ஓயாத பஞ்சாயத்து…பெரியகுளம் பண்ணை வீட்டில் முகாமிட்ட ஓபிஎஸ் – ஆதரவாளர்களுடன் ஆலோசனை

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து இன்னும் முடிவுக்கு வராத நிலையில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சொந்த ஊரில் உள்ள பண்ணை வீட்டில் முகாமிட்டு ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு நள்ளிரவில் முதல்வரானார் ஓபிஎஸ். சில வாரங்களிலேயே பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது காரணம் சசிகலா. முதல்வராக வேண்டும் சசிகலா விரும்பவே அரைமனதோடு ராஜினாமா செய்த விட்டு ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார் ஓபிஎஸ் அணி என்று இரு அணிகளாகப் பிரிந்தது.

சசிகலா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூவத்தூரில் முகாமிட்டார்.

இபிஎஸ் – ஓபிஎஸ்

சசிகலா சிறைக்கு போன உடனே சில மாதங்களில் ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்தனர். டிடிவி தினகரன் தனியாக கட்சி தொடங்கிவிட்டார். முடக்கப்பட்ட இரட்டை இலையை மீட்டனர். கட்சியும் சின்னமும் ஓபிஎஸ் இபிஎஸ் வசமானது. ஆட்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்கு ஓ.பன்னீர் செல்வம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற சக்தி வாய்ந்த பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார் ஓபிஎஸ்.

யார் முதல்வர் வேட்பாளர்

2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. திடீரென முதல்வரானவர் எடப்பாடி பழனிச்சாமி என்றாலும் நான்கு ஆண்டுகள் ஆட்சியை வழிநடத்தி விட்டார். ஓபிஎஸ் துணைமுதல்வராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியை வழிநடத்தி வருகிறார்.

ஓபிஎஸ் கோரிக்கை

யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வியில் தொடங்கிய இந்த பிரச்சினை தினம் ஒரு பஞ்சாயத்தாக மாறி மாறி பேசப்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் பதவி மீண்டும் வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரதானக் கோரிக்கை. அதேபோல, வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்பதும் ஓ.பி.எஸ். தரப்பின் கோரிக்கை.

செயற்குழுவில் முடிவு

இதனிடையே கடந்த வாரம் கூடிய செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று முடிவு எட்டப்படவில்லை. அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்திருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.

பண்ணை வீட்டில் ஆலோசனை

பெரியகுளத்திற்கு வந்த ஓ. பன்னீர் செல்வத்தை நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் நேற்றிரவு சந்தித்தனர். தனது மகன் ரவீந்திரநாத்தின் மகன் ஜெய்தீப் பிறந்தநாளை கொண்டாடிய பன்னீர் செல்வம், இன்று காலையில் பண்ணை வீட்டில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நிர்வாகிகள் வருகை

கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கியிருக்கும் பன்னீர் செல்வத்தை தேனி மாவட்ட நிர்வாகிகள் முதலில் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து வெளி மாவட்ட நிர்வாகிகளும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் பற்றிய சர்ச்சை நீடித்து வரும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

%d bloggers like this: