கொரோனா காலத்தில் அதிகம் கவனம் பெற்ற. நிலவேம்பு!

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காலத்தில் தமிழகத்தில் அதிகம் எதிரொலித்த பெயர்கள், கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர். என்பனதான்.

சித்த மருத்துவத்தில் சிறப்பாகச் சொல்லப்படும் நிலவேம்புக் குடிநீர், விஷக் காய்ச்சலுக்காக அதிகம் பயன்படுகிறது. குறைந்தது 3 முதல் 5 நாட்கள் இதனை இரு வேளை கஷாயமாக்கி அருந்தினால் போதும் என்று அடித்துச் சொல்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

இதனை ஒட்டி, தமிழகத்தில் பரவலாக தன்னார்வர்கள், சமூக தொண்டு இயக்கத்தினர் என பலரும் நிலவேம்பு குடிநீர் தயாரித்து, மக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

நிலவேம்பு குடிநீர் மற்றும் அதிமதுரம் டேப்லெட் மூன்று வேளை எடுத்துக் கொண்டால் போதும் காய்ச்சல் ஓடிவிடும் என்றார்கள் சித்த மருத்துவர்கள். அரசு சார், இம்காப்ஸ் நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும் நிலவேம்பு குடிநீர் மற்றும் அதிமதுரம் மாத்திரைகள் மூன்று வேளை சாப்பிடுங்கள்; வீட்டில் யாருக்காவது கொரோனா அறிகுறிகள் தெரியவந்தாலும் இதை மூன்று நாட்கள் முன்னெச்சரிக்கையாக சாப்பிடலாம் அதிமதுரம் anti-viral தன்மை கொண்டது என்று அறிவுரை தந்தார்கள் மருத்துவர்கள்.

இந்த நிலவேம்பு எத்தகையது, என்ன நன்மை இதனால். தெரிந்து கொள்வோம்.

நிலவேம்பு முழுத் தாவரமும் கசப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. இதனால், நீர்க்கோவை, மயக்கம் போன்றவை குணமாகும்; புத்தி தெளிவு உண்டாகும்; மலமிளக்கும்; தாதுக்களைப் பலப்படுத்தும்.

நிலவேம்பு இலைகள் காய்ச்சல் மற்றும் முறைக் காய்ச்சலைக் குறைக்கும்; பசி உண்டாக்கும்; உடல் தாதுக்களைப் பலப்படுத்தும். ஆரோக்கியம் தரும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும்.

நிலவேம்பு நிமிர்ந்த வளரியல் கொண்ட செடி. 30 செமீ முதல் ஒரு மீட்டர் வரை வளரக் கூடியது. நிலவேம்பு தண்டுகள் நாற்கோணப் பட்டையானவை. நிலவேம்பு இலைகள் நீள் முட்டை வடிவமானவை.

நிலவேம்பு மலர்கள், கணுக்களிலும் நுனியிலும் குறுக்கு மறுக்காக அமைந்தவை. பூக்கள் வெண்மையானவை. நாக்கு போன்று நீண்டு ஊதா நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.

நிலவேம்பு காய்கள் வெடிக்கும் தன்மையானவை. விதைகள் சிறியவை; மஞ்சள் நிறமானவை. நிலவேம்பு பெரியாநங்கை, சிறியாநங்கை, மிளகாய் நங்கை, குருந்து, கொடிக்குருந்து போன்ற மாற்றுப் பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

நிலவேம்பு தமிழகத்தின் சமவெளிப் பகுதிகளில் பரவலாக விளைகின்றது. மருத்துவர்களில் முக்கியமாக விஷக்கடி மருத்துவம் செய்பவர்களின் வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றது. அரிதாக சில இடங்களில் பயிர் செய்யப்படுகின்றது.

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

காய்ச்சல் குணமாக நிலவேம்பு முழு தாவரத்தையும் சேகரித்து குடிநீர் செய்து 30 மிலி வீதம் காலை மாலை வேளைகளில் 3 நாள்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

முறைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த சுண்டைக் காய் அளவு நிலவேம்பு இலைப் பசையை காலை மாலை வேளைகளில் காய்ச்சல் தீரும் வரை சாப்பிட்டு வரவேண்டும்.

நிலவேம்பு வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலை மாலை வேளைகளில் தொடர்ந்து 2 வாரங்கள் வரை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி பெறலாம்.

நிலவேம்பு இலைச்சாறு அரை டம்ளர் வீதம் இரண்டு வேளைகள் மூன்று நாள்கள் குடிக்க கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும்.

5 கிராம் அளவு நிலவேம்பு இலைத் தூளைக் காலையில் உட்கொள்ள வேண்டும் அல்லது 5 பெரியா நங்கை இலைகளுடன் 10 சீரகம் சேர்த்து மென்று சாப்பிட வேண்டும். அல்லது வேரில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் இரவில் மட்டும் 3 நாள்களுக்கு சாப்பிட்டு வர வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

நிலவேம்பு முழுத் தாவரத்தையும் உலர்த்திப் பொடி செய்து பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் போது, தேவையான அளவு நீரில் குழைத்து பசையாக்கி உடலில் தேய்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளிக்க வண்டுகடி, சொறி, சிரங்கு போன்றவை குணமாகும்.

நிலவேம்பு இலையில் இருந்து கஷாயம் தயாரித்து ஒரு டம்ளர் வீதம் காலையில் மட்டும் 2 வாரத்திற்கு குடித்து வர காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கிற்குப் பின்னர் ஏற்படும் அசதி தீரும்.

அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உயர்நிலை ஆய்வுகளில் இருந்து நிலவேம்புச் செடிக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், டைபாய்டு எதிர்ப்பு சக்தியும் உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

%d bloggers like this: