பன்னீர் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த `சர்வே’… `முடிவு’களால் எடப்பாடி தரப்பு படு குஷி!

தான் கொண்டு வந்திருந்த சூடான சமோசாவை பேப்பர் தட்டில் பரப்பிவிட்டு செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிவாலயத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றன. ‘2021 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்பதில் கிச்சன் கேபினெட் தெளிவாக இருக்கிறதாம். இதற்காக

காங்கிரஸ், இடதுசாரிகள் தவிர்த்து இதர கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறது.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், உழுந்தையிலிருக்கும் பண்ணை வீட்டில் ஸ்டாலினைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொங்கித் தீர்த்துவிட்டாராம். ‘எங்களைக் கூட்டணியில் வைத்துக்கொண்டே பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுக்கிறீர்கள்… இதெல்லாம் நியாயமா?’ எனக் கொதித்திருக்கிறார்!”

“ஸ்டாலின் ரியாக்‌ஷன்?”

“அவரால் என்ன பேச முடியும்… அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், ‘உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார்.

இது குறித்துக் கட்சி சீனியர்களிடம் ஸ்டாலின் விவாதித்தபோது, ‘விடுதலைச் சிறுத்தைகள் 17 தொகுதிகளில் தேர்தல் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அது அவர்கள் விருப்பம். சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஐந்து தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். சின்னம் விவகாரத்தில் தி.மு.க தலைமையின் அழுத்தத்துக்கு வைகோ தரப்பில் சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருக்கத்தில் இந்த விவகாரம் கூட்டணிக்குள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தும்.”

“ம்ம்… அ.தி.மு.க-வில் ஒரு சர்வே முடிவு கலகலத்திருக்கிறதாமே..?”

“ஆமாம். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கட்சியின் கிளைச் செயலாளர் முதல் மூத்த நிர்வாகிகள் வரை ஒரு சர்வேயை நடத்தியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்தான் இந்த சர்வேக்கான ஏற்பாட்டைச் செய்தார்களாம். ‘முதல்வர் வேட்பாளருக்கு உங்கள் சாய்ஸ்?’ என்பதுதான் கேள்வியாம். இதற்கு 96 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்திருப்பது ஓ.பி.எஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

போதாக்குறைக்கு இதே கேள்வியை முன்வைத்து மத்திய உளவுத்துறையும் ரகசிய சர்வே ஒன்றை அ.தி.மு.க-வினர் மற்றும் மக்களிடம் நடத்தியிருக்கிறது. அதில் பங்கேற்றவர்களில் 34 சதவிகிதம் பேர் எடப்பாடிக்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கின்றனர். பன்னீருக்கு வெறுமனே 3.3 சதவிகிதம் பேரும், தினகரனுக்கு 1.3 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த சர்வே முடிவுகள் அரசல் புரசலாக லீக் ஆகிவிட, எடப்பாடி தரப்பு படு குஷி. ஆனால், பன்னீர் தரப்பும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் சர்வே முடிவுகளால் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையாம்!”

%d bloggers like this: