அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வில் மாற்றமா?”- இணைப்புக்குத் தயாராகும் தினகரன்!

சசிகலா சிறையிலிருந்து வெளிவருவதற்கு முன்னரே அ.தி.மு.க- அ.ம.மு.க கட்சிகளின் இணைப்பு நடந்துவிடும்’ என்று உறுதியாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் அ.ம.மு.க-வினர். `தினகரனின் டெல்லி பயணமும், பன்னீரின் அரசியல் நடவடிக்கைகளுமே அதற்கு ஆதாரமாக அமைந்திருக்கின்றன’ என்று சொல்கிறார்கள்.

“சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்ததும், அ.தி.மு.க.வை மீட்பதற்கானப் பணிகளைத் தொடங்குவார்.

அ.தி.மு.க-வுடன் அ.ம.மு.க இணையுமா?’ என்ற கேள்வியை அமைச்சர் உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அது கட்சியின் தலைமைக்குரிய கேள்வி” என்றும், “என்னிடம் அதற்கு பதில் இல்லை” என்றும் சிரித்துக்கொண்டே அவர் சொன்னதற்குப் பின்னால் அரசியல் மூவ்கள் இல்லாமலில்லை. இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் பார்வையாளர்கள், “அ.ம.மு.க-அ.தி.மு.க இடையே இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கின்றன” என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். “எந்த பா.ஜ.க-வின் பின்புலம் அ.தி.மு.க-விலிருந்து தினகரன் பிரிந்து அ.ம.மு.க என்ற கட்சியைத் தொடங்கக் காரணமாக அமைந்ததோ, அந்த பா.ஜ.க-வே இந்த இரண்டு கட்சிகளுக்குமான இணைப்புக்கும் வேலை செய்யத் தயாராகிவிட்டது” என்கிறார்கள் பா.ஜ.க தரப்புக்கு நெருக்கமானவர்கள்.

சசிகலா, பன்னீர், எடப்பாடி பழனிசாமி

“கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் டெல்லியிலிருந்து தமிழகம் வந்திருந்தார்கள். அ.தி.மு.க ஆட்சி குறித்தும், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்தும் பல தரப்பிடம் அவர்கள் பேசினார்கள். எடப்பாடி தலைமையில் ஆட்சி நடந்தாலும், வலுவான தலைமையாக இன்னும் எடப்பாடி மாறவில்லை. `இரட்டைத் தலைமை’ என்ற நிலைப்பாடு ஒருபோதும் தமிழகத்துக்கு ஒத்துவராது. அதேபோல் சசிகலா தரப்பைத் தவிர்த்துவிட்டு, இப்போதிருக்கும் அ.தி.மு.க-வாக தேர்தலைச் சந்தித்தால், பெரும் சரிவை அந்தக் கட்சி சந்திக்கும். அது தி.மு.க-வுக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிடும். அப்படி தி.மு.க அசுரபலத்தோடு ஆட்சிக்கு வந்தால், பா.ஜ.க-வின் எதிர்காலம் தமிழகத்தில் கேள்விக்குறியாகிவிடும் என்பதை அறிந்துகொண்டார்கள். அதை டெல்லி மேலிடத்துக்குத் தெரியப்படுத்தினார்கள். அதன் பிறகுதான் பாண்டிச்சேரியிலிருந்த தினகரனை மத்திய அரசுக்கு நெருக்கமான ஒருவர் வந்து சந்தித்துவிட்டுச் சென்றார். அப்போதே தினகரன் தரப்பிலிருந்து, `அ.தி.மு.க-வுடன் இணைப்புக்கு எந்தத் தடங்கலும் இல்லை’ என்ற கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுவிட்டது.

இதைத் தொடர்ந்து அமித் ஷாவை நேரடியாகச் சந்திக்க விரும்பினார் தினகரன். அமித் ஷா தரப்பிலும் இதற்கு ஓகே சொல்லப்பட்டது. ஆகஸ்ட் மாதம், 25-ம் தேதி டெல்லியில் இந்த சந்திப்பு நடக்கும் என்று முடிவானது. ஆனால், அதற்கு இடையில் அமித் ஷாவுக்குக் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதால், அந்த சந்திப்பு தள்ளிப்போனது. அதேநேரம் சசிகலா மீதான வருமான வரித்துறையின் வழக்கில் சில நெருக்கடிகளும் ஏற்பட்டன. உடனே “மத்திய அரசு, சசிகலா விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கிறது” என்று செய்திகள் வந்தன. ஆனால், வருமான வரித்துறை சசிகலா விவகாரத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மட்டுமே எடுத்திருக்கிறது. பிற நடவடிக்கைகளை ஒத்திப்போடச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தினகரன் தரப்புக்கு உறுதி கொடுத்தது பா.ஜ.க. அதேபோல் சசிகலாவின் வருகைக்கு மத்திய அரசே விரைவில் இசைவு தெரிவிக்கவும் தயாராகிவிட்டது. ஆகஸ்ட் மாதம் தள்ளிப்போன அமித் ஷா-தினகரன் சந்திப்புக்கு பதிலாகவே, அமித் ஷாவுக்கு நெருக்கமான நபரைக் கடந்த வாரம் தினகரன் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது அ.தி.மு.க-வுடனான இணைப்பு குறித்த தனது கருத்தையும் தெளிவுபடுத்திவிட்டார். இந்தச் சந்திப்பு முடிந்து உற்சாகமாகவே சென்னை திரும்பினார் தினகரன். பா.ஜ.க தரப்பில் இரண்டு கட்சிகளுக்கும் இணைப்பைச் செய்துவைக்கத் தயார் என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.

பன்னீர், தினகரன், எடப்பாடி

தினகரன் டெல்லி செல்வதற்கு முன்பாகவே, அவருக்கு நெருக்கமான ஒரு தொழிலதிபர் பன்னீரைச் சந்தித்துப் பேசியிருந்தார். அப்போது சசிகலாவின் விடுதலை குறித்தும், தினகரன் கட்சியை அ.தி.மு.க-வுடன் இணைப்பது குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. தனது தரப்பில் எந்த எதிர்ப்பு இல்லை என்பதை பன்னீரும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து தனக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர்களை நீண்டகாலம் கழித்துத் தொடர்புகொண்டிருக்கிறார் தினகரன். தேர்தலுக்கு முன்பாக இரண்டு கட்சிகளும் இணைந்தால் மட்டுமே அ.தி.மு.க வலுவாகத் தேர்தலை எதிர்கொள்ள முடியும் என்கிற கருத்துகள் அமைச்சர்களிடமும் இருப்பதை தினகரன் அறிந்துகொண்டார். அந்த உத்வேதக்தில் டெல்லிக்குச் சென்ற தினகரன், இரு கட்சிகளின் இணைப்புக்கும் கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தினகரனுக்கு எதிராக கொங்கு மண்டலத்திலிருந்து குரல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு செக் வைக்கவே பன்னீர் `11 பேர்கொண்ட குழுவை அமையுங்கள்’ என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார். 11 பேர் என்று அவர் சொன்னாலும், உண்மையில் அ.தி.மு.க-வின் ஆதிக்கம் இனி தன்பக்கம் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் பன்னீரிடம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் சசிகலா வெளிவரும்போது, இணைப்புக்கு எதிராக எந்தச் சிக்கலும் இருக்காது என்று நினைக்கிறார். அதாவது பன்னீர் `பழைய பன்னீர்செல்வமாக’ மாறி, சின்னம்மா குடும்பத்தின் மீது விசுவாசத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டார் என்கிறார்கள

28-ம் தேதி நடைபெறவிருக்கும் செயற்குழுவில் சசிகலா இணைப்பு குறித்தும் பேச்சுகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. அதில் எந்த சிக்கல் ஏற்பட்டாலும், பா.ஜ.க தரப்பு உடனடியாகத் தலையிடத் தயாராகிவிட்டது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தினகரன் தரப்பிலிருந்து சில அறிவிப்புகள் வரவிருக்கின்றன. அதைத் தொடர்ந்து சசிகலாவின் விடுதலையைத் துரிதப்படுத்தும் சட்டரீதியான நடவடிக்கைகளை மறுபுறம் ஆரம்பிக்கவிருக்கிறார். அக்டோபர் மாதம் அ.தி.மு.க-வுக்குள் அடுத்தடுத்த மாற்றங்கள் நடக்கும். அது இணைப்புக்கு வழிவகுக்குமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

%d bloggers like this: