நான் வைக்கும் நிபந்தனைகள் இது தான்… இஷ்டமா..? கஷ்டமா…? சிலிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்..!

அதிமுக செயற்குழுவை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக அக்கட்சியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அடிமட்ட தொண்டர்களுக்கு மிகுந்த கலக்கத்தை தந்துள்ளது.

சென்னை பசுமை வழிச்சாலையில் நடக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். இடையேயான அதிகாரப் போட்டி இன்றோ நாளையோ முடிவுக்கு வராது போல் தெரிகிறது.

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். தனது இல்லத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து தீவிர ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுச்செயலாளர்

அதிமுகவில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தேர்வு செய்வதற்காகவும், கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பதை முடிவெடுப்பதற்காகவும் கடந்த திங்கள்கிழமை அக்கட்சியின் செயற்குழு கூடியது.

தொடர்ந்து 2 நாட்களாக

இந்நிலையில் நேற்றும், இன்றும் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு கட்டத்தில் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்த அவர் ஆளுநர் மாளிகை செல்ல வேண்டும் காரை ரெடியாக நிறுத்தச்சொல்லுங்கள் என தனது உதவியாளரிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பதறியடித்து வந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கமும், கே.பி.முனுசாமியும் சில விவகாரங்களை அவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

என்ன நிபந்தனை

ஆனால் அவர்களிடம் பிடிகொடுக்காத ஓ.பி.எஸ். சில நிபந்தனைகளை பட்டியலிட்டுள்ளார். அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும், முதலமைச்சர் வேட்பாளராக இ.பி.எஸ். முன்னிறுத்தப்பட்டால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி மட்டுமே இருக்க வேண்டும் என்றும் இ.பி.எஸ். வகித்து வரும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி எடுக்கப்படும் எனவும் கூறியிருக்கிறார். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை என்றால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இரட்டை இலை சின்னத்தை மட்டும் முன்னிறுத்தி தேர்தலை சந்திப்போம் என டிமான்ட் வைத்திருக்கிறார்.

ராஜினாமா

தனது இந்த நிபந்தனைகளை இ.பி.எஸ். ஏற்காவிட்டால் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொள்கிறேன் என ஷாக் கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ். இதனிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் ஓ.பி.எஸ். மனதை கரைத்து வருகிறார் கே.பி.முனுசாமி.

%d bloggers like this: