கிரஸ் இல்லை.தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ‘காங்கிரஸ் கட்சியின் பலம், தகுதி அடிப்படையில், தி.மு.க., ஒதுக்கீடு தரும்; கூட்டணியில், எந்த குழப்பமும் ஏற்படாது’ என, நம்பிக்கை தெரிவித்துள்ளார். வியூகம்லோக்சபா தேர்தலில், ம.தி.மு.க., வேட்பாளர்,தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டதால், தி.மு.க.,- – எம்.பி.,யாக உள்ளார்.இந்நிலையில், எம்.எல்.ஏ., வேட்பாளர்களும், தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டால், ம.தி.மு.க., இல்லாத நிலை ஏற்படும். அதனால், அக்கட்சியினரும், தி.மு.க., தன் முடிவை வெளிப்படையாக தெரிவிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து உள்ளனர்.இதற்கிடையில், தி.மு.க., கூட்டணியில் அதிருப்தியில் உள்ள கட்சிகளை இழுக்க, அ.தி.மு.க.,வும்; அ.தி.மு.க., கூட்டணியில் அதிருப்தியில் உள்ள கட்சிகளை இழுக்க, தி.மு.க.,வும் வியூகம் அமைத்து வருகின்றன. இரு கூட்டணிகளில் இருந்து வெளியேறும் கட்சிகளுடன் சேர, அ.ம.மு.க., உட்பட வேறு சில கட்சிகளும், வெளியில் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு கட்சியும் புதிய வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பதால், தமிழக தேர்தல் அரசியல் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.ரஜினி வந்தால் அணி மாற்றம் நிச்சயம்!அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள, தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க, நடிகர் ரஜினி, நவம்பர் மாதம், புதிய கட்சி துவக்க திட்டமிட்டுள்ளார். அவர், கட்சி துவக்கிய பின், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல், கூட்டணியிலும் அதிரடி மாற்றம் நிகழும் என்ற எதிர்பார்ப்பு, அனைத்து கட்சிகளிடமும் எழுந்துள்ளது.ரஜினி கட்சி துவக்கினால், அவரது கட்சியுடன், பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., – மக்கள் நீதி மையம் கூட்டணி அமைத்து போட்டியிடும் சூழல் உருவாகலாம்.ரஜினி விரும்பினால், அவரே முதல்வர் வேட்பாளர் அல்லது தமிழக பா.ஜ., துணைத் தலைவர் அண்ணாமலை, முதல்வர் வேட்பாளர் என்ற அடிப்படையில், மாற்று அணி உருவாக்க, பா.ஜ., மேலிடமும் காய் நகர்த்துகிறது. சமீபத்தில், பிரதமர் மோடியின், ௭௦வது பிறந்த நாளை ஒட்டி, ரஜினி வாழ்த்து தெரிவித்தார். ரஜினிக்கு, பிரதமர் மோடியும் நன்றி கூறினார்.விரைவில், பா.ஜ., தேசிய நிர்வாகத்தில் மாற்றம் செய்த பின், தமிழக பா.ஜ.,வுக்கு நியமிக்கப்படவுள்ள புதிய மேலிட பொறுப்பாளர்கள், மாற்று அணியை உருவாக்கும் பணியை துவக்க உள்ளனர்.

கடந்த, ௨௦௧௯ லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – தே.மு.தி.க., – த.மா.கா., ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில், பா.ம.க., – தே.மு.தி.க., ஆகிய இரு கட்சிகளும், வரும் தேர்தலுக்கான கூட்டணி தொடர்பாக, டிச., மாதத்தில், பொதுக்குழுவை கூட்டி முடிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளன. தி.மு.க., கூட்டணியில், 200 தொகுதிகளில், தி.மு.க.,வும், மீதமுள்ள, 34 தொகுதிகளில், அதன் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுவதற்கு ஆலோசிக்கப்பட்டு உள்ளது.ரஜினி கட்சி துவக்கினால், அவருடன் பா.ம.க., கூட்டணி அமைப்பதை தடுக்கும் வகையில், 27 தொகுதிகளை தருவது குறித்து, பா.ம.க., நிறுவனர் ராமதாசிடம், தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் பேச்சு நடத்தியதாக தெரிகிறது.ஆனால், பா.ம.க., தரப்பில், 42 தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தனியார், ‘டிவி’க்கு ராமதாஸ் அளித்த பேட்டியில், ‘விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன், எங்களுக்கு எந்த பகையும் இல்லை’ என, கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி.,யான விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிகுமார், ‘பா.ம.க., எங்களுக்கு எதிரி அல்ல; அவர்களின் அணுகுமுறையை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும்’ என்றார்.அதாவது, பா.ம.க.,வும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து செயல்பட, பெரிய தடை எதுவும் இல்லை என்பதை, இரு தரப்பினரும் சூசகமாக தெரிவித்துள்ளனர். ஆனால், எந்த கூட்டணியில் என்பதை, இரு தரப்பினரும் தெளிவுபடுத்தவில்லை.இவர்களுக்கு இடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், நாங்கள் இருக்க மாட்டோம்’ என, கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘௨௦௦ தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட்டால், விடுதலை சிறுத்தைகள் மட்டுமல்ல; அந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் சிக்கல் தான்’ என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார். திருமாவளவனின் கருத்தால், தி.மு.க., கூட்டணியில் கணிசமான தொகுதிகளில் போட்டியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சி விரும்புவது தெரிய வந்துள்ளது.

குறைந்த தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறவும் தயங்காது என்ற நிலையும், அக்கட்சி வட்டாரத்தில் காணப்படுகிறது.மொத்தத்தில், அ.தி.மு.க., – தி.மு.க., ஆகிய இரு கூட்டணியில் உள்ள கட்சிகளுக்குமே கடும் நெருக்கடி உருவாகி உள்ளது. எனவே, எந்த பக்கம் சாய்ந்தால் ஆதாயம் என, அக்கட்சிகள் ஆராயத் துவங்கி விட்டன. அதனடிப்படையில், அணி மாற ஆயத்தமாகி வருகின்றன

%d bloggers like this: