தலைமறைவு தினகரன், பா.ஜ.க திட்டம், ஓ.பி.எஸ் ராஜினாமா? அப்டேட் நிலவரம்!

கடந்த சில நாள்களாக அ.தி.மு.க-வில் நடந்துவரும் பஞ்சாயத்து காட்சிகள் பத்து விசு படங்களை விழுங்கியவையாக இருக்கின்றன. திடீர் திடீரென நிகழும் சந்திப்புகளால், ஆடிப்போயிருக்கிறது அ.தி.மு.க அலுவலகம். எடப்பாடி பழனிசாமி கோஷ்டி, ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி, சசிகலா கோஷ்டி என மாறி மாறி சீன்களை அரங்கேற்றிவருகிறார்கள். இவர்களுக்கு ஈடுகொடுத்து டி.டி.வி.தினகரனும் தன் பங்குக்கு சீன் போடுவதாகக் கூறப்படுகிறது.

சீன் 1: ஓ.பி.எஸ்-ஸின் ராஜினாமா சீன்!

செப்டம்பர் 29-ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் கலந்துகொள்ளவில்லை.


ஓ.பி.எஸ் வீடு

மீடியாக்கள் ஓ.பி.எஸ் வீட்டின் முன்பு குவிந்தனர். ஓ.பி.எஸ் வீட்டுப் பணியாளர் ஒருவர் கூறுகையில், “முதலில் தேசியக்கொடியைக் கழற்றினோம். பிறகு, கட்சியின் முக்கியஸ்தர்கள் எங்கள் தலைவருடன் பேசினார்கள். அதைத் தொடர்ந்து மீண்டும் கொடியைக் கட்டச் சொல்லிவிட்டார்” என்றனர். இன்று செப்டம்பர் 30-ம் தேதி ஓ.பி.எஸ் ஆதரவு முக்கிய பிரமுகர் ஒருவர், “நேற்றே தன் ராஜினாமா கடிதத்தை எழுதி, கவரில் போட்டுவைத்துவிட்டார். அதை கவர்னரிடம் சேர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறார். அவர் போவாரா என்று தெரியவில்லை. ஆனால், தேனிக்குப் போவது உறுதி” என்று வெடியைக் கிள்ளி எறிந்தார். இவர் சொன்னதை மீடியாக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாமும் ஆளுநர் அலுவலகத்தில் விசாரித்தோம். ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து அப்பாயின்ட்மென்ட் வாங்கவில்லை என்றனர். ஆக, அ.தி.மு.க-வின் தலைவர்கள் திரண்டு வந்து தன்னைச் சமாதானப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்து ஓ.பி.எஸ், இந்த ராஜினாமா சீனை உருவாக்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

சீன் 2: தினகரன் தலைமறைவு!

தனது விடுதலை தொடர்பான ரகசிய வேலைகளை, அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு டீமை வைத்து சசிகலா அரங்கேற்றிவருகிறார். நடராஜனின் தம்பியும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான பழனிவேலுக்கு சில அசைன்மென்ட்டுகளைக் கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் திரைமறைவு வேலைகள். டெல்லிக்கு விமானத்தில் போவது மாதிரியான பொதுக்காட்சிகளுக்கு தினகரனைப் போகச் சொல்லியிருக்கிறார் சசிகலா. இதைத் தெரிந்துகொண்டு, கடந்த சில நாள்களாக சென்னையில் உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார்.


தினகரன்

அ.தி.மு.க தரப்பில் செயற்குழுக் கூட்டம் நடப்பதுபோல, தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து இரண்டு நாள்கள் சென்னை வரச் சொன்னார் தினகரன். இந்தக் கூட்டங்களிலும் தினகரன் கலந்துகொள்ளவில்லை. `சசிகலா தொடர்பான ரகசிய வேலைகளில் படு பிஸியாக இருப்பதால், வர முடியவில்லையாம்’ என்று அவரது மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் தகவல் பரப்பப்பட்டது. சசிகலா தொடர்பான அனைத்து வேலைகளையும் இவர்தான் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவே தலைமறைவு வாழ்க்கை என்கிறார்கள்.

சீன் 3: பா.ஜ.க-வின் சசிகலா திட்டம்!

ஓ.பி.எஸ்-ஸுக்கு ஆதரவு என்று சொல்லி அவரை முடுக்கிவிட்டது பா.ஜ.க-வின் தலைவர்கள்தான். அதேபோல், எடப்பாடிக்கு உத்தரவாதங்களைக் கொடுத்து ஓ.பி.எஸ்-ஸுக்கு எதிராகக் கொம்பு சீவி விட்டதும் பா.ஜ.க தலைவர்கள் சிலர்தான். இரண்டு பேருமே தற்போதைய சூழ்நிலையில், மோதிக்கொண்டு இவர் வேண்டாம் என்று அவரும், அவர் வேண்டாம் என்று இவரும் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதைத்தான் பா.ஜ.க எதிர்பார்த்தது. இருவரும் சசிகலா வந்தால்கூடப் பரவாயில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். இடையில், டெல்லி பா.ஜ.க தலைவர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள். எல்லாமே முதல்வர் எடப்பாடி தொடர்பானவை. அவரை `60\40 முதல்வர்’ என்று கிண்டலாக முக்கியத் தலைவர் ஒருவர் டெல்லி சீனியர் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் கமென்ட் அடித்தாராம். “எங்கள் லட்சியமே தமிழகத்தில் தி.மு.க-வை வரும் தேர்தலில் வீழ்த்துவது.


எடப்பாடி பழனிசாமி

ஆனால், எடப்பாடி அதற்குச் சரிப்பட்டு வர மாட்டார். ஏனென்றால், தி.மு.க எம்.எல்.ஏ-கள், மாவட்டச் செயலாளர்கள் இப்படி அனைவருக்கும் கான்ட்ராக்ட், டெண்டரில் 60-40 விகிதத்தில் வேலைகளைக் கொடுக்கச் சொன்னது யாரென்று எங்களுக்குத் தெரியும். தமிழக சட்டசபையில் ஆரம்பகாலத்தில் தி.மு.க-வினர் ரகளை செய்து சபாநாயகர் இருக்கையைத் தாக்கினார்கள். போதைப்பொருள் குட்கா பாக்கெட்டுகளைக் கொண்டு சென்றார்கள். இது தொடர்பாக சரியான நடவடிக்கையை எடுக்காமல் வேண்டுமென்றே நழுவவிட்டது எடப்பாடி அரசு.

இன்னும் எத்தனையோ உதாரணங்களைச் சொல்ல முடியும். அப்படிப்பட்டவரை எப்படி நாங்கள் தி.மு.க. எதிர்ப்பு அஸ்திரமாக பயன்படுத்த முடியும்… அதுதான் யோசிக்கிறோம். ஓ.பி.எஸ்-ஸை ஏற்கெனவே நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டாம் என்று சொல்லியும், அதை மீறி ராஜினாமா செய்தார். கூவத்தூரில் தனக்கு அதிக எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றிவிட்டார். அவரும் சரிப்பட்டு வர மாட்டார். எனவே, நாங்கள் சசிகலாவைப் பயன்படுத்த நினைக்கிறோம்” என்றாராம் அந்த பா.ஜ.க சீனியர் தலைவர்.

சீன் 4: எடப்பாடியின் புதிய திட்டம்!

எடப்பாடியைப் பொறுத்தவரையில், தனது சகாக்கள் வேலுமணி, தங்கமணி இருவரையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. உளவுத்துறையின் தவறான தகவல்களை நிஜமென்று நம்பிவருவதாக அமைச்சர்கள் புலம்புகிறார்கள். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நேற்றுவரை எடப்பாடி கோஷ்டியில்தான் இருந்தார். அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட மணிகண்டனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி தருவதாக சமாதானப்படுத்திவந்தார் எடப்பாடி.

ஆனால், கொங்கு அமைச்சர்கள் `நோ’ சொன்னதால், மணிகண்டனுக்கு எடப்பாடி, அமைச்சர் பதவி தரவில்லை. அந்தக் கோபத்தில் ஓ.பி.எஸ். பக்கம் சாய்ந்துவிட்டார் மணிகண்டன். இதை எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள். மணிகண்டனைப் போலவே, எடப்பாடி தரப்பு மீது அதிருப்தியில் இருக்கும் மேலும் பல,ர் ஒரு சில நாள்களில் ஓ.பி.எஸ்-ஸை நேரில் சந்திக்கப் போவதாக அ.தி.மு.க-வில் பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

பன்னீர் செல்வம்

ஒருவேளை ஓ.பி.எஸ், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், அதைச் சமாளிக்கும் வகையில் சாதிக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்து இனி வரவிருக்கும் ஏழு மாத காலத்தில் சுழற்சிமுறையில் துணை முதல்வர் பதவியில் அமர்த்தலாமா என்று யோசித்து வருகிறாராம் எடப்பாடி. இது தொடர்பாக, உளவுத்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோருடன் ஆலோசனை நடத்திவருகிறார். இதுவும் சீன்தான் என்றாலும், ஓ.பி.எஸ்-ஸைச் சமாளிக்க எடப்பாடியின் அதிரடி என்கிறார்கள்.

%d bloggers like this: