ரஜினியால் முடியாது என்றால் ?

50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சிகளைப் பார்த்து மக்கள் ஒரு வித அதிருப்தியில் உள்ளனர், மாற்றத்தை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள், அதை செய்ய சரியான நபர் ரஜினி மட்டுமே ,

திரைத்துறையில் 45 ஆண்டுகளாக முடிசூடா மன்னனாக அவர் இருந்து வருகிறார், திரைத்துறையில் அவர் தொட்ட உயரத்தை , யாரும் தொடவும் இல்லை, தொடப் போவதும் இல்லை.

திரைத்துறையில் அவருக்கு இன்றைக்கும், 500 கோடி ரூபாய்க்கு வியாபாரம் இருக்கிறது. அதை இழக்க திரைத்துறை தயாராக இல்லை. ஆனால் அவர் தமிழக மக்களுக்கு நன்றி கடனாக திருப்பித்தர அரசியல் கட்சியை ஆரம்பிப்பதை தவிர வேறு வழி இல்லை, இப்போது இல்லை என்றால், எப்போதும் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால் இந்த தேர்தலில் ரஜினி வெற்றி பெறுவது நிச்சயம். கள நிலவரங்கள் அதை தான் சொல்கின்றன. அதை எப்படி சொல்கிறேன்.

தமிழக அரசியலில் வெற்றி பெற வைக்கும் காரணங்கள் என்னென்ன ?

1 . ஆளுமை மிக்க தலைமை ,

2. .ஜாதி முத்திரையற்ற தலைமை ,

3. பணம் ,

4. கட்சி கட்டமைப்பு ,

5. வயதும், கட்டமைப்பும் ,

இந்த ஐந்து விசயங்கள் மட்டுமே இப்போது அரசியல் களத்தில் இருக்கும் தலைவர்களோடு ஒப்பிட்டு இதனை நாம் பார்க்கலாம் ..

1 .ஆளுமை மிக்க தலைமை:

திமுகவைப் பொருத்தவரை முக.ஸ்டாலின் பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார் , ஆனால் சொந்த கட்சிக்குள்ளேயே அவருக்கு ஆளுமை இல்லை , தேர்தலில் வெற்றி பெறும் வரை கட்சியை தன் குடும்ப கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள நினைத்தார், ஆனால் முடியவில்லை , பொது செயலாளர் , பொருளாளர் ஆகிய பதவிகளை துரைமுருகன் , டி.ஆர்.பாலுவிற்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ரஜினிகாந்தால் தான் உருவானது , அவர்களது திட்டம் தேர்தலில் வெற்றி பெற்றதும் , முதல்வராக ஸ்டாலினும் , துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினையும் பதவியேற்க வைக்க வேண்மும் என்பதே , ஆனால் ரஜினியின் அரசியல் வருகை கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதை அறிந்தே , அவசர அவசரமாக இருவருக்கும் (துரை , டி.ஆர்.பாலு ) பதவியை கொடுத்துள்ளார் , இதுதான் ஸ்டாலினின் ஆளுமை …

அதிமுகவைப் பொருத்தவரை EPS , OPS இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டு விட்டது, அதனை இப்போதைக்கு தீர்த்து வைக்க முடியாது, இன்றைக்கு ரஜினி ஒரு கருத்தை தொலைகாட்சியில் தெரிவித்தால் ஒரு வாரத்திற்கு அதுதான் விவாதப் பொருளாக இருக்கிறது. இந்த ஆளுமை மற்ற தலைவருக்கு இல்லை ..

2. ஜாதி முத்திரையற்ற தலைமை :

தமிழகத்தை பொருத்தவரையில் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் முதல்வராக வருவது என்பது சாத்தியமற்றது, ஏன் என்றால் குறிப்பிட்ட ஜாதிக்கும், அந்த பகுதியில் உள்ள மற்ற சமுதாயத்தினருக்கும் மோதல் இருந்து கொண்டே இருக்கும், இதனால் தேவர் சமுதாயத்தை, தலித் சமூகத்தினரோ, நாடார், பிள்ளை போன்ற இதர சமூகத்தினரோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த எடப்பாடி முதல்வராக இருப்பதால் மேற்கு மாவட்டத்தில் வழக்கமாக அதிமுகவிற்கு விழும் தலித் ஓட்டுக்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு போனது.முக.ஸ்டாலினைப் பொருத்தவரையில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர் .. எனவே அவருக்கு பெரிய அளவில் எதிர்ப்பில்லை , எம்ஜிஆர் , ஜெயலலிதா, கருணாநிதி போன்றவர்களை ஜாதிக்கு அப்பாற்பட்டவராக மக்கள் பார்த்தனர் , அதனால் தான் அவர்களால் அனைத்து சமூகத்தினரின் வாக்குகளையும் பெற முடிந்தது.

அதே நிலை ரஜினிக்கும் உள்ளது , இது அவருக்கு மிகப் பெரிய பலம் ..

3. பணம் :

தேர்தல் அரசியலில் பணம் இல்லாமல் எப்படி ? பணம் தானே பிரதானம்.

பத்து ஆண்டுகளாக ஆட்சி நடத்தி சம்பாதித்து கொளுத்த அதிமுகவினரையும், பத்து ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியாமல் தவிக்கும் திமுகவின் பண பலத்துக்கும் ஈடு கொடுக்கும் அளவிற்கு பணம் வேண்டாமா ?

ரஜினிக்கு யார் பணம் தருவார்கள் ,

யார் செலவு செய்வார்கள் ? என கேள்வி எழலாம்.

பணம் தேவைதான், அதிமுக , திமுக செலவு செய்வதில் பத்து சதவிதம் பணம் இருந்தால் போதும், ரஜினி வெற்றி பெற்று விட முடியும் , இது எப்படி என்ற கேள்வி எழலாம் , கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக பணம் செலவு செய்த கட்சி அதிமுக என்பது நாடறிந்த உண்மை. அவர்களை விட குறைவாக பணம் செலவு செய்த திமுக கூட்டணி 38 இடங்களை எப்படி பிடிக்க முடிந்தது ?

மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் , அவர்களே பூத்துக்கு ஓடி வந்து ஓட்டு போட்டு விடுவார்கள், ஓட்டுக்கு அவர்கள் காசு வாங்குவது உண்மை தான் , ஆனால் மனசாட்சிப்படியே ஒட்டுப்போடுவார்கள் என்பது எதார்த்தம் …

4. கட்டமைப்பு :

காலம் காலமாக கட்சி நடத்தி வரும். இரு பெரும் கட்சிகளுக்கு இல்லாத கட்டமைப்பை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் வரும் ரஜினியால் உருவாக்க முடியுமா ?என கேட்பவர்களும் இருக்கிறார்கள். சரியான கேள்வி தான்.

ஆர்.கே.நகர் சட்டமன்ற கட்டமைப்பு உள்ள இரு கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி TTV .தினகரன் வெற்றி பெற முடிந்தது எப்படி ?அவருக்கு என்ன கட்டமைப்பு இருந்தது ? இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் இது சாத்தியம் என்று பேசலாம், சரியான வாதமாகக் கூட இருக்கும், உ.த்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிஜேபி ஆட்சியை எப்படி பிடித்தது , பல ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல், கடுமையாக வீழ்ந்து கிடந்த பிஜேபிக்கு மோடி என்ற முகம் கிடைத்தது. அதனால் அந்த கட்சி வெற்றி பெற முடிந்தது.

96 தேர்தலில் வேட்பு மனு தாக்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மூப்பனார் தனிக்கட்சி கண்டார், கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றியும் பெற்றார், இது எப்படி நடந்தது ?

அதே போல் ரஜினி வெற்றி பெற வேண்டும் என்று மக்கள் நினைத்து விட்டால், அவர்களை எப்படி தடுத்து நிறுத்திவிட முடியும்.

5.வயதும், உடல் நிலையும் :

ரஜினி எழுபது வயதை தொட்டு விட்டார், அவரால் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது என்ற விமர்சனம் தொடர்ந்து வைக்கப்படுகிறது, வயது பற்றி பேசினால் பல தலைவர்கள் அரசியலில் இருக்க முடியாது. எந்த ஒரு தலைவரின் உடல் நலத்திற்கும், நூறு வயது என கேரன்ட்டி தரக் கூடிய டாக்டர்கள் யாராவது இருக்கிறார்களா ?ரஜினிக்கு மட்டும் வயதாகிவிட்டதா ? திமுக தலைவராக இருந்த கருணாநிதி 95 வயது வரை இருந்தார். ஆனால் முதல்வராக இருந்த ஜெயலலிதாவால் அத்தளை ஆண்டுகளாக இருக்க முடிந்ததா ? அரசியலில் பல தலைவர்கள் எழுபதுகளில் இருப்பவர்கள் தான். அதற்காகவே ரஜினியால் வெளியே வர முடியாது என்று பொய் பிரச்சாரம் செய்கிறார்கள், கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் ஊர் , ஊராக சென்று பிரச்சாரம் செய்தார்களா ?அவசியம் ஏற்படவில்லையே ?

1996 ம் வருடம் ரஜினியின் ஒற்றை பேட்டியை தனியார் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கவில்லையா ? இன்னும் சொல்லப்போனால் இன்றைக்கு டிஜிட்டல் உலகில் இருக்கிறோம், இன்னும் விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் , இன்னுமா உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது.

தமிழகத்தில் ரஜினியால் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்றால் யாராலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது மட்டும் நிச்சயம் …..

நன்றி- குமுதம் ரிப்போர்ட்டர்

%d bloggers like this: