மேன் ஆஃப் தி சீரிஸ்’ எடப்பாடி இல்லை பன்னீர்தான்! ரகசிய பின்னணி

அ.தி.மு.க சார்பில் அக்டோபர் 7-ம் தேதி நடந்த கூட்டத்தில் `மேன் ஆஃப் தி மேட்சா’க எடப்பாடி இருந்தார். ஆனால், அ.தி.மு.க-வுக்குள் அடுத்தடுத்து நடக்கப்போகும் களேபரங்களுக்குப் பிறகு `மேன் ஆஃப் தி சீரீஸா’க பன்னீரே இருக்கப்போகிறார்.

“அ.தி.மு.க வில் கடந்த ஒரு வாரமாக நீடித்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால், 20-20 ஆட்டத்தின் முதல் பாதி மட்டுமே இப்போது முடிந்திருக்கிறது. இனி அடுத்த பாதி ஆட்டம் முடிந்த பிறகே வெற்றி யாருக்கு என்பது தெரியும்” என்று திகிலைக் கிளப்புகிறார்கள் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் சிலர்.

`அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியில் துணை முதல்வர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றிவருகிறார்கள். இந்தநிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் போட்டியிட விரும்பினார். இதற்கு முதலில் பன்னீர் தரப்பு ஒப்புக்கொள்ளவில்லை.“சசிகலா முதல்வராகப் பதவியேற்க முடியாமல் போனதாலேயே அந்த நேரத்தில் எடப்பாடியை முதல்வராக்கினார். அதற்காக அவரே அடுத்தமுறையும் முதல்வராகப் போட்டியிட ஒப்புக்கொள்ள முடியாது’’ என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பிரச்னையைக் கிளப்பினார்கள்.

அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு
அ.தி.மு.க முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு

பன்னீர்செல்வம் “2017-ம் ஆண்டு இரண்டு அணிகள் இணைந்தபோது கட்சி நிர்வாகத்தைக் கண்காணிக்க வழிகாட்டுதல்குழு அமைக்கப்படும் என்று சொன்னீர்கள். இதுவரை அந்தக் குழு அமைக்கப்படவில்லை. அதை முதலில் அமைத்துவிட்டு பிறகு முதல்வர் வேட்பாளர் பற்றிப் பேசலாம்” என்று கொந்தளித்தார். அதன் பிறகு கடந்த 28-ம் தேதி நடந்த அ.தி.மு.க-வின் செயற்குழுவில் இந்த விவகாரம் பெரிதாக வெடித்தது. பன்னீர்- பழனிசாமி இடையே வார்த்தைப்போர் முற்றியதால், `7-ம் தேதி அன்று முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும்’ என்று அ.தி.மு.க தலைமை அறிவித்தது.

பன்னீரை எளிதில் வழிக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று எடப்பாடி தரப்பு ஆரம்பத்தில் எண்ணியது. ஆனால், எடப்பாடி எதிர்பார்த்ததுபோல் பன்னீர் எளிதாகப் பணிந்துவிடவில்லை. 6-ம் தேதி நள்ளிரவு வரை முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை நியமிக்க ஒப்புக்கொள்ளவில்லை. முதலில் தனது கோரிக்கையான வழிகாட்டுதல்குழுவை அமைத்துவிட்டு அதற்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பை வைத்துக்கொள்ளுங்கள் என்று பன்னீர் பிடிவாதம் காட்டியதால் வேறு வழியின்றி 11 பேர் கொண்ட வழிகாட்டுதல்குழுவை அமைக்க ஒப்புக்கொண்டது எடப்பாடி தரப்பு.

மறு தினமே கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலில் பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல்குழுவை முதல்வர் எடப்பாடி அறிவித்தார். அதன் பிறகே 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவித்தார் பன்னீர்செல்வம். எடப்பாடியின் ஆதரவாளர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டதும் பட்டாசு வெடித்துக் கொண்டாடினார்கள். மீண்டும் எடப்பாடி தலைமையில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கப்போகிறது என்று உற்சாகத்துடன் கோஷமிட்டனர். பன்னீர் ஆதரவாளர்களோ அமைதியாக அனைத்தையும் வேடிக்கை மட்டுமே பார்த்துவந்தனர்.

“நான்கு ஆண்டுகளாக ஆட்சியை ராஜதந்திரமாக நகர்த்திய எடப்பாடி, அடுத்த முறையும் தன்னை முதல்வர் வேட்பாளராக பன்னீரைவைத்தே அறிவிக்கவைத்துவிட்டார். நாற்பது ஆண்டுக்காலம் தான் கற்ற அரசியல் வித்தைகளைக் களத்தில் இறக்கி, தான் ஓர் அரசியல் சாணக்கியன் என்பதைத் தொடர்ந்து நிரூபித்துவருகிறார் எங்கள் அண்ணன் எடப்பாடி” என அவர் ஆதரவாளர்கள் சிலாகிக்கிறார்கள். மற்றொருபுறம் பன்னீர் தரப்பிலோ “அவர் ஆரம்பத்திலிருந்தே அமைதியாக இருந்துவிட்டார். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதால் அவரை நம்பிவந்த ஆதரவாளர்களைக்கூட அவரது கையெழுத்தைவைத்தே காலி செய்தார் எடப்பாடி. இதனால் பன்னீரை நம்பிச் செல்வதற்குப் பலரும் பயந்தனர் என்பதே உண்மை. ஆனாலும். தன்னை நம்பிக் கடைசிவரை இருந்த மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்களுக்கு வழிகாட்டுதல்குழுவிலாவது இப்போது பொறுப்பு வாங்கிக்கொடுத்திருக்கிறாரே…” என்று பெருமிதப்பட்டனர்.

இந்த முறையும் எடப்பாடி கையே ஓங்கிவிட்டது என்று எடப்பாடி ஆதரவாளர்கள் முழக்கமிட்டுவரும் நேரத்தில்தான் “பன்னீரின் சாதுர்யம் இந்த முறை தோற்றுப்போகவில்லை. 7-ம் தேதியின் கதாநாயகனாக வேண்டுமானால் எடப்பாடி இருக்கலாம். நிரந்தர கதாநாயகனாக இருக்கப்போவது பன்னீரே…” என்று புதுக்கணக்கைச் சொல்கிறார்கள் அ.தி.மு.க-வின் சீனியர்கள்

“அ.தி.மு.க-வில் வழிகாட்டுதல்குழுவை அமைக்க எடப்பாடி தரப்பு ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டுவந்தது. அந்தக் குழுவில் ஐந்து பேர் பன்னீர் ஆதரவாளர்கள், ஆறு பேர் எடப்பாடி ஆதரவாளர்கள் என்று பதினோரு பேர் கொண்ட குழு அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், அது பல காலமாக கிடப்பில் போடப்பட்டது. அதற்குக் காரணம், எடப்பாடி இப்படிக் குழு அமைவதை ஆரம்பம் முதலே விரும்பவில்லை. ஆனால், முதல்வர் வேட்பாளர் சரச்சை எழுந்த பிறகுதான் எடப்பாடி தரப்பு வழிகாட்டுதல்குழு அமைய அரை மனதுடன் ஒப்புதல் தந்தது. அதற்கு முன்பாக “வழிகாட்டுதல்குழு அமைக்க முயன்றால் சாதிக்கு ஒருவர் பதவி வேண்டும் என்று கையைத் துாக்குவார்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது, தேவையில்லாத சிக்கல்கள் வரும்’’ என்று பல காரணங்களை அடுக்கினார் எடப்பாடி. ஆனால், வழிகாட்டுதல்குழு அமைத்தால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றிப் பேச முடியும் என்று பன்னீர் கறார் காட்டியதால், வழிகாட்டுதல்குழு அமைக்க எடப்பாடி தரப்பில் ஒருவழியாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

வழிகாட்டுதல்குழுவை அமைத்தே ஆக வேண்டும் என பன்னீர் பிடிவாதம் பிடிக்கக் காரணமே, ஆட்சியில் உள்ளதுபோல எடப்பாடியின் ஆதிக்கம் இனி கட்சிக்குள்ளும் இருந்துவிடக் கூடாது என்கிற கணக்கில்தான். அதனால்தான் “வழிகாட்டுதல்குழுவே கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்யும். அந்தக் குழுவின் ஒப்புதல் பெற்றே கட்சியின் பதவி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்” என பன்னீர் நெருக்கடி கொடுத்தார். எடப்பாடி தரப்பில் வழிகாட்டுதல்குழுவைப் பெயருக்கு அமைக்கவே முதலில் திட்டமிட்டனர். ஆனால் “நான் சொன்ன அனைத்து ஷரத்துக்களும் வழிகாட்டுதல்குழுவில் இருந்தால் மட்டுமே அதற்கு நான் ஒப்புக்கொள்வேன்” என்று பன்னீர் சொன்ன பிறகு, அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை மட்டுமே எடப்பாடிக்கு இருந்தது. அதன்படியே, 7-ம் தேதியன்று பதினோரு பேர் கொண்ட வழிகாட்டுதல்குழு எடப்பாடியினாலேயே அறிவிக்கப்பட்டது

பன்னீர் தரப்பில் மனோஜ் பாண்டியன், மோகன், ஜே.சி.டி.பிரபாகர், மாணிக்கம், கோபால கிருஷ்ணன் ஆகிய ஐவரும், எடப்பாடி தரப்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம், எடப்பாடிக்கு ஆதரவாகக் கட்சியின் சீனியர்களான செங்கோட்டையன், அன்வர் ராஜா, நத்தம் விசுவநாதன், பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதுதான் எடப்பாடிக்கு முதல் நெருக்கடி.

அடுத்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை, பன்னீர் ஒப்புக்கொள்ளக் காரணமே வரும் சட்டமன்றத் தேர்தல் செலவீனங்களை எடப்பாடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியை அவர் கொடுத்ததால்தான். இதனால் பன்னீர் தரப்புக்கு கரன்சி சுமை நீங்கியிருக்கிறது. ஆனால், தேர்தல் செலவை எடப்பாடி தலையில் சுமத்திய பன்னீர் தரப்பு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்வை வழிகாட்டுதல்குழுவே முடிவு செய்யும் என்று எடப்பாடியிடம் ஒப்புதல் பெற்றிருக்கிறது. அதிலும் பன்னீர் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் சீட்டுகளை சரி அளவில் பிரித்துக் கொடுக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டிருக்கின்றன.

அ.தி.மு.க செயற்குழு

பன்னீர் தரப்பில் வழிகாட்டுதல்குழுவில் நியமிக்கப்பட்ட ஐவருமே பன்னீரின் தீவிர ஆதரவாளர்கள். ஆனால், எடப்பாடி தரப்பில் நியமிக்கப்பட்ட ஆறு பேரில் தங்கமணி, வேலுமணி மட்டுமே எடப்பாடி சொன்னால் கேட்டுக்கொள்பவர்கள். சி.வி.சண்முகம், ஜெயக்குமார், ஆர்.காமராஜ் உள்ளிட்டவர்களை எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்களாக அடையாளப்படுத்த முடியாது. இவர்கள் பல நேரங்களில் எடப்பாடிக்கு எதிராகவே கருத்துகளை முன்வைத்தவர்கள். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் தேர்வு முதல் கூட்டணி விவகாரம் வரை இவர்கள் எடப்பாடியோடு முழுமையாக ஒத்துப்போவார்களா என்பதே மில்லியன் டாலர் கேள்வி.

இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பதாலேயே எடப்பாடிக்குப் பின்னால் இவர்கள் நிற்கிறார்கள். நாளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் சி.வி.சண்முகம் தன்னை வன்னியர்களின் பிரதிநிதியாகவே கட்சிக்குள் காட்டிக்கொள்வார். ஆர்.காமராஜ் சசிகலாவின் தம்பி திவாகரனால் அடையாளம்காட்டப்பட்டவர். நாளை சசிகலா வெளியே வந்து அ.தி.மு.க-வுக்குள் நுழைய நினைத்தால், ஆர்.காமராஜ் அவர் பின்னால் செல்லவும் தயங்க மாட்டார். இப்படி எடப்பாடியால் வழிகாட்டுதல்குழுப் பதவியில் அமர்த்தப்பட்டவர்களே எதிர்காலத்தில் எடப்பாடிக்கு எதிராகக் களத்தில் நிற்கும் நிலை உருவாகலாம். குறிப்பாக, `கொங்கு மண்டலத்தில் வேலுமணி, தங்கமணியைத் தவிர வேறு நபர்கள் இல்லையா…’ என்றும், `மகளிர் அணியினரை மறந்துவிட்டார் எடப்பாடி…’ என்றும், `உங்களுக்கு இவ்வளவு நாள்கள் அனுகூலமாக இருந்த எங்களை மறந்துவிட்டீர்கள்…’ என்று பட்டியலின நிர்வாகிகளும் எடப்பாடிக்கு எதிராகக் களமாட ஆயத்தமாகியிருக்கிறார்கள்.

ஆனால், பன்னீர் தரப்பிலுள்ள ஐவருமே பன்னீரின் பின்னால் இருந்து அணி மாற வாய்ப்பில்லை. அதற்குக் காரணம் இத்தனை காலம் பவரும் இல்லாமல், பதவியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டுக் கிடந்தவர்களைத்தான் கட்சியின் அதிகாரமிம்க்க பதவியில் அமர்த்தி அழகுபார்த்திருக்கிறார் பன்னீர். ஏற்கெனவே தான் செய்த தவறுகளிலிருந்து பன்னீர் கற்றுக்கொண்ட பாடத்தால் நின்று நிதானமாக தனது வியூகத்தை வகுத்து, தனக்கு பக்கபலமான ஓர் அணியைக் வழிகாட்டுதல்குழுவில் கட்டமைத்திருக்கிறார் பன்னீர்.

அதேபோல், `அடுத்த முறை அ.தி.மு.க ஆட்சிக்கு வருமா’ என்ற சந்தேகம் அ.தி.மு.க-வில் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஒருவேளை அ.தி.மு.க தேர்தலில் தோல்வியைத் தழுவினால் அதன் பிறகு நிர்வாகிகளுக்குக் கட்சி மட்டுமே பிரதானமான ஒன்றாக மாறிவிடும். அப்போது கட்சியின் வழிகாட்டுல்குழுவே அதிகாரம்மிக்க அமைப்பாக இருக்கும் என்று கணக்கு போடுகிறார் பன்னீர்.

அந்தநேரமே, தனது அரசியல் ஆட்டத்தை ஆடிப்பார்க்கும் நேரம் என்று திட்டுமிடுகிறார் பன்னீர். அப்படி ஒரு நிலை அ.தி.மு.க-வுக்கு வந்தால், தன்னுடைய ஆதரவாளர்கள் ஐவரோடு, அப்போது எடப்பாடிக்கு எதிராகக் களத்தில் நிற்கும் வழிகாட்டுதல்குழு உறுப்பினர்களையும் தன் பின்னால் கொண்டு வந்து வழிகாட்டுகுழுவையே தன்னுடைய ஆதரவுக் குழுவாக மாற்றிவிடலாம் எனக் கணக்கு போடுகிறார் பன்னீர். அந்தநிலை வந்தால் முழுமையாகக் கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்பதே பன்னீரின் திட்டம்.

மேலும் தற்போது முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோது, பன்னீர் தரப்பில்“இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியாகவே மாற்றிவிடலாம்” என ஒரு யோசனை முன்வைக்கப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பில் அதை நிராகரித்துவிட்டனர். தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி முதல்வராகாமல் போகும்பட்சத்தில், வழிகாட்டுதல்குழுவில் ஒத்துழைப்போடு எடப்பாடி வசமுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் பதவியைத் துணை ஒருங்கிணைப்பாளர் பதவியாக மாற்றம் செய்யவும் பன்னீர் முடிவெடுத்திருக்கிறார்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

`அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக, தான் ஒருவர் மட்டுமே அமர்ந்துவிட்டு, தனக்குத் துணையாக வழிகாட்டுதல்குழுவை வைத்துக்கொண்டு கட்சிக்குள் அதிகாரம் செலுத்தலாம். அடுத்த ஐந்தாண்டுகள் அ.தி.மு.க எதிர்க்கட்சியாக மாறினால்கூட பரவாயில்லை’ என்ற எண்ணமே பன்னீரின் மனதில் இருக்கிறது. பன்னீர் பம்மியதன் பின்னணியில் இத்தனை கணக்குகள் இருக்கின்றன’’ என்று சொல்லி மிரளவைக்கிறார்கள்.

உண்மையில், அக்டோபர் 7-ம் தேதி நடந்த அ.தி.மு.க கூட்டத்தில் `மேன் ஆஃப் தி மேட்சாக’ எடப்பாடி இருந்தார். ஆனால், அ.தி.மு.க-வில் அடுத்தடுத்த களேபரங்களைப் பார்க்கும்போது `மேன் ஆஃப் தி சீரீஸ்’ பட்டத்தைக் கைப்பற்றும் பலே திட்டத்தில் பன்னீர் இருக்கிறார் என்றே தெரிகிறது.

%d bloggers like this: