டீல்!’ஓ.பி.எஸ்., -இ.பி.எஸ்., இடையே…

அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் போட்டியில், முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது. கட்சி பொறுப்பை, ஓ.பி.எஸ்.,சும், ஆட்சிப் பொறுப்பை, இ.பி.எஸ்.,சும் பகிர்ந்து கொள்வது என, இரு தரப்புக்கும் இடையில், உடன்பாடு செய்யப்பட்டுள்ள

தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவாளர்கள்மத்தியில், இவ்விவகாரத்தில் நீடித்த மோதலுக்கு, இதன் வாயிலாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், சிறையில் இருந்து வெளியே வரும், சசிகலாவை சேர்ப்பதில்லை என்றும், அவரை சேர்க்க முயற்சிக்கும் அனுதாபிகளை, கட்சியில் இருந்து துடைத்தெறிவது என்றும், இரு தரப்பினருக்கு இடையில் நடந்த சமரச பேச்சில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும்கட்சியான அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை, விஸ்வரூபம் எடுத்துள்ளது.வழிகாட்டி குழுமுதல்வர் வேட்பாளர் யார் என்பதில், முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் ஓ.பி.எஸ்., இடையே, போட்டி ஏற்பட்டுள்ளது.இ.பி.எஸ்., ஆதரவாளர்கள், ‘தேர்தலுக்கு முன்னதாக, முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்.,சை அறிவிக்க வேண்டும்’ என்கின்றனர்.
ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், ‘தேர்தல் முடிந்த பின், முதல்வர் யார் என்பதை முடிவு செய்வோம்’ என்கின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே, மோதல் அதிகரித்து வந்த நிலையில், 18ம் தேதி, சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல்வர், துணை முதல்வர் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.கூட்டத்தில், கட்சி ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்., ‘கட்சியை வழிநடத்த, 11 பேர் அடங்கிய, வழிகாட்டி குழு அமைக்க வேண்டும்’ என, வலியுறுத்தினார்.அதை ஏற்க, முதல்வர் மறுத்து விட்டார். ‘அதில் யாரை நியமிப்பது என்பதில் பிரச்னை ஏற்படும். ஏற்கனவே, ஐவர் குழு அமைத்தோம்; அதுவே போதும்’ என, வாதிட்டார்.உடனே, துணை முதல்வர், ‘தென் சென்னை வடக்கு மாவட்டத்தில், கட்சி விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதாக புகார் தெரிவித்தனர்.இது குறித்து விசாரிக்கவே, ஐவர் குழு அமைத்தோம்.

அந்தக் குழு, எந்த அறிக்கையும் தரவில்லை. கட்சியினர் புகார் குறித்து விசாரிக்க கூட, எனக்கு அதிகாரம் இல்லை. இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண, வழிகாட்டி குழு அவசியம்’ என, மீண்டும் வலியுறுத்தினார். அந்த விளக்கத்தையும், முதல்வர் ஏற்கவில்லை.

இருவரும் இவ்விஷயத்தில் மோதிக் கொண்டதை தொடர்ந்து, ‘இப்பிரச்னைகளை பின்னர் பேசிக் கொள்ளலாம்’ என, சிலர் சமரசம் செய்தனர்.அன்று இரவு, மூத்த அமைச்சர்கள் சிலர், முதல்வர் வீட்டிற்கு சென்று, அவருடன் நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, ஓ.பி.எஸ்.,சை சந்தித்துப் பேசினர். பின், மீண்டும் முதல்வரை சந்தித்தனர்.இந்தத் தொடர் பேச்சு, நேற்று முன்தினம் இரவு முழுதும் நடந்தது.முக்கிய அறிவிப்புகள் அதன் விளைவாக, இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., இடையே, புதிய உடன்பாடு உருவாகி உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.அதுபற்றிய முக்கிய அறிவிப்புகள், வரும், 28ம் தேதி நடக்கும், அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.இரு தரப்புக்கும் இடையிலான, ‘டீல்’ குறித்து, ஆளும் கட்சி வட்டாரம் கூறியதாவது:முதல்வர் வேட்பாளர் போட்டியில் இருந்து விலக, ஓ.பி.எஸ்., ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கு பதிலாக, அவரை, கட்சியின் பொதுச்செயலராக நியமிப்பது என முடிவாகி உள்ளது.கட்சி பொறுப்பு, ஓ.பி.எஸ்.,சிடமும், ஆட்சிப் பொறுப்பு, இ.பி.எஸ்.,சிடமும் இருக்கும்.

அ.தி.மு.க.,வின் முதல்வர் வேட்பாளராக, இ.பி.எஸ்., அறிவிக்கப்படுவார். அதேநேரத்தில், கட்சியின் அவைத் தலைவராகவும், இ.பி.எஸ்., நியமிக்கப்படுவார்.இப்போது, முன்னாள் அமைச்சர் மதுசூதனன், அவைத் தலைவராக இருக்கிறார். வயது மூப்பு காரணமாக, அவரை மாற்றி விட்டு, அப்பொறுப்பில், இ.பி.எஸ்.,சை அமர செய்வது என, இரு தரப்புக்கும் இடையே பேசப்பட்டு உள்ளது.இதற்கிடையில், சிறையில் இருக்கும் சசிகலா, முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு எழுந்துள்ளது. இதை பயன்படுத்தி, அவரை மீண்டும் அ.தி.மு.க.,வில் சேர்க்க, அவரது அனுதாபிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அதை ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதில், இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., தரப்பினர் உறுதியாக உள்ளனர்.எக்காரணம் கொண்டும், கட்சியில் மீண்டும் சசிகலாவுக்கு இடம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே, காலியாக உள்ள பொதுச்செயலர் பொறுப்பில், ஓ.பி.எஸ்.,சை அமர வைக்க முடிவு செய்துள்ளனர். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க முயற்சிக்கும் அனுதாபிகளையும் ஓரங்கட்டுவதற்கு, இரு தரப்பினரும் ஒருமித்த முடிவு எடுத்துள்ளனர். இதற்கு இறுதி வடிவம் தரவே, கட்சியின் செயற்குழு, 28ல் கூட்டப்படுகிறது.இவ்வாறு, அந்த வட்டாரம் கூறியது.சமூக இடைவெளியுடன் செயற்குழு!அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம், வரும், 28ம் தேதி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில் நடக்கிறது; 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.கூட்டத்தை சமூக இடைவெளியுடன், நடத்த வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகில் உள்ள, திருமண மண்டபம் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு உறுப்பினர்கள், தலைமை அலுவலகம் மற்றும் திருமண மண்டபத்தில், சமூக இடைவெளியுடன், அமர வைக்கப்பட உளளனர்.

திருமண மண்டபத்தில் உள்ளவர்களுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக, முதல்வர் மற்றும் துணை முதல்வர் உரையாட உள்ளனர். தினகரன் டில்லி பயணம்!அ.தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் யார் என்பது தொடர்பாக, முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே போட்டி எழுந்துள்ள சூழ்நிலையில், சசிகலா, விரைவில் சிறையில் இருந்து, வெளியில் வர உள்ளார். அவர் வந்ததும், அ.தி.மு.க.,வில் இணைய, அவரது குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர்.நேற்று காலை, 10:15 மணிக்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், அவரது உதவியாளர் ஜனார்த்தனன், அ.ம.மு.க., பிரமுகர் மல்லிகார்ஜூன் ஆகியோர், தனி விமானத்தில் டில்லி சென்றனர்.சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய வைப்பதற்காக, வழக்கறிஞர்களை சந்தித்து பேச, தினகரன் சென்றதாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ., பிரமுகர்கள் சிலரை சந்திப்பதற்காக, சுப்ரமணியசாமி அழைப்பில், தினகரன், டில்லி சென்றதாகவும் கூறப்படுகிறது. –

%d bloggers like this: