தி.மு.க., கூட்டணியில் சலசலப்பு: ஸ்டாலின் கிறுகிறுப்பு

தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு இடையே, திடீர் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. ‘வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும்’ என, கூட்டணி கட்சிகளுக்கு, தி.மு.க., தலைமை நெருக்கடி கொடுப்பதை எதிர்த்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஏற்கனவே குரல் எழுப்பி உள்ளார். அவரைத் தொடர்ந்து, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், தனிச் சின்னத்தில் போட்டியிடப் போவதாக, நேற்று

அறிவித்துள்ளார். கூட்டணி கட்சி பிரச்னைகள் ஒரு பக்கமும், உட்கட்சி பிரச்னைகள் மறுபக்கமும் கிளம்பி, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை கிறுகிறுக்க வைத்து உள்ளன.அடுத்த ஆண்டு மே மாதம், தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.
அ.தி.மு.க., – தி.மு.க., அணிகளில், எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும், தனிச் சின்னத்தில் போட்டியிடுமா போன்ற கேள்விகளும், யூகங்களும், அரசியல் வட்டாரத்தில் வலம் வரத் துவங்கி உள்ளன.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் தவிர மற்ற கட்சிகள், தனிச் சின்னத்தில் போட்டியிட்டால், அத்தொகுதிகளை, ஆளும் கட்சி கட்சி குறிவைத்து கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. எனவே, கூட்டணி கட்சிகளை, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்க, தி.மு.க., மேலிடம் விரும்புகிறது. இதன் வாயிலாக, களத்தில் போட்டியை கடுமையாக்குவதுடன், கூட்டணி வேட்பாளர்களையும், தி.மு.க., கணக்கில் சேர்த்து விட முடியும் என, கருதுகிறது.பயம்தி.மு.க.,வின் இத்திட்டத்திற்கு, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு குரல் எழுப்பத் துவங்கி விட்டன.

தி.மு.க.,வின் சின்னத்தில் போட்டியிட்டு வென்றால், அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களால், சட்டசபையில் சுயமாக செயல்பட முடியாது. எங்கள் கட்சி எம்.எல்.ஏ., என்று, சொந்தம் கொண்டாடவும் முடியாது.அதனால், சுய அடையாளத்தை இழந்து விடுவோம் என்ற பயம், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு உள்ளது. எனவே, ஆரம்ப நிலையிலேயே, தி.மு.க.,வின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் துவங்கி விட்டனர். சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ம.தி.மு.க, பொதுச்செயலர் வைகோ, நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின், முதல்வராக வருவார். அதில், கடுகளவும் சந்தேகம் இல்லை. அதற்கு, ம.தி.மு.க., துணை நிற்கும். அதே நேரத்தில், வரும் சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., தனிச் சின்னத்தில், தனித் தன்மையுடன் போட்டியிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.உ.பி., மாநிலம், ஹத்ராஸ் படுகொலை சம்பவத்தை கண்டித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற பின், அக்கட்சி பொதுச்செயலர் அபுபக்கர் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:எங்களுடைய கட்சி, தேசிய கட்சி. எங்கள் கட்சிக்கு என, தனிச் சின்னமாக, ‘ஏணி’ உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில், கடையநல்லுாரில், நான் ஏணி சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளேன். லோக்சபா தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி, ஏணி சின்னத்தில் போட்டியிட்டு, எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.

எனவே, சட்டசபை தேர்தலில், ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.இவ்வாறு, அவர் கூறினார். அதிர்ச்சிஏற்கனவே, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ‘எங்கள் கட்சி அடையாளத்தை இழக்க விரும்பவில்லை; அடிமையாகவும் இருக்க விரும்பவில்லை. நாங்களும் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்’ என, அறிவித்துள்ளார். மூன்று கட்சிகளின் தொடர் அறிவிப்பு, தி.மு.க., மேலிடத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கூட்டணியில் சலசலப்பையும் உருவாக்கி உள்ளது. ஏற்கனவே, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலையீடு, உதயநிதி வட்டாரத்தின் ஆதிக்கம் ஆகியவற்றால், தி.மு.க.,வில் உட்கட்சி பிரச்னைகள் வெடித்துள்ளன. மாவட்ட செயலர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலைமையில், கூட்டணி கட்சிகளும் எதிர்ப்புக் கொடி பிடிப்பதால், ஸ்டாலின் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக, அறிவாலய வட்டாரம் தெரிவிக்கிறது.இது குறித்து, அறிவாலய வட்டாரம் கூறியதாவது:சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு, ௩௦ தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்து, அக்கட்சிக்கு, கூட்டணியில் இரண்டாவது இடம் அளிக்க, தி.மு.க., விரும்புகிறது.

காங்கிரசுக்கு தரப்படும் முக்கியத்துவம், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தரப்படுவதில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, கொ.ம.தே.க., தலைவர் ஈஸ்வரன், சமீபத்தில், அ.தி.மு.க., முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இ.பி.எஸ்.,சுக்கு வாழ்த்து தெரிவித்தார். எனவே, தி.மு.க., கூட்டணியில், ஈஸ்வரனின் கொங்கு கட்சி நீடிக்குமா என்ற, சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தலுக்கு பின், தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், தொங்கு சட்டசபை உருவாகும். அப்போது, சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,கள் ஆதரவு தான், ஆட்சி அமைப்பதில், முக்கிய பங்கு வகிக்கும்.தனிச் சின்னத்தில் போட்டியிடும் கட்சிகள், தாங்கள் ஆதரிக்கும் கட்சியிடம், அமைச்சரவையில் பங்கு உள்ளிட்ட ஆதாயத்தை பெற முடியும்.

எனவே தான், தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என, போர்க்கொடி துாக்கி உள்ளன.இவ்வாறு, அந்த வட்டாரம் கூறியது.எம்.எல்.ஏ., ‘சீட்’ ‘ஐபேக்’ பேரம்?சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் வெற்றிக்கான வியூகம் வகுக்கும் பணிகளை, ‘ஐபேக்’ நிறுவனத்திடம், தி.மு.க., ஒப்படைத்துள்ளது. ஐபேக் நிறுவனம், தமிழகம் முழுதும் ஊழியர்களை நியமித்து, தி.மு.க., வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிக்கு தேவையான திட்டங்கள் குறித்து, தகவல்களை சேகரித்து வருகிறது.வெற்றி வாய்ப்பு, பணபலம், ஜாதி பலம், தொண்டர்கள், மக்கள் செல்வாக்கு, கட்சிக்கு ஆற்றிய பணிகள் குறித்த பல்வேறு விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.வேட்பாளர்கள் தேர்வு விவகாரத்தில், எம்.எல்.ஏ., சீட்டுக்கு பரிந்துரைக்க, கட்சியினரிடம் பேரம் பேசிய புகார், தி.மு.க., மேலிடத்தை, அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கொங்கு மண்டலத்தை சேர்ந்த, தி.மு.க., ஒன்றிய செயலர் ஒருவருக்கு, சமீபத்தில், ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசியவர், தன்னை, ‘ஐபேக் டீமை’ சேர்ந்தவர் என, அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த ஒன்றிய செயலரும், ‘என்ன விவரம்’ என, கேட்டுள்ளார்.

அதற்கு அவர், ‘நீங்கள் எம்.எல்.ஏ., சீட் வாங்க முயற்சி செய்கிறீர்கள். எங்களின் சர்வே அறிக்கையில், உங்கள் பெயர், நான்காவது இடத்தில் இருக்கிறது. ‘கட்சி தலைமைக்கு, மூன்று பெயர்கள் உள்ள பட்டியலை தான் அனுப்பி வைப்போம். அதிலிருந்து ஒருவரை தேர்வு செய்வர்.

உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமானால்…’ எனக் கூறி, பேரம் பேசியுள்ளார்.உஷாரான ஒன்றிய செயலர், பேரம் பேசிய விவகாரத்தை, மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார். அவர் கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தினார். கட்சித் தலைமை அதிர்ச்சி அடைந்தது. பின், ‘ஒன்றிய செயலரிடம் பேரம் பேசிய நபர் யார் என்பதை கண்டுபிடியுங்கள்’ என, ஐபேக் தரப்பினருக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், ‘அந்த தொலைபேசி எண் உடைய யாரும், எங்கள் குழுவில் இல்லை’ என, ஐபேக் எடுத்த எடுப்பிலேயே மறுத்துள்ளதால், தி.மு.க., மேலிடத்திற்கு சந்தேகம் உருவாகி உள்ளது. இருப்பினும், பேரம் பேசிய தகவல், உண்மையா பொய்யா என, ரகசிய விசாரணை நடக்கிறது.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.

%d bloggers like this: