200 தொகுதிகள் ப்ளஸ், உதயசூரியன் சின்னம்-வியூகங்கள் லீக்கால் தடுமாறும் திமுக-ஸ்டாலின் அறிக்கை பின்னணி

சட்டசபை தேர்தலில் திமுக வகுத்திருக்கும் வியூகங்கள் உடனுக்குடன் வெளியாகிவிடுவதால்தான் தொண்டர்களையும் கூட்டணி கட்சிகளையும் சமாதானப்படுத்தும் வகையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட நேர்ந்தது என்கின்றன அண்ணா அறிவாலய வட்டாரங்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்தான்ன் 200 தொகுதிகளுக்கு அதிகமாக திமுக போட்டியிட இருக்கிறது என்பது அனுமானம் என சுட்டிக்காட்டியிருந்தார். அத்துடன் திமுக தலைமையில் வலிமையான கூட்டணி அமைந்திருக்கிறது; இதை யாரும் ஆட்டவும் அசைக்கவும் முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

திமுகவின் 2 வியூகங்கள்

ஸ்டாலினின் இந்த அறிக்கையின் பின்னணி குறித்து அறிவாலய வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். அப்போது, திமுகவின் நீண்டகால திட்டமே 200-க்கும் அதிகமான தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்பதுதான். இதற்காக கூட்டணி கட்சிகளுக்கு குறைவான தொகுதி ஒதுக்கீடு, ஆகக் கூடுமானவரை கூட்டணி கட்சிகளை தனிச் சின்னத்தில் நிற்க வைக்காமல் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைப்பது என்பதற்கான காய்கள் நகர்த்தப்பட்டன.

சிக்கல் இல்லாத தொகுதி பங்கீடு?

திமுகவின் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் வியூகத்தைக் கூட ஓரளவுக்கு கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொண்டிருக்கின்றன என்றே கூறலாம். ஏனெனில் கடந்த காலங்களில் 80 தொகுதிகளில் தொடங்கி 60 தொகுதிகளைக் கேட்டுப் பெறுவது காங்கிரஸின் வாடிக்கை. ஆனால் இம்முறை 40 தொகுதிகளில் தொடங்கி 15 முதல் 20 தொகுதிகள் கிடைத்தாலே போதும் என்கிற மனநிலைக்கு காங்கிரஸும் வந்துவிட்டது. அண்மையில் சென்னை வந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவையும் இந்த விவகாரத்தில் சமாதானப்படுத்திவிட்டனர்.

மதிமுகவில் குழப்பம்

இதேபோல் மதிமுக, விசிக, இடதுசாரிகளும் திமுகவின் நிலைப்பாட்டுக்கு இசைவும் தெரிவித்திருக்கின்றன. இருந்தபோதும் கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்க வேண்டும் என்கிற வியூகத்தால் கட்சிகளின் இருப்புக்கே உலை வைப்பதாகிவிடும் என்பது அந்த கட்சிகளின் அச்சம். மதிமுகவை பொறுத்தவரையில் இனி எல்லாமே உதயசூரியன் சின்னம் எனில் தனிக்கட்சி எதுக்கு? பேசாமல் திமுகவிலேயே இணைந்துவிடலாம் என்பது சீனியர்களின் எண்ணம். ஆனால் ஒருகாலத்திலும் மதிமுக குறிப்பாக வைகோவை திமுகவில் இணைத்துக் கொள்ளவே கூடாது என்பதில் திமுக தலைமையின் குடும்பம் உறுதியாக இருக்கிறது.

அதிருப்தியில் சீனியர் இடதுசாரிகள்

இது தொடர்பாக மதிமுகவில் விவாதங்கள் வெடித்த நிலையில்தான் வேறுவழியே இல்லாமல் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என பதற்ற அறிக்கையை வைகோ வெளியிட வேண்டியதாயிற்று. இதேநிலைமைதான் விசிகவுக்கும்.. இடதுசாரிகளின் அடையாளங்களாக இருப்பவையே அந்த கட்சிகளின் தேர்தல் சின்னங்கள். இப்போது அதனையும் பறிகொடுத்தா தேர்தல் வெற்றியைப் பெறுவது? என்பது காம்ரேடுகளின் கசப்பான உணர்வு. அதுவும் திமுக கூட்டணியே கூடாது என நினைக்கும் இடதுசாரி சீனியர் காம்ரேடுகள் இதனை ஊதிப் பெரிதாக்கி கூட்டணியையே உடைக்க முடியுமா? எனவும் ஆராய்ந்து வருகின்றனர்.

ஸ்டாலின் அறிக்கை

இப்படி கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றும் திமுக தலைமையில் நீடிப்பதா? இல்லையா? என்கிற எல்லைக்குப் போய் விவாதிக்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இதனால்தான் தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து மு.க.ஸ்டாலின் வேறுவழியே இல்லாமல் வெளிப்படையாகவே மிக நீண்ட அறிக்கையை வெளியிட நேர்ந்ததாம். கூட்டணி கட்சிகளை சமாதானப்படுத்தி தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தையே ஸ்டாலின் இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: