234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. பாஜகவின் அதிரடி திட்டம்.. அவசர ஆலோசனையில் முடிவு?

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை தனித்தே சந்திக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதை அக்கட்சியின் தமிழக மேற்பார்வையாளரான கர்நாடகத்தின் சிடி ரவி சூசகமாக உணர்த்தியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தேசிய கட்சிகளின் ஆதிக்கம் முடிந்து போய் பல காலமாகி விட்டது. அதற்குப் பிறகு

காங்கிரஸும் சரி, பாஜகவும் சரி என்னென்னவோ செய்து பார்த்தும் கூட மேலெழுந்து வர முடியவில்லை. ஆதிக்கத்தை மீண்டும் பெறும் முயற்சிகளை காங்கிரஸ் கைவிட்டு பல காலமாகி விட்டது.

ஆனால் பாஜக அப்படி இல்லை. தமிழகத்தில்ஆட்சியைப் பிடித்து புதிய அதிர்ச்சியைத் தரும் முயற்சிகளில் அது சில ஆண்டுகளாகவே தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக என்னென்னவோ செய்து பார்க்கிறது.

விஐபிக்கள் வருகை

முதல் கட்டமாக கட்சியில் பிரபலமானவர்கள் பலரை சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் சேர்ந்த குஷ்பு அதற்கு முக்கிய உதாரணம்.. இன்னும் பலருக்கும் வலை வீசியுள்ளனர். பல்வேறு கட்சிப் பிரபலங்கள், திரைத்துறைப் பிரபலங்கள், பிற துறைப் பிரபலங்கள் என யார் கிடைத்தாலும் உள்ளே இழுக்கிறார்கள். பலமான மீனுக்காக (ரஜினிகாந்த்) அவர்கள் போட்டு வைத்த வலை அப்படியேதான் உள்ளது. ஆனால் அவரைத் தவிர மற்றவர்கள்தான் அதிகம் சிக்கி வருகிறார்கள்.

தனித்தா கூட்டணியா

இந்த நிலையில் இந்தத் தேர்தலை எப்படி சந்திப்பது என்ற திட்டமிடல்களில் தற்போது பாஜக தீவிரமாகியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தித்தது பாஜக. ரிசல்ட் படு தோல்வி தான். ஆனாலும் மனம் தளராமல் கூட்டணியை தொடர்ந்து வருகிறது. இருப்பினும் வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருக்குமா என்று தெரியவில்லை. காரணம், பாஜகவுடன் கை கோர்த்து மக்களை சந்திக்க அதிமுக தயாராக இல்லை.

உதறி விடும் அதிமுக

அதிமுக இப்படி உதறி விடுவதால் அக்கட்சியிடம் கெஞ்சிக் கொண்டிருக்க பாஜகவும் விரும்பவில்லை. தனித்து நின்று போட்டியிட்டால் கூட எளிதாக 60 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று மாநிலத் தலைவர் எல். முருகன் ஏற்கனவே கூறியுள்ளார். எந்த அடிப்படையில் அவர் அப்படிக் கூறினார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் மொத்தமாகவே தனித்துப் போட்டியிட்டால் என்ன என்ற எண்ணத்திற்கு பாஜக வந்திருப்பதாக தெரிகிறது.

சென்னையில் ஆலோசனை

இதுதொடர்பாக நேற்று சென்னையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. சிடி ரவி தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், முன்னாள் தலைவர் இல. கணேசன், எச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், சிபி ராதாகிருஷ்ணன், திமுகவிலிருந்து விலகி வந்த விபி துரைசாமி, ஐபிஎஸ் பதவியை உதறி வந்த அண்ணாமலை, கேசவ விநாயகம், நாகராஜன், கேடி ராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

என்ன பண்ணலாம்

இந்தக் கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவது எப்படி, கூட்டணி எப்படி அமைக்கலாம், கூட்டணி தேவையா இல்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதில் விவாதிக்கப்பட்டது குறித்து பாஜக தரப்பில் வெளிப்படையாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் தனித்துப் போட்டியிடுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கூட்டத்தில் பேசிய பல தலைவர்களும் தனித்துப் போட்டியிடலாம் என்று வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

தெம்பாவே இருக்கோம்

இதை உறுதிப்படுத்தும் வகையில் இக்கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சிடி ரவி கூறுகையில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலிமையுடன் உள்ளது என்று கூறியிருந்தார். இதை வைத்துப் பார்க்கும்போது பேசாமல் தனித்தே போட்டியிட்டு விடலாமா என்ற எண்ணத்திற்கு பாஜக வந்து விட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிமுக கூட்டணியில் அவர்கள் தூக்கி எறியும் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு குட்டிக் கட்சியாக போட்டியிடுவதற்கு பதில் அத்தனை தொகுதிகளிலும் நாமே போட்டியிட்டு ராஜாவாக கம்பீரமாக வலம் வரலாமே என்று பாஜக நினைப்பதாக சொல்லப்படுகிறது.

அதிமுக தேவையில்லை

அதை விட முக்கியமாக தனது முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவசர அவசரமாக அதிமுக அறிவித்து விட்டது. ஏன் கமல்ஹாசன் கட்சி கூட அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தகுதியான தலைவர்கள் பலரை வைத்துக் கொண்டு அடுத்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டு அவர்களிடம் அண்டிக் கிடப்பது ரொம்பக் கேவலம் என்ற எண்ணத்தை பல தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனராம். எனவே நாமும் தனித்துப் போட்டியிடுவதே சரியானது என்பது அவர்களது எண்ணம்

விரைவில் அதிரடி முடிவு

மொத்தத்தில் விரைவில் இதுதொடர்பாக ஒரு சண்டை வெடித்து அதன் வெளிப்பாடாக அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேறும் என்று சொல்கிறார்கள். அப்போது தனித்துப் போட்டி குறித்த அறிவிப்பும் வெளியாகலாம். எனவே பாஜக மேலிடம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை அறிய அந்தக் கட்சியினர் போலவே மற்ற கட்சியினரும் கூட ஆர்வமாக காத்துள்ளனர். பாஜகவின் முடிவை வைத்தே அடுத்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்புஅதிகம் என்பதையும் ஓரளவுக்கு ஊகிக்க முடியும் என்பதும் முக்கியமானது.

%d bloggers like this: