சேர்ந்தே விளையாடுவோம்… வாப்பா! – டெல்லியே என் பக்கம்… போப்பா! – உச்சத்தில் ஆடு புலியாட்டம்!

பன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான்.

மூன்றரை ஆண்டுகளாகப் பெட்டிப் பாம்பாக பதுங்கியிருந்த பன்னீர் படமெடுத்து ஆடுகிறார். அவர் முகத்தில் பவ்யம் தெளிந்து, ரெளத்திரம் தெறிக்கிறது. டெல்லி தொடங்கி தினகரன் முகாம் வரை எதிர்பார்த்திராத ஆட்களெல்லாம் வரிசையாக வந்து வணக்கம் வைக்க… அவர்களை வரவேற்கும் பன்னீர் முகாமில் ‘பன்னீர்’ மணக்கிறது. எடப்பாடி முகாமிலோ உடனிருந்தவர்களே மெளனம் காக்க… கலங்கிப்போயிருக்கிறார் மனிதர். வேறு வழியில்லாமல் எதிர் முகாமுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவுக்கு இறங்கிவந்திருக்கிறது எடப்பாடி தரப்பு!

பகிரங்க மோதல்… பலத்த கோஷம்!

அ.தி.மு.க தலைமைக்கழக நிர்வாகிகளின் அவசரக் கூட்டம், செப்டம்பர் 18-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள தலைமைக்கழகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடந்தவற்றை சீனியர் நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள். “முன்பெல்லாம் எடப்பாடி, பன்னீர் தரப்பில் அவரவர் ஆதரவாளர்கள் அமைதியாகக் கட்சிக் கூட்டங்களுக்கு வந்து செல்வார்கள். ‘பிரச்னை வேண்டாம்’ என்று இருதரப்பினரும் நினைத்ததே இதற்குக் காரணம். இப்போது இருதரப்பிலும் பகிரங்கமாக மோதிக்கொள்ள முடிவெடுத்து விட்டார்கள்.

கூட்டத்துக்கு முந்தைய நாள் காலையிலிருந்தே பன்னீர் தரப்பிலிருந்து அனைத்து நிர்வாகிகளுக்கும் தனித்தனியாக அலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில், முக்கிய நிர்வாகிகள் பலருக்கும் சில வாக்குறுதிகள் தரப்பட்டன. அதன் விளைவுதான் கூட்டத்துக்கு பன்னீர் வந்தபோது எதிரொலித்த ‘அம்மாவின் அரசியல் வாரிசு பன்னீர்செல்வம்’ என்ற கோஷம். அதேபோல எடப்பாடி தரப்பிலும் கட்சி நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்கள். அதை முன்வைத்தே, ‘நிரந்தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி’ என்ற போட்டி கோஷம் எழுந்தது.

இதில் பன்னீர் தரப்புக்குக் குவிந்த ஆதரவை பன்னீரே எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட கொங்கு அமைச்சர்கள் பலரும் தனக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த எடப்பாடிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த ஒரு மாதமாகவே பன்னீர், தன் ஆதரவாளர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய அமைச்சர்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்திவந்தார். ‘நான் தனியாள் இல்லை’ என்பதை நிரூபிக்க, சுறுசுறுப்பாகச் சுழன்றார்.

பன்னீர் இப்போது எடப்பாடிக்கு எதிராகக் கையிலெடுத்திருக்கும் ஆயுதமே ‘கட்சியை எடப்பாடி கண்டுகொள்ளவில்லை’ என்பதுதான். ‘அமைப்புரீதியாக அ.தி.மு.க-வுக்குள் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன’ என்பதையும் நிர்வாகிகள் மத்தியில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார் பன்னீர். பல அமைச்சர்கள் எடப்பாடி மீது வருத்தத்தில் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களும் பன்னீருக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்திருக்கிறார்கள். இதை முன்வைத்துத்தான் கூட்டத்தில் பன்னீர் எடுத்த எடுப்பிலேயே, ‘கட்சிரீதியாக எனக்கு என்ன செய்தீர்கள், கட்சிக்கு என்ன செய்தீர்கள்?’ என்று எடப்பாடியிடம் நேரடியாகக் கேட்டிருக்கிறார். எடப்பாடி அதற்கு பதில் சொல்வதற்கு முன்பாக பன்னீரின் ஆதரவாளரான அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், ‘இரண்டு அணிகளும் இணையும்போது சொன்ன வார்த்தை என்ன ஆனது… `11 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்’ என்று சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள்தானா…’ என்று எடப்பாடியை நோக்கி எகிற… பன்னீரே இந்தப் படபடப்பை எதிர்பார்க்கவில்லை. அதன் பிறகே சூடுபிடித்தது கூட்டம்.

பூனைக்கு மணியைக் கட்டுவது யார் என்று காத்திருந்தவர்கள்போல வரிசையாக எடப்பாடிக்கு எதிர்க்குரல்கள் எழுந்தன. இருக்கையிலிருந்து எழுந்த அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், ‘இரு அணிகள் இணையும்போது, இருதரப்பிலும் சம அளவில் கட்சிப் பதவிகள் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள். ஆனால், எங்கள் அணியைத் தொடர்ந்து புறக்கணிக்கிறீர்கள்’ என்றார் சத்தமாக.

எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம்

எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் சமீபத்திய நடவடிக்கைகளும் மாறிவிட்டன. அவர் டெல்டா பகுதியில் தனியாக ஓர் அதிகார மையத்தை உருவாக்கிவருகிறார்.

50-க்கும் மேற்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர் பின்னால் அணிவகுக்கிறார்கள். `முதல்வர் வேட்பாளர்’ சர்ச்சை எழுந்தபோதே வைத்திலிங்கம், ‘எடப்பாடி எப்படி அவரே தன்னை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ளலாம்? அதெல்லாம் செயற்குழு, பொதுக்குழுவில் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று சீறினார். இந்தக் கூட்டத்திலும் அவரது கோபம் வெளிப்பட்டது. ‘ஆட்சியை யெல்லாம் எடப்பாடியார் நல்லாத்தான் கொண்டு போனாரு. ஆனா, கட்சியை பலப்படுத்த ஒரு வேலையும் பார்க்கலை’ என்று போட்டு உடைத்துவிட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி தரப்பு, ‘இந்த மூணு வருஷத்துல இத்தனை பொறுப்புகளை கட்சியில போட்டிருக்கேன்’ என்று சொல்ல… ‘அதனால கட்சி வளர்ந்துட்டுதா, சொல்லுங்க?’ என்று சத்தமாகவே எதிர்க் கேள்வி கேட்டியிருக்கிறார். இதேரீதியில்தான் கே.பி.முனுசாமியும் பன்னீருக்கு ஆதரவாகப் பேசினார்.

பன்னீரின் ஆதரவாளர்கள் பலருமே, `டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள்ல தினகரன் டீமுக்கு அஞ்சாயிரத்திலிருந்து இருபத்தஞ்சாயிரம் வாக்குகள் வரை இருக்குது. கட்சியை நீங்க ஒழுங்கா நடத்தியிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?’ என்று கேட்க, எடப்பாடி தரப்பில் அதற்கு பதில் இல்லை. ஒருகட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நான்கு பேரும் எழுந்து தனியாக அறைக்குள் சென்றிருக்கிறார்கள். இதுதான் சமயம் என்று எழுந்த சி.வி.சண்முகம், ‘என்னய்யா நினைச்சுக்கிட்டு இருக்கீங்க உங்க மனசுல… இந்தக் கட்சி என்ன, ஒரு சாதிக்கான கட்சியா?’ என்று கொங்கு மண்டலத்து பிரமுகர்களை மனதில்வைத்து காரசாரமாகப் பேச, அவரை அமைதிப்படுத்த முயன்றார் தளவாய்சுந்தரம். அப்போது மேலும் ஆக்ரோஷமானவர், ‘நீ பதவி வாங்க என்ன வேணாலும் செய்வ… அமைதியா உட்காருய்யா’ என்று அவரிடம் சீறியிருக்கிறார்.

இப்படி வைத்தி, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் எனப் பலரும் பன்னீருக்குக் குரல் கொடுக்க… எடப்பாடியின் ஆதரவாளர்கள் என்று அறியப்பட்ட கொங்கு முகாம் ‘நமக்கேன் வம்பு?’ என்று அமைதியாக இருந்தது. இதை எடப்பாடியே எதிர்பார்க்கவில்லை. தன்னை நோக்கிக் கேள்விக்கணைகள் வந்தபோதெல்லாம் அடிக்கடி அவர் தங்கமணியைப் பார்க்க… கடைசியாக எழுந்த தங்கமணி, ‘இப்ப எதுக்குங்க அந்தப் பிரச்னையெல்லாம்… செயற்குழுவுல பேசி, முதல்வர் வேட்பாளரை முடிவு செஞ்சுக்கலாம்’ என்று சுரத்தே இல்லாமல் ‘சேம் சைடு கோல்’ போட அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி!

நேரம் செல்லச் செல்ல ஒருகட்டத்தில் பெரும் மோதலே வெடிக்கும் சூழல் உருவானது. இதனால், இனியும் கூட்டத்தைத் தொடர வேண்டாம்; முடித்துக்கொள்ளலாம் என்று அவசரமாகக் கூட்டத்தை முடித்துவிட்டு, செயற்குழு அறிவிப்பை மட்டும் டைப் செய்யச் சொல்லி அறிக்கையாக வெளியிட்டனர்” என்றவர்கள், கூட்டத்துக்கு அடுத்தடுத்த நாள்களில் நடந்த அப்டேட்களையும் அடுக்கினார்கள்.

“இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பன்னீர் மற்றும் எடப்பாடி ஆகியோர் வீடுகளில் தனித்தனியாகக் கூட்டங்கள் நடந்தன. தனது வீட்டில் நடந்த கூட்டத்தின்போது நீண்டகாலத்துக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார் பன்னீர். அவர் பேச ஆரம்பித்தபோதே, ‘நிறைய பேச நினைக்கிறேன்… வார்த்தை வரலை… ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கேன். ரொம்ப நன்றி’ என்று உருகியிருக்கிறார். பதிலுக்கு அவரின் ஆதரவாளர்கள், ‘அண்ணே நாங்க விட்ருவோமா… இந்த முறை உங்க பவரைக் காட்டிட்டீங்க. 11 பேர் குழுவை அவங்க அமைக்கலைனா நிலைமை மோசமாயிடும். குழுவை அமைக்குறதுக்காக எதையும் செய்யத் தயங்க மாட்டோம்’ என்று கொந்தளித்திருக்கிறார்கள். அவர்களை அமைதிப்படுத்தியிருக்கிறார் பன்னீர்.

எதிர் முகாமான எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

`அவங்களை இப்படியே வளர்த்துவிட்டீங்கன்னா, எலெக்‌ஷன் நேரத்துலயும் எல்லா முடிவுகளையும் அவங்களே எடுப்பாங்க. சும்மா விடக் கூடாது.

வழிகாட்டுதல் குழுவை அமைச்சா, மொத்தமா கட்சி கையைவிட்டுப் போயிடும். அதுக்கு பதிலா நாம கொஞ்சம் இறங்கிப்போகலாம். நீங்களும் பன்னீரும் பொறுப்புகளைச் சமமா பிரிச்சுக்கோங்க’ என்று எடப்பாடிக்கே ஆலோசனை தரப்பட்டது. இதற்கு எடப்பாடி தரப்பும் சம்மதித்திருக்கிறது” என்றார்கள்.

“டெல்லி என் பக்கம்!” – பவருக்கு வரும் பன்னீர்…

மேற்கண்ட நிகழ்வுகளை யெல்லாம் உன்னிப்பாக கவனித்துவருகிறது டெல்லி பா.ஜ.க தலைமை. கூட்டம் நடந்த மறுநாளான செப்டம்பர் 19-ம் தேதி டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் ஒருவர், பன்னீர் தரப்பிடம் நீண்டநேரம் பேசினாராம். பல மாதங்களுக்குப் பிறகு தெம்பூட்டும்படி டெல்லியிலிருந்து தனக்கு வந்த தகவலால் உற்சாகமாக இருக்கிறார் பன்னீர். மறுபுறம் எடப்பாடி தரப்பிடமும் பா.ஜ.க-விலிருந்து பேசியிருக்கிறார்கள். அது குறித்து விசாரித்தால், `செப்டம்பர் 20-ம் தேதி அன்று ராஜ்யசபாவில் தாக்கலாகவிருந்த விவசாயிகள் மசோதாவுக்கு ஆதரவு கேட்டுப் பேசினோம்” என்றார்கள்!

இந்த விவகாரத்தையும் தனக்குச் சாதகமாக பன்னீர் தரப்பு ஸ்கோர் செய்ததுதான் ஹைலைட். செப்டம்பர் 19-ம் தேதியன்றே அ.தி.மு.க ராஜ்யசபா உறுப்பினர்களைத் தொடர்புகொண்ட பன்னீர் தரப்பு, ‘வேளாண் மசோதாவில் பா.ஜ.க-வை ஆதரிக்க வேண்டும். இது கட்சியின் உத்தரவு’ என்று சொல்லியிருக்கிறது. அதன் பிறகு, இதே கருத்தை எடப்பாடி தரப்பில் உறுப்பினர்களிடம் தெரிவித்தபோது, “அதான் அண்ணன் முன்னமே சொல்லிட்டாரே…” என்று சொல்ல, ஜெர்க் ஆகியிருக்கிறது எடப்பாடி டீம்!

செயற்குழுவுக்கு அதிகாரமா?

அ.தி.மு.க-வின் செயற்குழுக் கூட்டம் செப்டம்பர் 28-ம் தேதி நடைபெறும் என்று கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க கட்சி விதிகளின்படி செயற்குழுவுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கிடையாது. செயற்குழுவில் ஒரு விஷயத்தைப் பேசி முடிவு செய்துவிட்டு, அந்த முடிவை பொதுக்குழுவில் நிறைவேற்றினால் மட்டுமே அது செல்லுபடியாகும். இது பற்றியும் பேசியவர்கள், “இடைப்பட்ட நாள்களில் அதிகாரப் பங்கீடு முடிந்துவிடும். பன்னீருக்கான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப் பட்டுவிடும். இதனால், செயற்குழுவில் இரு தரப்பினரும் பேசிவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். முதல்வர் வேட்பாளர் பற்றி இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது” என்றார்கள்.

தினகரன் பிளான்!

டெல்லிக்கு தினகரன் சென்றுவிட்டு வந்த பிறகு பன்னீர் தரப்பு கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது. இது பற்றிப் பேசிய தினகரன் தரப்பினர், “எங்கள் தரப்பில் ஏற்கெனவே பன்னீருடன் ஒரு சந்திப்பை முடித்து விட்டார்கள். எடப்பாடிக்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்தைச் சரிக்கட்டி, எடப்பாடிக்கு எதிராகப் பேசவைத்தது தினகரனின் பிளான்தான். தினகரன் ஆகஸ்ட் 25-ம் தேதியே டெல்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கிருந்து சிக்னல் கிடைக்கவில்லை. அதனால், செப்டம்பர் 20-ம் தேதி தனி விமானத்தில் டெல்லி சென்ற தினகரன், அமித் ஷாவுக்கு நெருக்கமான சிலரைச் சந்தித்துவிட்டு அன்றிரவே சென்னை திரும்பிவிட்டார். சந்திப்புகள் சுமுகமாக முடிந்திருக்கின்றன. அ.தி.மு.க-வில் அடுத்தடுத்து நடக்கப்போகும் மாற்றங்கள், எடப்பாடிக்கு இறங்குமுகமாகவே இருக்கும்” என்றார்கள்.

அதிகாரத்தைப் பிடிப்பதற்காக நடக்கும் அருவருப்பான அரசியலை மக்கள் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். நாளை கட்சியில் யார் வேண்டுமானாலும் அதிகாரத்தைக் கைப்பற்றலாம். ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதை மக்கள் மட்டுமே தீர்மானிப்பார்கள்!

எப்போ, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்!”

ஆறு மாதங்களுக்கு முன்னரே அமைச்சர்கள் சிலர் பன்னீரிடம், “அண்ணே நீங்க ஏன் அமைதியாக இருக்கீங்க… உங்களை நம்பி வந்ததுக்கு எங்களுக்கும் கட்சியில மரியாதை இல்லை. நீங்க பிரச்னை பண்ணினாத்தான் எல்லாம் சரியாகும்” என்று பொங்கியிருக் கிறார்கள். அதைக் கேட்டுக் கடும் ஆத்திரமடைந்த பன்னீர், “நீங்க ஒண்ணும் கெட்டுப் போயிடலை. நான் அமைதியா இருக்கிறதாலதான் ஆட்சி நாலு வருஷமா நடக்குது. நீங்கல்லாம் அமைச்சரா, நல்லா சுகபோகமா இருக்கீங்க. எனக்குத்தான் மக்களிடம் அவப்பெயர். எல்லாத்தையும் நான் சுமந்துக்கிட்டு அல்லாடுறேன். எப்போ, என்ன செய்யணும்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறார். பன்னீர் சொன்ன நேரம் இப்போதுதான் அவருக்கு அமைந்திருக்கிறது!

%d bloggers like this: